தேர்தல் அறிக்கை வெளியிட்டார் மம்தா அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் தலா 500 நிதியுதவி: மாணவர்களுக்கு கிரெடிட் கார்டு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று வெளியிட்டார்.  இதில், மாநிலத்தின் அனைத்து குடும்பத்திற்கும் அடிப்படை மாத ஊதியம், மாணவர்களுக்கு கிரெடிட் கார்டு என கவர்ச்சிகர திட்டங்கள் அறிவிக்கப்பட்டு  உள்ளன.மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டங்களாக நடக்கிறது. அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜ  இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜ சார்பில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் என முக்கிய தலைவர்களின்  பிரசாரத்தை எதிர்த்து திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி தனி ஆளாக சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடுவது குறித்து தேதி அறிவிக்கப்பட்டு 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று  தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. கொல்கத்தாவில் தேர்தல் அறிக்கையை மம்தா வெளியிட்டார். இதில், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும்  வழங்கப்படும் உதவித் தொகை 6000ல் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்படும் என்பதும், முதல் முறையாக மாநிலத்தின் அனைத்து குடும்பத்தினருக்கும்  மாதம் 500 குறைந்தபட்ச அடிப்படை ஊதியமாகவும், எஸ்சி/எஸ்டி குடும்பத்தினருக்கு 1,000 ஊதியமும் வழங்கப்படும் என்பதும் முக்கிய  அறிவிப்புகளாக உள்ளன.

மேலும், மாணவர்களுக்கு கிரெடிட் கார்டு திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் கடன் வரம்பு 10 லட்சமாகவும், வட்டி விகிதம் 4  சதவீதமாகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை மாணவர்கள் உயர்கல்விக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என மம்தா  அறிவித்துள்ளார். மாநிலத்தில் அடுத்த 5 ஆண்டில் 10 லட்சம் புதிய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களும், 2000 புதிய பெரிய தொழிற்சாலைகளும்  அமைக்கப்படும் என வாக்குறுதி தந்துள்ளார். காலில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் வீல்சேரில் அமர்ந்தபடியே தேர்தல் அறிக்கையை மம்தா  வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>