×

ஆபரேஷனுக்கு நடுவே மனித உடல் உறுப்புகளுக்கு விலை கேட்கும் ‘கேம் ஷோ’: அமெரிக்க டாக்டர்களால் அதிர்ச்சி

நியூயார்க்: மருத்துவ சேவையே இவ்வுலகின் புனிதமான தொழிலாக கருதப்படுகிறது. ஒருவரின் உயிரை காப்பாற்றுவதால், கடவுளுக்கு அடுத்த இடத்தில் வைத்து டாக்டர்களை மக்கள் மதிக்கின்றனர். ஆனால், அந்த டாக்டர்களே, ஆபரேஷன் தியேட்டரில் ஆபரேஷன் செய்பவரின் உடல் பாகங்களை காட்டி சரியான விலை கேட்கும் ‘கேம் ஷோ’ நடத்தினால் எவ்வளவு பயங்கரமாக இருக்கும்? அப்படிப்பட்ட அதிர்ச்சிகர சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஸ்பெக்ட்ரம் ஹெல்த் மருத்துவமனை டாக்டர்கள் ஆபரேஷனுக்கு நடுவே மனித உடல் உறுப்புகளை காட்டி நடத்திய இந்த கேம் ஷோவை வுட்-டிவி சேனல் அம்பலமாக்கி உள்ளது.

சமீபத்தில், அந்த மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில போட்டோக்களை பதிவிட்டுள்ளனர். அவை, ஆபரேஷன் செய்து கொண்டிருக்கும் சமயத்தில் எடுக்கப்பட்டவை. அதில், ஆபரேஷன் செய்யப்படும் நபர் ரத்த வெள்ளத்தில் படுக்கையில் மயக்கத்தில் கிடக்க, டாக்டர் ஒருவர் தனது கையில் பெரிய அளவிலான உடல் உறுப்பு ஒன்றை ரத்தக்களரியாக வைத்துள்ளார். மற்றொரு புகைப்படத்தில் கேன்சர் நோயாளியிடம் இருந்து அகற்றப்பட்ட ஒரு பாகத்தை கையில் வைத்துள்ளார்.

இந்த புகைப்படங்களுடன், ‘இந்த உடல் பாகங்களின் எடை என்ன?’,  ‘இவற்றின் சரியான விலையை கணித்திடுங்கள்’, என்பது போன்ற கேள்விகள் இடம் பெற்றுள்ளன. அதோடு, ‘அதிகமாக சொன்னால் கேமில் இருந்து நீங்கள் வெளியேறி விடுவீர்கள்’ என்பது போன்ற எச்சரிக்கைகளும் விடப்படுகின்றன. இதற்கு பலர் பதில் அளித்துள்ளனர். இந்த விவகாரம் டிவி சேனலில் ஒளிபரப்பப்பட்ட பிறகு பெரும் சர்ச்சையாகி உள்ளது. சம்மந்தப்பட்ட டாக்டர்களிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்பெக்டரம் ஹெல்த் மருத்துவமனை தெரிவித்துள்ளது.


Tags : ‘Game show’ asking price for human body parts in the middle of operation: shock by American doctors
× RELATED ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகர...