×

ஜான் பாண்டியன் மீது 2 குற்ற வழக்குகள் சைதை துரைசாமி மீது 3 வருமானவரி வழக்கு நிலுவை: வேட்புமனு சொத்து பட்டியலில் தகவல்

சென்னை: எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் மீது 2 குற்ற வழக்குகளும், சைதாப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி மீது 3 வருமான வரி வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக அவர்கள் தாக்கல் செய்த சொத்து பட்டியலில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம்தேதி நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12ம்தேதி தொடங்கியது. ஆனாலும் தற்போதுதான் அனைத்து கட்சிகளிலும் தொகுதி பங்கீடுகள் இறுதிக்கு வந்துள்ளன. இதனால் நேற்று முன்தினம் திமுக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சியின் முக்கிய பிரபலங்கள் அனைவரும் தங்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த வேட்பு மனுக்களுடன் அவர்களின் சொத்து பட்டியல்களையும் தாக்கல் செய்துள்ளனர்.

 அதன்படி, சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் தனது சொத்து பட்டியலில், கையிருப்பாக 5 லட்சத்து 32 ஆயிரத்து 140ம், அவரது மனைவி மல்லிகா துரைசாமியின் கையிருப்பாக 86 லட்சத்து 75 ஆயிரத்து 777ம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.  அதேபோன்று, தனது பெயரில் 4 கோடியே 8 லட்சத்து 12 ஆயிரத்து 937 மதிப்பில் அசையும் சொத்துகளும், மனைவி பெயரில் 4 கோடியே 35 லட்சத்து 60 ஆயிரத்து 751 மதிப்பிலான அசையும் சொத்துகளும் 25 கோடியே 75லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளதாக கூறியுள்ளார். சைதை துரைசாமியின் பெயரில் 6 கோடியே 60 லட்சத்து 78 ஆயிரத்து 917ம், மனைவி பெயரில் 2 கோடியே 49 லட்சத்து 41 ஆயிரத்து 630ம் கடன் பொறுப்புகளாக உள்ளன. இதுதவிர 3 வருமான வரி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் எழும்பூர் (தனி) தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது சொத்து பட்டியலில், தனது பெயரில் 4 கோடியே 22 லட்சத்து 6 ஆயிரத்து 504க்கும், மனைவி பிரிசில்லா பாண்டியன் பெயரில் 5 கோடியே 62 லட்சத்துக்கும், மகன் வியங்கோ பாண்டியன் பெயரில் 57 லட்சத்து 28 ஆயிரத்துக்கும், மகள் வினோலின் நிவேதா பெயரில் ₹28 லட்சத்து 19 ஆயிரத்துக்கும் வங்கி கணக்கில் பணம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்கள் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.  

தனது பெயரில் 1 கோடியே 14 லட்சத்து 79ஆயிரம் மதிப்பில் அசையும் சொத்துகளும், 80லட்சத்து 18ஆயிரம் மதிப்பில் அசையா சொத்துகளும் உள்ளன என்றும், மனைவி பெயரில் 1 கோடியே 90 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பில் அசையும் சொத்துகளும், 75லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் அசையா சொத்துகளும், மகன் பெயரில் 16 லட்சத்து 52ஆயிரம் மதிப்பில் அசையும் சொத்துகளும், 35 லட்சம் மதிப்பில் அசையா சொத்துகளும், மகள் பெயரில் 17 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் அசையும் சொத்துகளும் உள்ளன என்றும் சுட்டிகாட்டியுள்ளார். தனது பெயரில் வங்கிக் கடன் இல்லை என்றும், மனைவி பெயரில் 10லட்சம் வங்கிக்கடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். தன் மீது 2 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Tags : John Pandian ,Saitai Duraisamy , 2 criminal cases against John Pandian, 3 income tax cases pending against Saitha Duraisamy
× RELATED நெல்லையில் ஜான்பாண்டியன் குடும்பத்தினருடன் வாக்களிப்பு