திருவாரூரில் கஜா புயலின்போது சேதமடைந்து, விரிசல் விழுந்த உழவர் சந்தை கட்டிடம்: சீரமைத்து தர விவசாயிகள் கோரிக்கை

திருவாரூர்: திருவாரூரில் கஜா புயலின்போது சேதமடைந்து, விரிசல் விழுந்த உழவர் சந்தை கட்டிடம் இது வரையில் சீரமைக்கப்படாமல் உள்ளது.  அதனை சீரமைத்து தர வேண்டும் என சிறு, குறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் நெல் விவசாயிகள் அல்லாத பிற விவசாயிகள் பயனடையும் வகையில் கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரையிலான  திமுக ஆட்சியின்போது உழவர் சந்தை திட்டமானது தமிழகம் முழுவதும் துவங்கப்பட்டது. அதன்படி இந்த உன்னதமான திட்டத்தில் விவசாயிகள்  பலரும் தங்களது காய்கறிகள், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நேரடியாக விற்பனை செய்து பயனடைந்து வந்தனர். இந்நிலையில் அதன்  பின்னர் ஏற்பட்ட அதிமுக ஆட்சியின்போது இந்த உழவர் சந்தைகளுக்கு மூடுவிழா காணப்பட்டது. இருப்பினும் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி,  திருத்துறைப்பூண்டி உட்பட ஒரு சில உழவர் சந்தைகள் மட்டும் தற்போது வரையில் செயல்பாட்டில் இருந்து வருகின்றன.

மேலும் திருவாரூரில்  பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஒட்டியவாறு இந்த உழவர் சந்தையானது இயங்கி வந்தநிலையில் இதில்  மொத்தமுள்ள 39 கடைகளில் ஆவின் பாலகம் ஒன்று. பூக்கடை ஒன்று என 2 கடைகள் மட்டுமே செயல்பாட்டில் இருந்து வந்தன. மேலும் இதற்கான  கட்டிடம் கட்டப்பட்டதிலிருந்து தற்போது சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில் இதில் எந்த ஒரு சீரமைப்பு பணிகளும்  மேற்கொள்ளப்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டில் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக இந்த உழவர் சந்தையில் இருந்து வரும்  கடைகளின் மேற்கூரையானது சேதமடைந்தது மட்டுமின்றி கட்டிடத்தின் பல்வேறு இடங்களில் விரிசல்களும் ஏற்பட்டுள்ளன.

எனவே இந்த கட்டிடம் மற்றும் மேற்கூரையினை சீரமைத்து தர வேண்டும் என சிறு, குறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும்  திருவாரூர் மாவட்டத்தில் தற்போது நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக கத்தரி, வெண்டை, பாவை, புடலை, பீர்கன், பரங்கி, பூசணி மற்றும் வெள்ளரி  என பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டு இந்த காய்கறிகள் அனைத்தும் தற்போது விற்பனைக்கு வந்துள்ள நிலையில் இவைகள் அனைத்தும் இந்த உழவர்  சந்தைக்குள் கொண்டு செல்லப்படாமல் நகரின் சாலையோரங்களில் தரைக்கடைகளாக அமைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதால் போக்குவரத்து  நெரிசலும் ஏற்படுகின்றன. எனவே இந்த உழவர் சந்தையினை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்த உழவர் சந்தை கட்டிடத்தை சீரமைப்பதற்கு ரூ.60 லட்சத்திற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக  வேளாண் விற்பனை குழு அலுவலர் தெரிவித்துள்ளார்.எனவே மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் இணைந்து விவசாயிகளிடம் இருந்து வரும்  அச்சத்தை போக்க வேண்டும் என்பதுடன் உழவர் சந்தை முன்பாக உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தரைக்கடைகள் ஆக்கிரமிப்பு வியாபாரிகளுக்கு மிரட்டல்

மாவட்ட தலைநகராக திருவாரூர் மாற்றப்பட்டு 23 ஆண்டுகள் கடந்த பின்னரும் தற்போது வரையில் ஷேர்ஆட்டோ என்பது இல்லாமல் இருந்து  வருகிறது. இதற்கு ஒரு சில அமைப்புகளின் முட்டுக்கட்டையே காரணம் என்று கூறப்படும் நிலையில் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு  வரும் பொதுமக்களை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது. இந்நிலையில் இந்த உழவர் சந்தைக்கு தங்களது விளை பொருட்களை கொண்டு  வரும் விவசாயிகளுக்கு எவ்வித கட்டணமும் இல்லாமல், எடைபோடும் தராசு முதல் இலவசமாக வழங்கப்படும் நிலையில் ஏன் இந்த உழவர்  சந்தைக்கு விவசாயிகளும், சிறு வியாபாரிகளும் செல்ல மறுப்பதற்கு காரணம் ஒருவித மிரட்டலும் என்று கூறப்படுகிறது.

அதன்படி உழவர்சந்தைக்குள் விவசாயிகள் சென்றுவிட்டால் தரை கடைகளுக்காக பெறப்படும் வருமானம் குறைந்து விடும் என்பதற்காக  மிரட்டப்படுவதாக விவசாயிகள் கூறி வருகின்றனர். மேலும் இந்த உழவர் சந்தை முன்பாக தனியார் மூலம் இருபக்கமும் காய்கறி மற்றும்  பழக்கடைகள் அமைக்கப்பட்டு உழவர் சந்தை இருப்பது தெரியாதது ஒரு புறம் இருக்க, இவ்வாறு உழவர் சந்தையின் வாசல் ஆக்கிரமிப்பு காரணமாக  பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லாததாலும் உழவர் சந்தை புறக்கணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>