×

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்து ஆண்டுகள் பல ஆகியும் கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பால பணி: மீண்டும் தொடங்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் ரயில்வே நிலையம் உள்ளது. இங்கு கொரோனா தொடங்கும் முன் மன்னை-சென்னை,  மன்னை-திருப்பதி, மன்னை-கோவை செம்மொழி, எர்ணாகுளம்-காரைக்கால் விரைவு ரயில்கள், மன்னை-மானாமதுரை, திருச்சி-நாகூர்,  திருச்சி-வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பயணிகள் ரயில்களும் மேலும் டெல்லி, கோவா விரைவு ரயில்களும் நீடாமங்கலம் வழியாக சென்றது.  

அது மட்டுமின்றி நீடாமங்கலம், கூத்தாநல்லூர், மன்னார்குடி பகுதியில் குறுவை மற்றும் சம்பா, தாளடி சாகுபடி செய்த நெல் மூட்டைகளை லாரிகளில்  கொண்டுவந்து நீடாமங்கலத்திலிருந்து ரயில் பெட்டிகளில் ஏற்றி பல்வேறு மாவட்டத்திற்கு அரவைக்கும் அனுப்பப்பட்டது. மேலும் நவீன அரிசி ஆலை  சுந்தரகோட்டை, மத்திய சேமிப்பு கிடங்கு பாமனி, அரவை செய்த அரிசி மூட்டைகளை லாரிகளில் நீடாமங்கலம் கொண்டு வந்து அங்கிருந்து பொது  விநியோக திட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பபட்டு வருகிறது. அது மட்டுமின்றி நாகை-மைசூர் தேசிய நெடுஞ்சாலை நீடாமங்கலம்  வழியாக செல்வதால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஆலங்குடி குரு  கோயில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு செல்லும் வாகனங்கள் நீடாமங்கலம் வழியாகத்தான் செல்ல வேண்டும். அது மட்டுமின்றி  திருச்சி, தஞ்சை, நீடாமங்கலம், நாகை மற்றும் பட்டுக்கோட்டை, மன்னார்குடி, நீடாமங்கலம், கும்பகோணம் மார்க்கம் செல்லும் பஸ்கள், வாகனங்கள்  நீடாமங்கலம் வழியாகத்தான் செல்ல வேண்டும்.

இதனால் நாள் ஒன்றுக்கு 18லிருந்து 20 தடவை ரயில்வே கேட் மூடப்படுவதால் நீடாமங்கலம் வந்து செல்லும் பஸ்கள், வாகனங்கள் பெரும்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதியுற்று வந்தனர். இதனை கருத்தில் கொண்ட தொண்டு அமைப்புகள், அரசியல் கட்சியினர்  நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் வேண்டுமென பல்வேறு ஆர்ப்பாட்டம், சாலை மறியல் செய்தனர்.இதனையறிந்த அப்போதைய முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படும் என சட்டசபையில் 110  விதியின் படி அறிவித்தார். பிறகு பாலம் கட்ட அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு நில அளவை பணிகள் நடந்தது. அந்த பணியும் தற்போது  கிடப்பில் போடப்பட்டுள்ளது. அடுத்த சட்டமன்ற தேர்தலும் அறிவிக்கப்பட்டு பிரசாரங்கள் தொடங்கப்பட்டுள்ளது. நீடாமங்கலத்தில் ஜெயலலிதா  அறிவித்த மேம்பாலம் வரும் என மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், அந்த பணி இதுவரை எந்த நிலையில் உள்ளது எனவும் ரயில்வே மேம்பாலம்  வருமா? என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags : Jayalalithaa , Former Chief Minister Jayalalithaa has announced that the work on the railway overpass, which has been on hold for many years, will be resumed. Public expectation
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...