×

நானே எனக்கு பாதுகாப்பு

நன்றி குங்குமம் தோழி

“தமிழில் நடிப்பதற்கு முதலில் தயங்கினேன். சரியாக பேசி நடிக்க முடியுமா என்ற சந்தேகம். பின் நான் நடித்ததில் எனக்குப் பிடித்த கதாபாத்திரமாக மாறியிருக்கிறது ‘மௌன ராகம்’ தொடரில் வரும் சொர்ணா கதாபாத்திரம்” என்கிறார், மலையாள திரையுலகிலும், சின்னத் திரையிலும் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை சீமா ஜி நாயர். “அம்மா செர்தாலா சுமதி கேரளாவில் மேடை நாடகக் கலைஞர். அப்பா கோபிநாதன் பிசினஸ்மேன். சொந்த ஊர் கோட்டயம் அருகேயுள்ள கிராமம். அண்ணா இசை அமைப்பாளராகவும், அக்கா பின்னணி பாடகியாகவும் மலையாள திரையுலகில் உள்ளனர். அதனால் எனக்கும் இசை மேல்  ஆர்வம் இருந்தது. இசைக் கல்லூரியில் சேர்ந்து படிச்சேன். வயலின், சப் வோக்கல் என்னுடைய ஸ்பெஷல்.

அம்மா நாடகத் துறையில் இருந்தாலும் நாங்க நடிக்க வீட்டில் தடை இருந்தது” என்ற சீமா நடிகைகள் சந்திக்கும் சவால்கள் பற்றி விவரித்தார்.  “அந்தக் காலங்களில் நடிகை என்றால்,  சொந்த பந்தங்கள் கூட தப்பா பேசுவாங்க. இதனாலேயே அம்மா நாங்க நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். நடிப்புத் தவிர வேறு எந்தக் கலை சார்ந்த துறையையும் தேர்வு செய்ய எங்களுக்கு சுதந்திரம் கொடுத்தும் இருந்தார். அதனால் நாங்க மூவரும் இசைத் துறையை தேர்வு செய்தோம். இசையை நான் தேர்வு செய்தாலும், என்னுடைய மரபணுவில் இருக்கும் நடிப்புத் திறமை என்னை அந்தத் துறைக்கு இழுத்து வந்துவிட்டது.

1987ம் ஆண்டு முதன் முதலில் மேடை நாடகத்தில் நடித்தேன். அன்று முதல் இன்று வரை 1000த்துக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்திருக்கிறேன். 15 வயதில், பிரபல இயக்குநர் பத்ம ராஜ் சார் இயக்கத்தில் வெளியான ‘பரன்னு பரன்னு பரன்னு’ என்ற மலையாள திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானேன். ஏனோ சினிமா எனக்கு பிடிக்கவில்லை. படிப்பில் கவனம் செலுத்தினேன்’’ என்றவருக்கு சிறந்த நாடக நடிகை என கேரள அரசு விருது வழங்கியுள்ளது.
‘‘அம்மாவைப் போல் எனக்கும் நாடகத் துறை மேல் ஆர்வம் இருந்தது.

அதனால்தான் சினிமா வாய்ப்பையும் மறுத்து விட்டேன். 1992ம் ஆண்டு கேரள அரசு சிறந்த மேடை நாடகக் கலைஞருக்கான விருதினை எனக்கு வழங்கியது. அம்மா வாங்கிய விருதை நானும் கையில் ஏந்திய போது ரொம்பவே பெருமையா இருந்தது. நாடகங்கள் மற்றும் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது, 1994ம் ஆண்டு எனக்கு திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு கொஞ்ச காலம் நடிப்பிலிருந்து விலகியிருந்தேன். மீண்டும் 2003ல் இயக்குநர் சித்திக் இயக்கத்தில் வெளியான Chronic Bachelor  படம் மூலம் நடிப்பு துறையில் கால் பதிச்சேன்’’ என்றவர் இது வரை 175க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.

‘‘தமிழில் ‘பைரவா’, ‘திருமணம்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன். சூர்யா தொலைக்காட்சியில் வெளியாகும் சின்னத்திரையில் மட்டும் இல்லாமல் 25 தொடர்களுக்கு மேல் நடிக்கிறேன்.  2014ம் ஆண்டு சின்னத்திரையில் சிறந்த நடிகைக்கான விருது கேரள அரசு வழங்கியது. என்னைப் பொறுத்தவரை ஒரு சீனில் நடிச்சாலும், அந்த கதாபாத்திரம் பேசப்படவேண்டும்’’ என்று கூறும் சீமா கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை மட்டுமே பார்க்கிறார். அம்மா, அக்கா, பாட்டி, குணச்சித்திர கதாபாத்திரம் என நடித்து வரும் சீமா, “ஒரு நடிகர் நல்ல பெர்ஃபாமராக இருக்கணும். ஆனால், இங்கு நடிகர்களின் திறமைக்கு ஏற்ப சம்பளம் கிடைப்பதில்லை.  

பேசும் போதே ‘இது பட்ஜெட் படம்’ன்னு சொல்லிடுவாங்க. அதே சமயம் ஹீரோ,  ஹீரோயின்களுக்கு எவ்வளவு தொகை என்றாலும் தர தயங்குவதில்லை. எங்களின் திறமைக்கு ஏற்ற தொகை கொடுத்தால்தான் எங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்” என்றார். நடிப்போடு சமூக சேவைகளும் செய்து வரும் சீமா, கேரளாவை சேர்ந்த தொண்டு நிறுவனம் (Make-A-Wish Foundation, for Kerala Division, A Charity Organization Based in India) ஒன்றில் 12 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். “பிரைன் டியூமர், பிளட் கேன்சர், ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளை சந்தோஷப்படுத்துவது தான் எங்க வேலை.  

மம்முட்டி, மோகன்லால் நடிகர்களை பார்க்கணும், ஃபிளைட்டில் பறக்கணும்ன்னு ஆசைப்படுவாங்க.அவர் களின் விருப்பத்தை பூர்த்தி செய்கிறோம். கை கால் தளர்ந்தவர்களுக்காக இயங்கும் ‘தணல்’ என்ற அமைப்போடும் இணைந்து பணியாற்றி வருகிறேன்” என்ற சீமா நடிப்புத் துறையில் முப்பத்தி மூன்று ஆண்டுகளாக இயங்கி வருகிறார். ‘நடிப்பில் தகுதி, உழைப்பு, உண்மை, அர்ப்பணிப்பு இருந்தால் மட்டுமே நிலைக்க முடியும். டிஜிட்டல் தொழில்நுட்பங்களால் சினிமா எளிமையாகிவிட்டது. 20-25 டேக் வரை போகலாம். அதேபோல் நிறம் மாற்றுவது, கிராபிக்ஸில் செட் அமைப்பது, நடிகர், நடிகைகள் உடல் அமைப்பை மாற்றுவது என ஏராளமான ஆப்ஷன்ஸ் இருக்கிறது.

பத்து, பதினைந்து லட்சம் இருந்தா போதும் ஒருவரின் உடலமைப்பையே மாற்றிவிடலாம். எல்லாம் இன்ஸ்டன்ட் காபி மாதிரி செய்ய முடிகிறது. நான் நடிக்க வந்த காலத்தில் இது எல்லாம் இல்லை. பார்வையாளர்கள் எங்களின் உண்மையான முகத்தைதான் பார்த்தார்கள். முன்பெல்லாம் ஒரு படம் உருவாக அவ்வளவு மெனக்கெடல் இருக்கும். படம் ரிலீஸ் செய்வதற்கும் காலம் எடுக்கும். தற்போதுள்ள தலைமுறையினருக்கு ஒரு படம் ஹிட்டானால், அடுத்த படத்திற்கு அவர்களுக்கான சம்பளம் மாறுகிறது. அந்த ஹீரோ, ஹீரோயினை வைத்தே படத்தின் வியாபாரம் நடக்கிறது. நடிகர்,  நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் என எல்லாருமேதான் உழைக்கிறோம்” என்கிறார்.

சமீபத்தில் திரைத்துறையில் அதிர்வை ஏற்படுத்திய மீடூ, மலையாளத் திரையுலகில் செயல்பட்டு வரும் WCC பற்றிக் கூறும் சீமா, “ஒரு பெண்ணிற்கு எல்லா உரிமைகளும், பாதுகாப்பும் கிடைக்க வேண்டும். அந்த பாதுகாப்பு அவள் கையில்தான் இருக்கிறது. அதே சமயத்தில் இதை விளம்பரத்திற்காக பயன்படுத்தக் கூடாது. இந்த துறையில் பாதுகாப்பு இல்லை, தொந்தரவு இருக்கிறதென்றால் அதில் முடிந்த அளவு போராடுவோம். இல்லை... என்னால் முடியாது என்ற பட்சத்தில் விலகிவிட்டு அடுத்த வேலைகளைப் பார்க்கலாம். மலையாள திரையுலகில் இருக்கும் பெண்கள் சிலர் இதற்காகப் போராடினார்கள். விளைவு இன்று அவர்கள் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலை நிச்சயம் மாறும். இது ஆரம்பம்தான்” என்றார் சீமா.

- அன்னம் அரசு

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!