×

பாஜ தலைவர் எல்.முருகன் போட்டியிடும் தொகுதி தாராபுரம் திமுக, மதிமுக நிர்வாகி வீடுகளில் வருமான வரி ரெய்டு: அரசியல் காழ்ப்புணர்ச்சி என குற்றச்சாட்டு

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சென்னியப்பன் நகரில், நகர திமுக செயலாளர் தனசேகரன் வீடு உள்ளது. இதேபோல், அலங்கியம் சாலையில் மதிமுக  மாவட்ட துணை செயலாளர் கவின் நாகராஜ் வீடு உள்ளது. இவர்கள் இருவரது வீடுகளையும் வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 12 பேர், 3 கார்களில் நேற்று மாலை 4.30 மணியளவில் ஒரே நேரத்தில் முற்றுகையிட்டனர். வீட்டில் பல்வேறு அறைகளில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். வீட்டில் உள்ள குடும்பத்தினர் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அனைவரையும் தனி அறையில் அமர வைத்தனர். செல்போன் மற்றும் லேண்ட் லைன் இணைப்புகளை துண்டித்தனர். இந்த ரெய்டின்போது தனசேகரன் மற்றும் கவின் நாகராஜ் ஆகியோர் அவரவர் வீடுகளில் இல்லை. தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, வெளியே சென்றுவிட்டனர். வீட்டில் குடும்ப தலைவர்கள் இல்லாதபோதும் வருமான வரித்துறை அதிகாரிகள் பெண்கள் மற்றும் குழந்தைகளை தனி அறையில் அமர வைத்து ரெய்டு நடத்தினர். மாலையில் துவங்கிய இந்த ரெய்டு நள்ளிரவு வரை நீடித்தது.

தாராபுரம் தனித்தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில், பாஜ மாநில தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். இவர், இத்தொகுதிக்கு அறிமுகம் இல்லாத நபர். அதனால், இவரது வெற்றிவாய்ப்பு என்பது வெறும் கனவாகவே உள்ளது. இவர், தோல்வி முகத்தில் இருப்பதால், எதிரணியை சேர்ந்தவர்களை கலக்கம் அடைய செய்ய வேண்டும் என திட்டமிட்டே வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த ரெய்டு நடத்தினர் என பரபரப்பாக தகவல் பரவியது. இதனால், இருவரது வீடு முன்பும் திமுக, மதிமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் குவிந்தனர். மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ெரய்டு நடத்தப்படுவது திட்டமிட்ட பழிவாங்கும் ெசயல் என தொண்டர்கள் ஆவேசமாக குரல் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

Tags : BJP ,L Murugan ,Tarapuram ,DMK ,Madhimuga ,house income tax , BJP leader, L. Murugan, constituency, income tax raid
× RELATED ஊட்டியில் ஒரே நேரத்தில்...