குறைவான தொகுதி ஒதுக்கியதில் அப்செட் தமிழக பிரசாரத்தை புறக்கணித்த மோடி, அமித்ஷா: அரசியல் விளையாட்டை தொடங்கியது பாஜ

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜ இடம் பெற்றுள்ளது. முதலில் அதிக தொகுதிகளை பெறுவதற்காக பிரதமர் நரேந்திரமோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழகம் வந்தபோதெல்லாம் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தவிர ஜே.பி.நட்டா மற்றும் மத்திய அமைச்சர்கள் இரவு, பகல் பாராமல் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் பாஜ கேட்ட 60 தொகுதிகளை அதிமுக அளிக்கவில்லை. கடைசியாக பெயரளவுக்கு 20 தொகுதிகளை மட்டும் அதிமுக வழங்கியது. அதிக தொகுதிகளை பெற்றால் தமிழகத்தில் காலூன்றி விடலாம் என்ற பாஜவின் கனவு எடுபடாமல் போனது. தேர்தலுக்கு பிறகு அதிமுகவை பாஜவுடன் இணைத்து விடலாம் என்ற திட்டமும் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் வேறு கூட்டணி என்பது சாத்தியமில்லை. தேர்தலுக்கும் குறைந்த நாட்களே உள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பாஜவினரும் அதிமுக வழங்கிய சீட்டை பெற்றுக் கொண்டனர். அதில் அவர்கள் கேட்ட பல தொகுதிகள் கிடைக்கவில்லை. கேட்ட ஒரு சில தொகுதிகளை தவிர மற்ற தொகுதிகள் பாஜவுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத ெதாகுதியை அதிமுக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சென்னையை பொறுத்தவரை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, வேளச்சேரி, கொளத்தூர், மயிலாப்பூர் மற்றும் தாம்பரம் தொகுதிகள் கேட்கப்பட்டது. ஆனால், அவை வழங்கப்படவில்லை. அதில் துறைமுகம் மட்டும் வழங்கப்பட்டது. கேட்ட தொகுதிகள் வழங்கவில்லை, வெற்றி வாய்ப்பு குறித்து பாஜ ஆய்வு செய்த தேர்வு செய்த தொகுதிகளும் வழங்கவில்லை என்று பாஜ மேலிடம் அதிமுக மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறது. இதனால் தான் பேச்சுவார்த்தை நடத்த பல முறை தமிழகத்துக்க ஓடோடி வந்த பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தேர்தல் அறிவித்த பின்னர் பிரசாரத்திற்கு என்று இன்று வரை வரவில்லை. தேர்தலுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ளது. இதனால், அவர்கள் வருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் வர உள்ள மத்திய அமைச்சர்களும் பாஜ போட்டியிடும் இடங்களில் மட்டும் பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டனர்.

அதிமுக அமைச்சர்கள் அனைவரின் ஜாதகமும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் உள்ளது. அமைச்சர்களாக இருந்த போது செய்த ஊழல்கள் அனைத்தும் திரட்டி அமித்ஷா வைத்துள்ளார். தேர்தலுக்கு பிறகு அவற்றை கையில் எடுக்க டெல்லி மேலிடம் முடிவு செய்துள்ளது. அப்போது சீட்டுக்காக பிரதமர், உள்துறை அமைச்சர், மத்திய அமைச்சர்களை அலைய விட்டது, மத்தியில் ஆட்சியில் இருந்தும் குறைவான தொகுதிகளை ஒதுக்கியது, கேட்ட தொகுதிகளை கொடுக்காமல் போக்கு காட்டியது போன்ற செயல்களை செய்த அதிமுகவுக்கு தக்க பதிலடி கொடுக்கவும் பாஜ மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அதிமுக மூத்த தலைவர்களை பலரை பாஜவில் இணைத்து அதிமுகவை இல்லாமல் ஆக்கவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதனால், தான் தேர்தல் முடியும் வரை காத்திருப்போம் என்று பாஜ மேலிடம் அமைதி காத்து வருவதாக கூறப்படுகிறது. தேர்தல் முடிவுக்கு பின்னர் பாஜ மேலிடத்தின் ஆட்டம் அதிமுகவில் பூகம்பத்தை கிளப்பும் என்றும் கூறப்படுகிறது.

Related Stories:

>