×

77* ரன் விளாசினார் கோஹ்லி இங்கிலாந்துக்கு 157 ரன் இலக்கு

அகமதாபாத்: இந்திய அணியுடனான 3வது டி20 போட்டியில், இங்கிலாந்து அணிக்கு 157 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மோடி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இந்திய அணியில் சூரியகுமார் யாதவுக்கு பதிலாக ரோகித் ஷர்மா இடம் பெற்றார். இங்கிலாந்து அணியில் டாம் கரன் நீக்கப்பட்டு மார்க் வுட் சேர்க்கப்பட்டார். இது இயான் மோர்கன் விளையாடும் 100வது சர்வதேச டி20 போட்டியாகும். இந்த பெருமையைப் பெறும் முதல் இங்கிலாந்து கேப்டன் என்ற பெருமை மோர்கனுக்கு கிடைத்துள்ளது. ரோகித், கே.எல்.ராகுல் இருவரும் இந்திய இன்னிங்சை தொடங்கினர். ராகுல் ஒரு ரன் கூட எடுக்காமல் மார்க் வுட் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி ஏமாற்றமளித்தார்.

இவர் கடந்த 3 இன்னிங்சில் 1, 0, 0 என சொதப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. ரோகித் 15 ரன் எடுத்து வுட் வேகத்தில் ஆர்ச்சர் வசம் பிடிபட்டார். இஷான் கிஷன் 4 ரன் எடுத்து ஜார்டன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, இந்தியா 5.2 ஓவரில் 24 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், கோஹ்லி - ரிஷப் பன்ட் ஜோடி 4வது விக்கெட்டுக்கு உறுதியுடன் போராடி 40 ரன் சேர்த்தது. பன்ட் 25 ரன் (20 பந்து, 3 பவுண்டரி) எடுத்து, துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 9 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இந்தியா 14.3 ஓவரில் 86 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், கோஹ்லியுடன் ஹர்திக் இணைந்தார். இருவரும் கடைசி கட்டத்தில் அதிரடியில் இறங்க இந்திய ஸ்கோர் வேகம் எடுத்தது.

கோஹ்லி 37 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் அரை சதம் அடித்தார். ஜார்டன் வீசிய கடைசி பந்தில் ஹர்திக் (17 ரன், 15 பந்து, 2 சிக்சர்) ஆட்டமிழக்க, இந்தியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன் குவித்தது. கடைசி 5 ஓவரில் மட்டும் இந்தியாவுக்கு 69 ரன் கிடைத்தது. கோஹ்லி 77 ரன்னுடன் (46 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் மார்க் வுட் 3, ஜார்டன் 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து. 20 ஓவரில் 157 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் இருவரும் துரத்தலை தொடங்கினர். ராய் 9 ரன் எடுத்து சாஹல் சுழலில் ரோகித் வசம் பிடிபட்டார்.

* ரசிகர்களுக்கு ‘நோ’
அகமதாபாத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளிடையே நடக்க உள்ள 4வது மற்றும் 5வது டி20 போட்டிகள் பூட்டிய அரங்கில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

Tags : Kohli ,England , Kohli scored 77 * to give England a 157-run target
× RELATED டி20 உலக கோப்பையில் விராட் கோஹ்லி நீக்கமா?: முன்னாள் வீரர்கள் காட்டம்