×

கோடை குடிநீர் தட்டுப்பாடு எதிரொலி பக்ராநங்கல் கால்வாய் சீரமைப்பு பணியை கைவிட வேண்டும்: டெல்லி அரசு மீண்டும் வலியுறுத்தல்

புதுடெல்லி கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் பக்ராநங்கல் கால்வாய் சீரமைப்பு பணியை தற்போது கைவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு டெல்லி அரசு மீண்டும் வலியுறுத்தி உள்ளது. டெல்லிக்கு தினமும் 232 மில்லியன் காலன் குடிநீர் ரவி மற்றும் பியாஸ் ஆற்றில் இருந்து சப்ளை செய்யப்பட்டு வருகிறது. பக்ராநங்கல் மற்றும் பியாஸ் திட்டத்தின்கீழ் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், இமாச்சலபிரதேசம், டெல்லி மற்றும் சண்டிகார் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதை கண்காணிக்கும் பணி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இதற்காக பக்ரா பியாஸ் நிர்வாக ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் டெல்லிக்கு குடிநீர் சப்ளை செய்ய பயன்படுத்தப்படும் நங்கல் ஹைடல் கால்வாயை சீரமைக்க பக்ரா பியாஸ் நிர்வாக ஆணையம் முடிவு செய்துள்ளது.
இந்த பணி மார்ச் 25 முதல் ஏப்ரல் 24 வரை ஒருமாதம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியை தற்போது தொடங்க வேண்டாம் என்று பக்ரா பியாஸ் நிர்வாக ஆணையத்திற்கு டெல்லி குடிநீர் வாரியம் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தது. டெல்லியில் ஆண்டுதோறும் கோடையில் குடிநீர்தட்டுப்பாடு ஏற்படும். அதனால் இந்த பணிகளை தற்போது தொடங்கினால் மேலும் பல பகுதிகளில் குடிநீர் சப்ளை முற்றிலும் துண்டிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் பக்ரா பியாஸ் நிர்வாக ஆணையத்திடம் இருந்து முறையாக பதில் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் மீண்டும் டெல்லி அரசு சார்பில் ஒருமாதத்திற்குள் இரண்டர் முறையாக பக்ரா பியாஸ் நிர்வாக ஆணையத்திடம் இதே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டெல்லி குடிநீர்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: பக்ராபியாஸ் நிர்வாக ஆணைய தலைவரை நேரில் சந்தித்து டெல்லி அரசு சார்பில் மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கையில் நங்கல் ஹைடல் கால்வாய் சீரமைப்பு பணியை காலம் தாழ்த்தி கோடைகாலம் முடிந்தபிறகு செய்ய வேண்டும்.

இப்போது பணிகளை மேற்கொண்டால் டெல்லி குடிநீர் தட்டுப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்பட்டது. மீண்டும் ஒருமுறை பக்ரா பியாஸ் நிர்வாக ஆணையத்திற்கு டெல்லி குடிநீர்வாரியம் சார்பில் கடிதம் எழுதப்படும். கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் நாங்கள் நீதிமன்றம் செல்வோம். கோடை தொடங்குவதற்கு முன்பே டெல்லியில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இன்னும் சப்ளை பாதிக்கப்பட்டால் டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு பெரிய பிரச்னையை ஏற்படுத்தி விடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

* டெல்லி குடிநீர் தேவையில் 90 சதவீதத்தை மற்ற மாநிலங்கள் தான் பூர்த்தி செய்து வருகின்றன.
* அரியானாவில் இருந்து 4500 கன அடி தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
* நங்கல் ஹைடல் கால்வாயில் சராசரியாக 7,600 கனஅடி தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
* இங்கு பராமரிப்பு பணி மேற்கொண்டால் டெல்லியில் 25 சதவீதம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.
* டெல்லிக்கு சராசரியாக 1,150 மில்லியன் காலன் தண்ணீர் தேவை.
* தற்போது 935 மில்லியன் காலன் தண்ணீர்தான் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

Tags : Bakranangal ,Delhi govt , Echo of summer drinking water shortage: Delhi govt urges abandonment of Pakranangal canal rehabilitation work
× RELATED டெல்லி அரசு மருத்துவமனைகள், மொகல்லா...