×

ஏபிபி- சி ஓட்டர் கருத்துக் கணிப்பிலும் உறுதி தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: 161 முதல் 169 தொகுதிகளில் வெற்றியை குவிக்கும்: மே.வங்கத்தில் மம்தா, கேரளாவில் பினராய் ஆட்சி

புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என ஏற்கனவே பல்வேறு கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டுள்ள நிலையில், ஏபிபி - சி ஓட்டர் நடத்திய சமீபத்திய கருத்து கணிப்பிலும் திமுக கூட்டணி 161 - 169 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெறும் என தெரிய வந்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள மேற்கு வங்கம், தமிழகம், அசாம், கேரளா, புதுச்சேரியில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள், மே 2ம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், பல்வேறு ஊடகங்கள், பிரபல அமைப்புகள் நடத்திய, நடத்தி வரும் கருத்து கணிப்புகளின் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே, பல்வேறு ஊடகங்களும், அமைப்புகளும் வெளியிட்டுள்ள கருத்து கணிப்புகளில், தமிழகத்தில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளன. இந்நிலையில், ‘ஏபிபி - சி ஓட்டர்’ நடத்திய கருத்துக் கணிப்பு முடிவும் தற்போது வெளியாகி இருக்கிறது. இதிலும், தமிழகத்தில் திமுக அதிக இடங்களை பிடித்து ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
‘ஏபிபி - சி ஓட்டர்’ வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு முடிவுகளின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 161 - 169 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும். இதற்கு, 43 சதவீத வாக்குகள் கிடைக்கும்.
* அதிமுக கூட்டணி 53 - 61 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியை தழுவும். இந்த கூட்டணிக்கு 30.6 சதவீத வாக்குகள் கிடைக்கும்.
* நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 2-6 இடங்களில் வெற்றி பெறும். இதற்கு, 7 சதவீத வாக்குகள் கிடைக்கும்.
* டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக 1-5 இடங்களை பிடிக்கும். இதற்கு, 6.4 சதவீத வாக்குகள் கிடைக்கும்.
* மற்ற உதிரி கட்சிகள் 12.3 சதவீத வாக்குகளை பெற்று, 3 - 7 இடங்களில் வெற்றி பெறும்.
* திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக வேண்டும் என்று 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
* எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வர வேண்டும் என்று 29.7 சதவீத மக்கள் கருத்து கூறியுள்ளனர்.
* அதிமுக அரசின் மீது 48 சதவீத மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இவர்கள் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என கூறியுள்ளனர்.
புதுச்சேரி
* புதுச்சேரியில் ஏஐஎன்ஆர்சி - பாஜ - அதிமுக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி, 16-20 இடங்களில் வெற்றி பெறும். இதற்கு 45.4 சதவீத வாக்குகள் கிடைக்கும்.
* காங்கிரஸ் - திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 40.7 சதவீத வாக்குகளை பெற்று, 10 -14 தொகுதிகளில் வெற்றி பெறும்.
கேரளா
* கேரளாவில் தற்போதைய ஆளும் கட்சியான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்), 77 - 85 இடங்களை பிடித்து ஆட்சியை தக்கவைக்கும்.
* இம்மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்). 54 - 62 இடங்களை பிடிக்கும் வாய்ப்புள்ளது.
* பாஜ கூட்டணி 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளது.
அசாம்
* அசாம் மாநிலத்தில் பாஜ தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 64 - 72 இடங்களை கைப்பற்றி, ஆட்சியை தக்கவைக்கும்.
* காங்கிரஸ் கூட்டணி 52 - 60 இடங்களை பிடிக்கும்.
மேற்கு வங்கம்
* மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 150 - 166 இடங்களை பிடித்து, 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும்.
* பாஜ.வின் தேசிய ஜனநாயக கூட்டணி 98 - 114 தொகுதிகளை கைப்பற்றி, 2வது இடத்தை பிடிக்கும்.
* காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணி 23 - 31 இடங்களில் வெற்றி பெறும்.

தமிழகத்தில் ஏபிபி - சி ஓட்டர் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வருமாறு
கட்சிகள்    இடங்கள்
திமுக         161-169
அதிமுக          53-61
மக்கள்நீதி மய்யம்      2-6
அமமுக         1-5
மொத்த தொகுதிகள் 234

Tags : APP- ,Otter ,DMK ,Tamil Nadu ,Mamata Banerjee ,Binarai ,Kerala , APP-C voter poll also confirms DMK rule in Tamil Nadu: Will win in 161 to 169 constituencies: Mamata Banerjee in May, Binarai rule in Kerala
× RELATED பகுதி நேர வேலைக்கு ஆசைப்பட்டு...