×

கொடியம்பாளையத்தில் 2 ஆண்டுகளாக இயங்காத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம் தீவு கிராமம் உள்ளது. இந்த கிராமத்துக்கு தரை வழியாக செல்ல சிதம்பரம், இளந்திரைமேடு  பகுதிகள் வழியாக 25 கிலோ மீட்டர் தூரம் கடந்து செல்ல வேண்டும். மாவட்டத்திலேயே நான்கு புறமும் நீரால் சூழப்பட்ட இந்த கிராமத்தில்  1,000க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர். இங்கு வசிப்பவர்களின் பிரதான தொழில் மீன் பிடிப்பதாகும். 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட  சுனாமியால் இந்த தீவு கிராமத்தில் நிலத்தடி நீர் உப்புநீராக மாறிவிட்டது.
எனவே இந்த கிராமத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக வெளிநாட்டை சேர்ந்த ஒரு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் குடிநீர்  சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இக்கிராமத்தில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் இயங்கி  வந்தது.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள இயந்திரங்கள் பழுதுப்பட்டதால் இயங்கவில்லை.இதனால் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இக்கிராமத்தில் ஒரு சில இடங்களில் நிலத்தடியில் இருந்து குழாய் மூலம் பெறப்பட்ட  குறைந்தளவு தண்ணீரையே கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்பட்டால் கொடியம்பாளையம் கிராம மக்களின் குடிநீர் தேவை பெரும்பாலும் பூர்த்தியடையும் நிலை  உள்ளது. எனவே 2 ஆண்டுகளாக இயங்காமல் இருந்து வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் இயக்க செய்ய நடவடிக்கை எடுக்க  வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Kodiyampalayam , Drinking water treatment plant in Kodiyampalayam not functioning for 2 years: demand for action
× RELATED நோயாளிகள் எதிர்பார்ப்பு...