மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் கொரோனா விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் ஒரு ஆண்டுக்கும் மேலாக உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தற்போது பல நாடுகளில் கொரோனாவின் 2வது அலை வீசுவதால் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த டிசம்பர் 2ம் வாரத்தில் இருந்து இதுவரை கொரோனா பாதிப்பு விகிதம் 33% அதிகரித்துள்ளது. கொரோனா தடுப்பூசி ஒரு பக்கம் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனினும், தொற்று பரவலை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
குறிப்பாக, நாட்டின் மொத்த வைரஸ் பாதிப்பில் 85 சதவீதம் மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா உள்பட 8 மாநிலங்களில் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பால் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 21ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா விஸ்வரூபம் எடுத்து வருகிறது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 23,179 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு நேற்றைய தினத்துடன் ஒப்படுகையில் 30% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23,70,507 ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 21 லட்சத்து 63 ஆயிரத்து 391 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி 53,080 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 84 பேர் உயிரிழந்துள்ளனர். 23,179 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1,52,760 பேர் கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 52 ஆயிரத்து 760 சிகிச்சை பெற்று வருகின்றனர்.