×

திருப்பூரில் வருமான வரித்துறை அதிரடி சோதனை மநீம பொருளாளர் நிறுவனத்தில் ரூ.8 கோடி சிக்கியது: வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கலா?

திருப்பூர்: மக்கள் நீதி மய்யம் மாநில பொருளாளர் சந்திரசேகர் நிறுவனத்தில் நேற்று  வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ₹8 கோடி ரொக்கம் சிக்கியது. அந்த பணம் வாக்காளர்களுக்கு தருவதற்காக பதுக்கி வைக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடக்கிறது. நடிகர் கமல்ஹாசன் துவக்கியுள்ள மக்கள்  நீதி மய்யம் கட்சியின் மாநில பொருளாளராக இருப்பவர் சந்திரசேகர் (45).  இவருக்கு சொந்தமான அனிதா டெக்ஸ்காட் என்ற நூல் வர்த்தக நிறுவனம் மற்றும்  பின்னலாடை நிறுவனம் திருப்பூர் லட்சுமி நகரில் உள்ளது. இந்நிறுவனம்  சார்பில், முகக்கவசம், பிபிடி கிட் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பாதுகாப்பு  உபகரணங்கள் தயாரிக்கப்படுகிறது.  தமிழக அரசிடமிருந்து டெண்டர் எடுக்கப்பட்டு  இந்நிறுவனத்தில் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அரசுத்துறை  நிறுவனங்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. இவர், மக்கள் நீதி மய்யம் கட்சியில்  இருந்தாலும், தமிழக அமைச்சர் ஒருவருக்கு ரொம்பவே  நெருக்கமானவராக உள்ளார்.

இந்நிலையில், இவரது நிறுவனத்துக்கு வருமான  வரித்துறை அதிகாரிகள் சுமார் 10 பேர் நேற்று 4 கார்களில் வந்தனர்.  அதிரடியாக நிறுவனத்துக்குள் புகுந்து, கதவை உள்பக்கமாக பூட்டினர். உள்ளே  இருந்த ஊழியர்கள் யாரையும் வெளியே விடவில்லை. வெளியே இருந்து யாரையும்  உள்ளே அனுமதிக்கவில்லை. டெலிபோன் இணைப்புகளை துண்டித்தனர். ஊழியர்களின்  மொபைல் போன்களை தனியாக பிடுங்கி வைத்துக்கொண்டனர்.  அலுவலகத்தில் இருந்து  சந்திரசேகரை தனி அறையில் அமர வைத்தனர். அவரிடமிருந்தும் செல்போனை பிடுங்கி  வைத்துக்கொண்டனர். அவரது அறை, கணக்காளர் அறை, கேஷியர் அறை, ஆவணம்  பாதுகாப்பு அறை உள்ளிட்ட அனைத்து அறைகளிலும் தங்களது சோதனையை தொடர்ந்தனர்.  மதியம் 2.15 மணியளவில் துவங்கிய இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. அவரது வீட்டிலும் சோதனை நடந்தது. இச்சோதனையின்போது,  பல்வேறு முக்கிய ஆவணங்களை வரிமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கட்டுக்கட்டாக ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.  ரூ.8 கோடி ரொக்கப்பணம் சிக்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.  

தமிழக  சட்டமன்ற தேர்தலில், திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் உள்ள  தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் மற்றும்  வாக்காளர்களுக்கு சப்ளை செய்ய, சந்திரசேகர் பணம் பதுக்கி வைத்திருந்ததாக  கூறப்படுகிறது.  இது பற்றி வருமான வரித்துறையினரும்,  தேர்தல் அதிகாரிகளும் விசாரணையை துவக்கியுள்ளனர். மக்கள்  நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று திருப்பூரில் தேர்தல் பிரசாரம்  செய்ய உள்ளார். இந்நிலையில், அவரது கட்சியின் மாநில பொருளாளர்  நிறுவனத்தில் வருமான வரி ரெய்டு நடந்தது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Tags : Tiruppur ,Manima , In Tirupur, the Income Tax Department, Manima Treasurer, Rs 8 crore
× RELATED திருப்பூரில் இருந்து தேர்தலில்...