பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வந்தால் விலை குறையும்!: மாநில அரசு ஒத்துழைக்க வி.கே.சிங் வலியுறுத்தல்..!!

நெல்லை: பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வந்தால் விலை குறையும் என தெரிவித்துள்ள மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங், மாநில அரசு அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நெல்லை தொகுதி பாஜக தேர்தல் அலுவலகத்தில் வி.கே.சிங் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், கேஸ் சிலிண்டர் விலை ஏற்ற, இறக்கங்களுடன் காணப்படுவது இயல்பு தான் என்று தெரிவித்தார். மேலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வகையில் அவற்றை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் வி.கே.சிங் பேசியதாவது, எரிபொருள் விலை உயர்வை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. அனைத்து மாநிலங்களும் ஒத்துழைத்தால் தான் தீர்வு கிடைக்கும். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வந்தால் அவற்றின் விலையை கட்டுக்குள் வைக்க முடியும். இல்லாவிட்டால் அது சிரமம். இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என உறுதியளிக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

நாடு முழுவதும், வைரஸ் பரவலை தடுக்க மார்ச் இறுதியில்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால்  மே வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல் அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன . சென்னையில், நேற்று பெட்ரோல், லிட்டர் 93.11 ரூபாய், டீசல் லிட்டர் 86.45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று 18வது நாளாக, பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>