×

ஆல் இங்கிலாந்து ஓபன் சாதிப்பாரா சிந்து?

பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது. உலக பேட்மின்டன் அரங்கில் மிகவும் பெருமை வாய்ந்த தொடரான இதில், உலக சாம்பியன் பி.வி.சிந்து (இந்தியா) தங்கப் பதக்கம் வென்று சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய வீரர்கள் பிரகாஷ் பதுகோன் (1980), புல்லேலா கோபிசந்த் (2001) ஆகிய இருவர் மட்டுமே இதுவரை ஆல் இங்கிலாந்து தொடரில் பட்டம் வென்று முத்திரை பதித்துள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால் 2015ல் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். மற்றொரு நட்சத்திரம் பி.வி.சிந்து 2018ல் அரை இறுதி வரை முன்னேறியுள்ளார். சமீபத்தில் நடந்த சுவிஸ் ஓபன் பேட்மின்டன் தொடரின் பைனலில் ஸ்பெயினின் கரோலினா மரினிடம் தோற்று 2வது இடம் பிடித்த சிந்து, ஆல் இங்கிலாந்து ஓபனில் பதக்கம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறார்.

கரோலினா மரின் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில் சீன தைபே வீராங்கனை டாய் ட்ஸூ யிங், ஜப்பானின் அகானே யாமகுச்சி மற்றும் கொரியாவின் சுங் ஜி ஹியுன் ஆகியோர் சிந்துவுக்கு சவாலாக இருப்பார்கள். சிந்து (5வது ரேங்க்) தனது முதல் சுற்றில் மலேசியாவின் சோனிலாவை எதிர்கொள்கிறார். சாய்னா தனது முதல் சுற்றில் மியா பிலிக்பெல்ட்டுடன் (டென்மார்க்) மோதுகிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், பாருபள்ளி காஷ்யப் ஆகியோர் மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்குகின்றனர். இவர்களுக்கு ஜப்பானின் நம்பர் 1 வீரர் கென்டோ மொமோடோ கடும் சவாலாக விளங்குவார். இரட்டையர் ஆட்டங்களையும் சேர்த்து மொத்தம் 19 பேர் அடங்கிய இந்திய அணி இத்தொடரில் பங்கேற்கிறது.


Tags : Sindhu ,England Open , Will Sindh win the England Open?
× RELATED பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்