×

நாலா பக்கம்: புதுவை; கேரளா; மேற்கு வங்கம்; அசாம்

* மகள்களின் சாவுக்கு வஞ்சம் தீர்க்கும் தாய்
கேரள சட்டப்பேரவை தேர்தலில், கன்னூர் மாவட்டத்தில் உள்ள தர்மடம் தொகுதியில் முதல்வர் பினராய் விஜயன் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் அவரை எதிர்த்து சுயேச்சையாக களமிறங்குபவர் யார் தெரியுமா? வாளையார் கொலை வழக்கில் தனது 2 மகள்களை பறிகொடுத்து, நியாயம் கிடைக்காமல் சமீபத்தில் மொட்டை அடித்து கொண்ட தாய்தான். இவர் தனது மகள்களின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று முதல்வரை நேரில் சந்தித்தும், பலமுறை மனு கொடுத்தும், குற்றவாளிகள் ஆளும் கட்சியினர் என்பதால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், மனம் உடைந்த அவர், தர்மடம் தொகுதியில் முதல்வர் பினராய் விஜயனை எதிர்த்து சுயேச்சையாக களமிறங்க போவதாக அறிவித்துள்ளார். சங் பரிவார் அமைப்புகள் தவிர, மற்றவர்களின் ஆதரவையும் கோரியுள்ளார். இதனால், பினராய் கொஞ்சம் ஆட்டம் கண்டிருப்பதாகவே பேச்சு உலாவுகிறது.

* போட்டி போடும் 81 வயது முதியவர்
புதுச்சேரியில் காங்கிரஸ், பாஜ, என்ஆர் காங்கிரஸ், திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பிரதான கட்சிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். இதில் மூத்த அரசியல்வாதிகள் முதல் இளைஞர்கள் வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 10 புதுமுகங்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர். 81 வயதான மாரிமுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் நெடுங்காடு தனி தொகுதியில் போட்டியிடுகிறார். 27 வயதுடைய விலிலியன் ரிச்சர்டு பாஜ.விலும், 29 வயது நிரம்பிய இளைஞர் செந்தில் குமரன் முத்தியால்பேட்டையில் காங்கிரஸ் சார்பில் நிற்கிறார். இதுதவிர 45 முதல் 65 வயதுக்கு உட்பட்ட வேட்பாளர்கள் 40க்கும் மேற்பட்டோர் இடம் பெற்றுள்ளனர். நாம் தமிழர் கட்சியில் சரி பாதி ஆண், பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

* மூக்கு உடைந்த திரிணாமுல்
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜ.வில் இணைந்தவர் சுவேந்து அதிகாரி. முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில், அவரை எதிர்த்து பாஜ.வின் வேட்பாளராக இவர் போட்டியிடுகிறார். மேற்கு வங்கத்தின், ‘ஹாட் டாப்பிக்’ இப்போது யார் என்றால், இவர்தான். நந்திகிராமில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வரும் இவர், மம்தாவின் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவருடைய வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தார். தற்போது, இத்தொகுதியில் சுவேந்துவும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இவருக்கு நந்திகிராம், ஹால்டியா என 2 தொகுதிகளின் வாக்காளர் பட்டியலிலும் பெயர் உள்ளது. இதை சுட்டிக் காட்டியுள்ள திரிணாமுல் காங்கிரஸ், இந்த மோசடிக்காக அவருடைய வேட்புமனுவை நிராகரிக்கும்படி மனு அளித்துள்ளது. ஆனால், சுவேந்து கொஞ்சம் உஷார் பேர்வழிதான். இப்படி ஒரு அஸ்திரம் தன் மீது பாயும் என்று தெரிந்து கொண்டதால்தான் என்னவோ, ஹால்டியா வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்கும்படி ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் செய்துள்ளார். இது தெரியாமல், திரிணாமுல் மூக்கை உடைத்துக் கொண்டு நிற்கிறது.

* அப்போது மட்டும் தெரியவில்லையா?
அசாமில் 13 சதவீதம் பலமான வாக்கு வங்கியை வைத்துள்ள ஏஐயுடிஎப் கட்சி, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இம்மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன் நடந்த பிராந்திய கவுன்சில் தேர்தலில் பாஜ.வுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, இந்த தேர்தலில் காங்கிரசின் மெகா கூட்டணியில் இணைந்துள்ளது. இதனால், இக்கட்சியை மதவாத கட்சி என்று பாஜ பிரசாரம் செய்து வருகிறது. இது, ஏஐயுடிஎப் கட்சியின் தலைவர் பத்ரூதின் அஜ்மலுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ‘இத்தனை ஆண்டுகளாக பாஜ.வின் கூட்டணியில் இருந்தபோது, நாங்கள் மதவாதிகளாக தெரியவில்லையா? கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மோடியின் அலை இருந்தது. ஆனால், இத்தேர்தலில் பாஜ.வின் மீது மக்களுக்கு கோபமும், அதிருப்தியும் அதிகமாகி இருக்கிறது. சமீப நாட்களாக, அசாமுக்கு மோடி 5 முறை வந்து சென்றுள்ளார். ஆனாலும், மக்களிடம் எந்த எழுச்சியும் ஏற்படவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள விரக்தி காரணமாகவே, பாஜ தலைவர்கள் எங்களை மதவாதக் கட்சி என்கிறார்கள்,’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Tags : Nala ,Kerala ,West Bengal ,Assam , Nala Page: New; Kerala; West Bengal; Assam
× RELATED மேற்கு வங்கத்தில் குண்டு வெடித்து சிறுவன் உயிரிழப்பு..!!