×

தமிழக அரசியலில் பரபரப்பு: திமுக, மதிமுக, மநீக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை.!!!

சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற  தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 6-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, தீவிர பிரச்சாரத்தில்  ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

இந்நிலையில், தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் வீடுகள் மற்றும் அலுவலங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின்  பொருளாளர் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருப்பூர், கோவையில் உள்ள சந்திரசேகரின் அலுவலங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது.

அனிதா ஹெல்த்வேர் என்ற பெயரில் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை சந்திரசேகர் நடத்தி வருகிறார். தமிழக அரசின் மகப்பேறு தொகுப்பு உள்ளிட்ட திட்டங்களின் ஒப்பந்ததாரராக சந்திரசேகர் உள்ளார். கொரோனா பாதுகாப்பு  கவச உடைகளையும் அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகித்தவர் சந்திரசேகர். வருமான வரித்துறை சோதனைக்கு ஆளாகியுள்ள சந்திரசேகர் தமிழக அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானவர் எனத்தகவல் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவை  குறி வைத்து வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவதாகவும் சந்தேகங்கள் எழுந்துள்ளது.

இதேபோல், தாராபுரத்தில் திமுக மற்றும் மதிமுக நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பாஜக மாநில தலைவர் முருகன் போட்டியிடும் தாராபுரம் தொகுதியில் வருமான வரித்துறையினர் சோதனை  நடத்தி வருகிறது. தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ரூ.5 கோடி சிக்கியது:

இதேபோல், சென்னை பூக்கடை வட்டாரத்தில் இரு ஸ்டீல் கடைகளில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் ரூ.5 கோடி சிக்கியது. பூக்கடை ஏகாம்பரேஷ்வரர் கோயில் தெரு, நாராயணமுதலி தெருவில் உள்ள இரு கடைகளில் இரு  நாட்களாக சோதனை நடத்தப்படுகிறது. தேர்தல் தொடர்பான வருமானவரி பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.5 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ரூ.5 கோடி ஹவாலா பணமா? வாக்காளர்களுக்கு வழங்க  வைக்கப்பட்டிருந்த பணமா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tamil Nadu ,DMK ,Madhimuga ,Maneka , Excitement in Tamil Nadu politics: Income tax check on the houses of political parties including DMK, Madhimuga and Maneka !!!
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...