×

புதுச்சேரி சட்டசபை தேர்தல்!: பாஜக - அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது பாமக... முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய பாமக முதற்கட்டமாக 9 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை தற்போது வெளியிட்டது. புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக மற்றும் பாமக இணைந்து போட்டியிடுவதாக இருந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இடம்பெற்றிருந்த போதிலும், அக்கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. விரைவில் தொகுதிகளை ஒதுக்கவில்லை என்றால் தனித்து போட்டியிடுவதாக பாமக ஏற்கனவே அறிவித்திருந்தது.

5 தொகுதிகளை கேட்ட பாமகவுக்கு ஒரு தொகுதியை கூட ஒதுக்காமல் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாரதிய ஜனதா 9 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பாமக விலகியுள்ளது. மொத்தம் 15 தொகுதிகளில் தனித்து போட்டியிட திட்டமிட்டிருக்கும் பாமக, முதற்கட்டமாக 9 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலைக்குள் வெளியிடப்படும் என்றும், வேட்பாளர்கள் அனைவரும் நாளை வேட்புமனுத்தாக்கள் செய்வார்கள் என்றும் புதுச்சேரி பாமக அமைப்பாளர் தன்ராஜ் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் அதிமுக - பாஜக தேசிய கூட்டணியில் இருந்து பாமக வெளியேறி இருப்பது புதுச்சேரி அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்துடன் இணைந்து புதுச்சேரியிலும் ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


Tags : Vavadachcheri ,election ,Bjaka - PHAMAGA , Puducherry assembly election, BJP-AIADMK alliance, BJP, dissociation
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...