×

ஆம் ஆத்மி அரசு எடுத்த நடவடிக்கையால் டெல்லியில் 15 சதவீதம் காற்றுமாசு குறைந்துள்ளது: அமைச்சர் கோபால்ராய் தகவல்

புதுடெல்லி: ஆம் ஆத்மி அரசு எடுத்த தொடர் நடவடிக்கையின் காரணமாக தேசிய தலைநகர் மண்டலத்தில் கடந்த ஓராண்டில் சுமார் 15 சதவீதம் அளவுக்கு மாசு குறைக்கப்பட்டுள்ளது. காற்றுமாசுவின் செறிவை அளவிட பயன்படுத்தப்படும் பி.எம் .2.5 அளவு எனபது நுரையீரல் பாதிப்பை  ஏற்படுத்தும் நுண்ணிய துகள்களின் செறிவாகும். இதனடிப்படையில் காற்றின் தர அளவை அளவிடும் சுவிஸ் குழுவினரால் மூன்றாவது ஆண்டாக உலகின் மிக அதிக மாசுபாடு அடைந்தள்ள நகரங்களின் பட்டியல் நேற்று முனதினம் வெளியிடப்பட்டது. இதில் முதலிடத்தில் டெல்லி நகரம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் கோபால் ராய் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தெரிவித்ததாவது: ஆம் ஆத்மி அரசு டெல்லியில் காற்றுமாசுவை குறைக்க தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக தலைநகர் மண்டலத்தில் 15 சதவீதம் அளவுக்கு காற்றுமாசு குறைக்கப்பட்டுள்ளது. தற்போது நிலை சீராக முன்னேற்றம் கண்டு வருகிறது. உலகில் மிக அதிக மாசுபாடு அடைந்துள்ள நகரங்களாக வெளியிடப்பட்ட பட்டியலில் முதல் 10 நகரங்களில், ஒன்பது  நகரங்கள் உத்தரபிரதேசத்தில் உள்ளன. ஆம் ஆத்மி அரசாங்கம் எரிபொருள் கொள்கையில் முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. மரக்கன்றுகள் நடுதல், எலக்ட்ரிக் வாகன பயன்பாடு, புகைபோக்கும் டவர் நிறுவுதல், போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தெர்மல் பவன் உற்பத்தி நிலையங்களை மூடிய முதல் நகரம் டெல்லி தான்.

இதுதவிர, பயிர் கழிவுகள் எரிப்பை தடுக்க புசா நிறுவனத்துடன் இணைந்து பயிர்கழிவுகளை எரிக்காமல் அழுகச்செய்து உரமாக மாற்றுவதற்கான ரசாயனம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டது. புழுதி புயலுக்கு எதிராக போர்கால அடிப்படையில் நடவடிக்கை, கிரீன் டெல்லி செயலி அறிமுகம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதற்கு மேல் மத்திய அரசு செயல்பட வேண்டிய நேரமாகும். ஆனால், அண்டை மாநிலங்களில் மாசுவை உற்பத்தி செய்யும செங்கல் சூளைகளை மூடுவது, மற்றும் மாசு ஏற்படுத்தும் அனல்மின் நிலையங்களை மூடும் விவகாரத்தில் மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. எனவே, சாத்தியமான திட்டங்களுடன் மத்திய அரசு காற்றுமாசுவை கட்டுப்படுத்த இணைந்து செயல்பட முன்வர வேண்டும். இவ்வாறு ராய் தெரிவித்தார்.

Tags : Aam Aadmi Party ,AAP ,Delhi ,Minister ,Gopal Roy , Aam Aadmi Party (AAP) government has reduced air pollution in Delhi by 15 per cent: Minister Gopal Roy
× RELATED முன்மொழிந்தவர்கள் திடீர் பல்டியால்...