×

கொந்தகை அகழாய்வில் கண்டெடுப்பு மூடியுடன் முதுமக்கள் தாழி

திருப்புவனம்: கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் கொந்தகை அகழாய்வு தளத்தில், மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த மாதம் 13ம் தேதி துவங்கியது. கீழடி, அகரம், கொந்தகை ஆகிய இடங்களிலும் தலா ஒரு குழி மட்டும் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கொந்தகை அகழாய்வு தளத்தில், கடந்த 6ம் கட்ட அகழாய்வு பணியின் போது சிறியதும் பெரியதுமாக 29 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.

கொந்தகை கிராமத்தில் பண்டைய காலத்தில் முதல் நிலை, 2ம் நிலை, சமநிலை ஆகிய மூன்று நிலைகளில் இறந்தவர்களை புதைக்கும் வழக்கம் இருந்தது தெரிய வந்தது. 7ம் கட்ட அகழாய்வில் அதற்கு பிந்தைய கால கட்ட வழக்கத்தை கண்டறிவதற்காக ஆய்வு தொடங்கப்பட்டது. கொந்தகையை சேர்ந்த ராஜாமணி குடும்பத்தாருக்கு சொந்தமான இடத்தில் ஒரு குழி தோண்டப்பட்ட நிலையில், இரண்டு இடங்களில் முதுமக்கள் தாழி இருப்பதற்கான அடையாளம் தெரியவந்தது. அந்த இடத்தில் தற்போது மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழி கண்டறியப்பட்டுள்ளது.

இதில் இரண்டு அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட மூடி வெளியே தெரிய வந்துள்ளது. இதனால் முதுமக்கள் தாழியின் உயரம் குறைந்தபட்சம் நான்கு அடி உயரமும், அகலம் மூன்று அடியும் இருக்க வாய்ப்புள்ளது. அருகிலேயே கருப்பு சிவப்பு வண்ணத்தில்  குவளையும் கண்டறியப்பட்டுள்ளது. முதுமக்கள் தாழியின் உயரம், அகலம், நீளம் உள்ளிட்டவற்றை ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது.



Tags : Kontakai , Elderly man with discovery lid in Kontakai excavation
× RELATED கீழடி அகழாய்வில் முதுமக்கள்தாழிகள், இரும்பு வாள் கண்டெடுப்பு..!