×

1 கோடி நிலம் அபகரித்த சகோதரர்கள் சிக்கினர்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

சென்னை: ஏற்கனவே விற்பனை செய்த நிலத்தில் மீண்டும் கொட்டகை அமைத்து 1 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த சகோதரர்களை மத்திய  குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தூத்துக்குடியை சேர்ந்த ராஜா ஐசக் சாமுவேல்(60) என்பவர்  புகார் ஒன்று அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தாம்பரம் இரும்புலியூரில் வசித்து வருகிறேன். பெருங்களத்தூர் மகேஷ் நகரில் கடந்த 1989ம்  ஆண்டு 3,936 சதுரடி நிலத்தை ஏழுமலை என்பவரிடம் இருந்து வாங்கினேன். அந்த இடத்தை எனக்கு விற்பனை செய்ததை மறைத்து ஏழுமலை தனது  இரண்டு மகன்களுக்கும் சம பாகமாக பிரித்து கடந்த 2019ம் ஆண்டு பாக பிரிவினை பத்திரம் செய்துள்ளார்.

மேலும், எனது இடத்தில் கொட்டகை போட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தர  வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். புகாரின்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் 1 கோடி மதிப்புள்ள இடத்தை  ஏழுமலை 31 ஆண்டுகளுக்கு முன்பு ராஜா ஐசக் சாமுவேலுக்கு விற்பனை செய்துள்ளார். அந்த இடம் பல ஆண்டுகளாக காலியாக இருந்ததால் மீண்டும்  தனது இரண்டு மகன்களான பழைய பெருங்களத்தூர் சிவராஜ் தெருவை சேர்ந்த பார்த்திபன்(51), புஷ்பராஜ்(41) ஆகியோருக்கு பிரித்து கொடுத்து  மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடியில் ஈடுபட்ட பார்த்திபன், புஷ்பராஜ் ஆகியோரை  நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Tags : Federal Crime Division , 1 crore land grabbing brothers caught: Federal Crime Division police action
× RELATED விஜிபி குழும உரிமையாளர் பன்னீர்தாஸ்...