×

கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி கர்நாடகாவில் லாக்டவுன் கிடையாது: முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தற்சமயம் இரவு லாக்டவுன், சீல் டவுன் அமல்படுத்தப்படாது என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் பாதிப்பு கர்நாடகாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு மார்ச் முதல் வாரத்தில் அமெரிக்காவில் இருந்து துபாய் வழியாக பெங்களூரு வந்த இன்ஜினியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாசிடிவ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருடன் வந்த அவரது மனைவி, மகள் மற்றும் உறவினருக்கும் வைரஸ் பாசிடிவ் இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ராஜீவ்காந்தி நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து கடந்த ஓராண்டு காலத்தில் மாநிலத்தில் நேற்று வரை 9 லட்சத்து 63 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதில் 9 லட்சத்து 40 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமாகியுள்ளனர். 12 ஆயிரத்து 400 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது 9 ஆயிரத்து 700 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாநிலத்தில் கடந்தாண்டு இறுதியில் தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் திடீரென அதிகரிக்க தொடங்கியது. நேற்று வரை 10 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி 41 பேர் உயிரிழந்துள்ளனர். பெங்களூருவில் தொற்று பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரகம், கல்புர்கி, மைசூரு, பெலகாவி, தென்கனரா, உடுப்பி மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகம் இருப்பதாக சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. பெங்களூருவில் பத்திற்கும் மேற்பட்ட வார்டுகளில் தொற்று பாதிப்புள்ளது.

மாநில அரசின் சார்பில் கோவிட்-19 பரிசோதனை துரிதப்படுத்தப்பட்டது. கடந்த ஓராண்டு காலத்தில் ரேண்டம் மற்றும் ஆர்டிபிசிஆர் என 2 கோடியே 87 லட்சத்து 23 ஆயிரத்து 532 பேருக்கு நேற்று மாலை வரை பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 65 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. அரசு மேற்கொண்ட பரிசோதனை காரணமாக பெரியளவில் தொற்று பாதிப்பு தடுக்கப்பட்டதாக சுகாதார துறை அமைச்சர் டாக்டர் சுதாகர் தெரிவித்தார்.
இந்நிலையில் பெங்களூரு உள்பட நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், ஊரடங்கு அமல் படுத்துவது தொடர்பாக நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது மாநிலத்தில் தொற்று பாதிப்பு விவரங்கள் மற்றும் இதுவரை நடத்தியுள்ள பரிசோதனைகள் உள்பட முழு விவரங்களை பிரதமரிடம் முதல்வர் எடியூரப்பா விளக்கினார். கடந்த 15 நாட்களாக மாநிலத்தில் தொற்று பரவல் விவரத்தையும் தெரிவித்தார்.

பிரதமருடன் ஆலோசனை நடத்தியபின் மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சுதாகர், தலைமை செயலாளர் ரவிகுமார் உள்பட உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் முதல்வர் கூறுகையில், ``கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளதால் சில முக்கிய முடிவும் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். கொரோனா வைரஸ் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. மாவட்டம், தாலுகா, நகர அளவில் இயங்கிவரும் அனைத்து மருத்துவமனைகளிலும் தனி வார்டு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்க மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும்.

முடிந்த வரை சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்களை கேட்டு கொள்கிறேன். வைரஸ் பரவாமல் இருக்க மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கோவிட்-19 விதிமுறைகள் பின்பற்ற வேண்டும். தேசியளவில் தொற்று பாதிப்பு மாநிலத்தில் 1.03 சதவிதமாக இருப்பதால் நைட் லாக்டவுன், சீல்டவுன் உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டோம்’’ என்றார். கொரோனா வைரஸ் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருதால் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் முன் னெச்சரிக்கை நட வடிக்கைகள் தீவிர மாக்கப்பட்டுள்ளது.

Tags : Karnataka ,Chief Minister ,BS Eduyurappa , Corona virus outbreak has no lockdown in Karnataka: Chief Minister BS Eduyurappa
× RELATED டிக்கெட் கிடைக்காததால் எந்த...