×

அறிவித்து 10 மாதம் ஆகியும் துவங்காத பணிக்கு திடீர் பிளக்ஸ் போர்டு: ஆளுங்கட்சி விளம்பரம் தேடுவதாக மக்கள் புகார்

குஜிலியம்பாறை: பாளையம் பேரூராட்சியில் அறிவித்து 10 மாதம் ஆகியும் இன்னும் துவங்காத பேவர் பிளாக் சாலை பணி குறித்து பேரூராட்சி  நிர்வாகம் திடீரென பிளக்ஸ் போர்டு வைத்துள்ளது. தேர்தலில் ஆளுங்கட்சிக்கு விளம்பரம் தேடுவதற்காக பிளக்ஸ் வைத்துள்ளதாக மக்கள்  குற்றம்சாட்டியுள்ளனர். பாளையம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 7வது வார்டு எஸ்.புதூர் கிழக்கு முதல் மற்றும் இரண்டாவது குறுக்கு  தெரு, மேற்கு இரண்டாவது குறுக்கு தெரு, சாலையூர் பிள்ளையார் கோவில் தெரு, 11வது வார்டு சமுதாய கழிப்பிட எதிர்புற தெரு, 13வது வார்டு  அம்பேத்கார் நகர் மெயின் தெருக்களில் 14வது நிதிக்குழு மானியத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்க ரூ.37 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த  வேலைக்கான உத்தரவு நாள் 29.6.2020 என்றும் வேலை முடிவடையும் நாள் 6 மாதங்கள் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 10 மாதங்கள்  ஆகியும் இன்னும் பணி துவங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது சாலையூர் சாலையில் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை திட்டம்  குறித்து ப்ளக்ஸ் போர்டு ஒன்று வைத்துள்ளனர்.  இது குறித்து மக்கள் கூறுகையில், ப்ளக்ஸ் போர்டில் குறிப்பிட்ட வழித்தடத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட உள்ளது என எங்களுக்கே  இதுவரை தெரியாது. தேர்தலை மனதில் வைத்து, துவங்காத பணிக்கு அவசர கதியில் போர்டை வைத்து சென்றுள்ளனர்.

இதேபோல் கடந்த 15  தினங்களுக்கு முன்னர் பாளையம் பேரூராட்சி கூட்டக்காரன்பட்டி-சித்தலப்பள்ளி வழித்தடத்தில் ரூ.63 லட்சம் செலவில் புதிய தார்சாலை பணி 14  மாதங்கள் ஆகியும் இன்னும் துவங்கப்படாமல், இதே போல் ப்ளக்ஸ் போர்டை மட்டும் வைத்து சென்றனர். தேர்தல் காரணமாக ஆளுந்தரப்பினரின் உத்தரவின்பேரில், துவங்காத வேலைக்கு ப்ளக்ஸ் வைத்து விளம்பரம் தேடும் பணியில் பாளையம் பேரூராட்சி  நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், ஓட்டு கேட்க செல்லும் ஆளுந்தரப்பினருக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்றனர்.

Tags : Thampi shot dead his brother in a property dispute in Kondalampatti Puthur
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக...