கவர்னருக்கு அதிகாரமளிக்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: கெஜ்ரிவால் இன்று போராட்டம்: அமைச்சர் ராய் அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லி துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்கும் டெல்லி சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற உள்ளதாக அமைச்சர் கோபால்ராய் தெரிவித்துள்ளார். இதில் அனைத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறினார்.

டெல்லி யூனியன் பிரதேசத்தில் துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்கும் வகையில் சட்டத்திருத்த மசோதா-2021ஐ மத்திய அரசு நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இதன்படி, ‘டெல்லி அரசாங்கம் என்பது துணை நிலை ஆளுநர் தான்’ என கூறப்பட்டுள்ளது.

இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் சிசோடியா ஆகியோர் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக, துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜந்தர் மந்தரில் இன்று கெஜ்ரிவால் தலைமையில் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அமைச்சர் கோபால்ராய் நேற்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் இன்று போராட்டம் நடைபெறவுள்ளது. இதில், டெல்லி மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்பார்கள். டெல்லி அரசாங்கத்தின் அதிகாரங்களை பறிக்கும் மத்திய அரசின் முயற்சி அரசியலமைப்புக்கு எதிரானது மட்டுல்ல.

கண்டிக்கத்தக்கதாகும். டெல்லியில்  மக்களால தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு  முயற்சிக்கிறது. நாடு முழுவதும் டெல்லி அரசு பிரபலமடைந்து வருவது மத்திய அரசின் கண்ணை உறுத்துகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரங்களை  கட்டுப்படுத்த பாஜ தலைமையிலான மத்திய அரசு சதி செய்து உச்சநீதிமன்ற அரசியலமைப்பு பெஞ்சின் தீர்ப்பை மீறி செயல்பட மத்திய அரசு முயற்சிக்கிறது. இவை அனைத்தும் டெல்லி அரசின் அதிகாரங்களை  கட்டுப்படுத்துவதற்கும் அதன் வளர்ச்சியைக் தடுப்பதற்கும் தான் பாஜ அரசால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், டெல்லி அரசு தனது எந்த முடிவை எடுத்தாலும், அதை செயல்படுத்த ஆளுநரின் கருணையால் தான் செய்ய இயலும். எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜந்தர் மந்தரில் இன்று நண்பகல் 2 மணியளவில் போராட்டம் நடைபெறும்.

முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் பங்கேற்பார்கள். இவ்வாறு ராய் தெரிவித்தார். முதல்வர் கெஜ்ரிவால் இந்த மசோதாவுக்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் தனது கண்டனத்தை நேற்று முன்தினம் பதிவு செய்து இருந்தார். அதில், டெல்லியை பொருத்தவரை அரசாங்கம் என்பது துணை நிலை ஆளுநர் தான் என்கிறது இந்த மசோதா. அப்படியானால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு என்ன வேலை? . இதுமட்டுமின்றி, அரசின் அனைத்து கோப்புகளும் துணை நிலை ஆளுநருக்கு ஒப்புதலுக்காக அனுப்ப வேண்டும் என்கிறது மசோதா. இது உச்ச நீதிமன்ற  அரசியலமைப்பு அமர்வின் தீர்ப்புக்கு எதிரானதாகும் என பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>