×

மராத்தியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதால் பெலகாவியை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்: சிவசேனா வலியுறுத்தல்

பெங்களூரு: கர்நாடகாவில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகளவில் வாழும் பெலகாவியை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியுள்ளது. கர்நாடகாவில் உள்ள கார்வார், பெலகாவி மற்றும் நிப்பானி போன்ற பகுதிகளில் பெருமளவில் மராத்தி மொழி பேசும் மக்கள் வாழ்கிறார்கள். இந்த பகுதிகளை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்று அப்பகுதிகளில் வாழும் மராத்தியர்கள் கோருகிறார்கள். அதற்கு சிவசேனா உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கின்றன. இது தொடர்பான வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பெலகாவியை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று சிவசேனா கட்சி பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: பெலகாவியில் வாழும் மராத்தியர்கள், கன்னட அமைப்புக்களால் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். இந்த தாக்குதல்கள் இன்னமும் தொடர்கிறது. மராத்தியர்களின் கடைகளில் இருக்கும் மராத்தியில் எழுதப்பட்ட பெயர் பலகைகளை அகற்றுகிறார்கள்.
மராத்தியர்களுக்கு ஆதரவான சமூக வலைதளங்களும் குறிவைக்கப்படுகின்றன. கர்நாடகா போலீசாரும் மராத்தியர்களை தொந்தரவு செய்கிறார்கள். மராத்தியர்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால், மத்திய அரசு பெலகாவியை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும். இந்த பிரச்னையை மகாராஷ்டிரா மாநில பாரதிய ஜனதா தலைவர் தேவேந்திர பட்நவிஸ் மத்திய அரசிடமும் கர்நாடகா முதல்வரிடமும் எடுத்துச் செல்ல வேண்டும். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரிலும், குஜராத்தில் உள்ள வதோதராவிலும் மராத்தியர்கள் வாழ்கிறார்கள்.

ஆனால் அவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் மோதல் ஏற்பட்டதே இல்லை. வெவ்வேறு மொழிகள் பேசும் மக்கள் பலவருடங்களாக மகாராஷ்டிராவில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை மராத்தியர்கள் பகைமையுடன் நடத்தியதே இல்லை.மராத்தியர்கள் மீது தாக்குதல் சம்பவங்களை கர்நாடகாவை ஆளும் பாரதிய ஜனதா அரசு நடத்தும் விதத்தை பார்க்கும் போது குற்றவாளிகளுக்கு அந்த மாநில அரசு உதவுகிறதோ என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது. மகாராஷ்டிரா-கர்நாடகா மாநிலங்கள் இடையேயான எல்லை பிரச்னை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது. அப்படி இருக்க கர்நாடகாவில் மராத்தி மொழி மக்களை இந்த மாதிரி நடத்துவது சட்டவிரோதமாகும். இவ்வாறு சாம்னா தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.



Tags : Shiv Sena ,Belgaum ,Union Territory ,Marathas , Shiv Sena insists Belgaum should be declared a Union Territory as attacks on Marathas continue
× RELATED உத்தவின் சிவசேனா போலி: அமித் ஷா கண்டுபிடிப்பு