×

மாஸ்க், சமூக இடைவெளி காணாமல் போச்சு...டெல்டா மாவட்டங்களில் மாணவர்களுக்கு வேகமாக பரவும் தொற்று

பள்ளி, கல்லூரிகள் மூடல்
பெற்றோர் அச்சம்
தேர்தல் பணிகளில் அதிகாரிகள் ‘செம பிஸி’
பரிசோதனை, தனிமைப்படுத்துவதில் அலட்சியம்

திருச்சி: தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் தொடங்கியது. இதையடுத்து மார்ச் 24ம் தேதி மாலை முதல் தொடர்ச்சியாக பல கட்டங்களாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் யாரும் வரக்கூடாது என்று கூறப்பட்டது. பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், போக்குவரத்து உள்ளிட்டவை நிறுத்தப்பட்டது. பின்னர், ஆகஸ்ட் மாதம் முதல் படிப்படியாக ஊரடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 500க்கும் குறைவாகவே இருந்தது. இதனால், பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். தற்போது, ஊரடங்கு முழுவதும் தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பி உள்ளது. ஆனால், சமீப காலமாக கொரோனா விதிமுறைகளை பொதுமக்கள் முதல் அரசு அதிகாரிகள் வரை யாரும் பின்பற்றுவதில்லை.

பொதுமக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் மாஸ்க் கூட அணியாமல் சுற்றும் நிலை காண முடிகிறது. இதனால், கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1000ஐ நெருங்கி வருகிறது. சென்னையில் 350க்கும் மேற்பட்டோர் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வரும் நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என சுகாதாரத்துறை கூறி உள்ளதால், மக்கள் மீண்டும் அச்சத்தில் உள்ளனர். இந்த சூழலில்தான், கொரோனா தளர்வுகள் காரணமாக தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் 8,9 மற்றும் 11ம் வகுப்புகள் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் பெரும்பாலானோர் மாஸ்க் அணிவதில்லை.

ஏன், பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகம் கூட கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. திறக்கப்பட்ட சில நாட்கள் மட்டும் நுழைவாயில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. சானிடைசர் வழங்கப்பட்டது. மாஸ்க் அணியாதவர்களை எச்சரிக்கை விடுத்து மாஸ்க்குடன் அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதெல்லாம் ஒரு சில நாட்கள் மட்டுமே நடந்தது. அதன்பிறகு, எல்லா விதிமுறைகளும் காற்றில் பறந்தது. இதன் காரணமாக டெல்டாவில் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

கடந்த வாரம் திருவாரூர் மாவட்ட மன்னார்குடியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பளி மாணவிகள் 15 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் கண்டக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி வார்டன், 2 சமையல்காரர்கள், மாணவர் என 4 பேருக்கு ெதாற்று உறுதியானது. இதையடுத்து, பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம், சுண்டக்குடி அரசுப் பள்ளியில் மாணவர், வார்டன் உள்ளிட்ட 4 பேருக்கு கொரானா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரியலூர் அருகே உள்ள தாமரைக்குளம் கிராமத்தில் தனியார் தொழில் பயிற்சி பள்ளியில் 2ம் ஆண்டு பயிலும் மாணவர் ஒருவருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த தனியார் தொழில் பயிற்சி பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் சுகாதாரத்துறை அலுவலர்கள் பரிசோதனை மாதிரி சேகரிக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 11ம் தேதி பிளஸ் 2 படிக்கும் ஒரு மாணவிக்கு காய்ச்சல் இருந்தது. இதையடுத்து பிளஸ்2 படிக்கும் 460 பேர், 9, 10 மற்றும் 11ம் வகுப்பு படிக்கும் 619 பேர் மற்றும் ஆசிரியைகள் 35 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 57 மாணவிகளுக்கும், ஒரு ஆசிரியைக்கும் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், 2 வாரம் பள்ளியை மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகள் வசிக்கும் 24 கிராமங்களில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நேற்று மாணவிகளின் பெற்றோர் 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள 2 தனியார் ஆங்கில பள்ளிகளில் பயிலும் 6 மாணவர்களுக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதனால் இந்த பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல், திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள கல்லூரியில் பயிலும் 2 மாணவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, கல்லூரியில் உள்ள மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தியதில் 15க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.

திருச்சி அருகே சேதுராப்பட்டியில் அரசு பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், 237 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 14 மாணவர்கள் மற்றும் ஒரு பேராசிரியர் உட்பட 15 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட 15 பேரும் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கல்லூரி மூடப்பட்டது. அனைத்து வகுப்பறைகளுக்கும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் வேகமாக பரவுவதால் மாணவர்களை அனுப்ப பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். முன்னதாக, கொரோனா வேகமாக பரவி நேரத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு இருந்தால், அவர் எங்கெங்கு சென்றார், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார், யார் என விசாரணை நடத்தி அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால், தற்போது ஒரு மாணவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டால், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை எடுக்கின்றனர். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருக்கும் எடுப்பதில்லை. தனிமைப்படுத்துவதும் இல்லை. இந்த பணிகளில் ஈடுபட்டு வந்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் உட்பட பலதுறை அலுவலர்கள் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கி விட்டதால், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக பள்ளிக்கல்வி, உள்ளாட்சி உள்ளிட்ட அனைத்து துறைகளும் தேர்தல் பணியில் கவனம் செலுத்த தொடங்கி விட்டன. இதனால் கொரோனா தடுப்பு பணிகள் முழுமையாக செய்யவில்லை. இது தான் பல இடங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் என்றும் சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் கொரோனா தொற்று 2வது அலை பரவ தொடங்கும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே கொரோனா தொற்று கட்டுக்குள் வராமல் பள்ளிகளை திறக்க கூடாது என்றும், இதுவரை திறக்கப்பட்ட பள்ளிகளை மூட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கொரோனா அதிகமாக பரவுது..- முதல்வர்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் அதிமுக வேட்பாளர் திருஞான சம்பந்தத்திற்கு வாக்கு கேட்டு நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது, பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.

ரூ.11 கோடி அபாரதம் வசூல்
தமிழகத்தில் மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பு மக்களுக்கு கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இதனால், நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில், கொரோனா கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தவும், மாஸ்க் அணிவதும் கட்டாயமாக்குவது, மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் வழங்கினார். தற்போது வரை மாஸ்க் அணியாதவர்களிடம் இருந்து ரூ.11 கோடி அபாரதம் வசூல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Delta districts , Mask, social gap disappears ... Rapidly spreading infection to students in delta districts
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு..!!