×

5 ஆண்டுக்கு பின் வரும் உங்களுக்கு ஓட்டு போடணுமா? திண்டுக்கல் சீனிவாசனை சென்ற இடமெல்லாம் மக்கள் முற்றுகை

திண்டுக்கல்: பிரசாரத்திற்கு சென்ற இடங்களில் எல்லாம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அமைச்சர் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் போட்டியிடுகிறார். நேற்று காலை பாலதிருப்பதி பகுதியில் பிரசாரம் செய்ய வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், திடீரென அமைச்சர் வந்த ஜீப்பை முற்றுகையிட்டனர். ‘‘நீங்கள் 5 ஆண்டுக்கு ஒருமுறைதான் ஓட்டு கேட்டு வருகிறீர்கள். நாங்கள் எதற்கு உங்களுக்கு ஓட்டுப் போட வேண்டும். எங்கள் பகுதிக்கு எந்த வசதியும் செய்து கொடுக்கவில்லை’’ என்று வாக்குவாதம் செய்தனர். இதனால் திகைத்துப்போன அமைச்சர், ஜீப்பில் இருந்து கீழே இறங்கினார். பதில் சொல்லத்தான் வருகிறார் என்று காத்திருந்த மக்களுக்கு கல்தா கொடுத்துவிட்டு, அருகில் நின்ற காரில் ஏறி புறப்பட்டு சென்றுவிட்டார். இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அமைச்சருக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அமைச்சரின் மகன் ராஜ்மோகன் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ‘‘உங்களுடைய கோரிக்கை அனைத்தும் தேர்தலுக்கு பின் நிறைவேற்றப்படும். இப்போதைக்கு கலைந்து செல்லுங்கள்’’ என்று மக்களிடம் கெஞ்சினார். ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே திரண்டிருந்ததால், கட்சியினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பாண்டியம்மாள் கூறுகையில், ‘‘எங்களுக்கு குடிநீர், சாக்கடை, மின்சாரம் என எந்த வசதியும் செய்து கொடுக்காமல் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 5 ஆண்டுகள் ஏமாற்றி விட்டார். இப்போது மட்டும் ஓட்டு கேட்டு வந்துள்ளார். அதனால்தான் அவரை வர விடாமல் நாங்கள் முற்றுகையிட்டோம்’’ என்றார். மேலும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிரசாரம் செய்யச் சென்ற காமராஜர் புரம், லயன் தெரு, செல்லாண்டி அம்மன் கோயில் பகுதிகளிலும், மக்கள் திரண்டு வந்து அவருக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சென்ற இடமெல்லாம் திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிர்ப்பு கிளம்பி இருப்பது அவருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிலிண்டர் விலை 5,000
அடுப்புக்கு டீசல் வேண்டாம்: பிரசாரத்திலும் உளறல் காமராஜபுரத்தில் நடந்த பிரசாரத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘‘ஒரு சிலிண்டரின் விலை 4,800 ரூபாயில் இருந்து 5,000 ரூபாய் வரை உள்ளது. எனவே குடும்ப தலைவிகளுக்கு வருடந்தோறும் 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் வீடுதோறும் சோலார் அடுப்பு வழங்கப்படும். இந்த சோலார் அடுப்புக்கு டீசல் தேவை இல்லை’’ என்றார். 6 சிலிண்டர்களின் மொத்த விலையை ஒரு சிலிண்டருக்கும், சோலார் அடுப்புக்கு டீசல் தேவையில்லை என அமைச்சர் உளறிக் கொட்டியதைக் கேட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வழக்கமாக அரசு நிகழ்ச்சிகளில் உளறும் அமைச்சர், தேர்தல் பிரசாரத்தில் அளவுக்கு அதிகமாக உளறுவதால் கட்சியினர் மண்டை காய்ந்து போயுள்ளனர்.

Tags : Dindigul Srinivasan , Do you want to drive after 5 years? Everywhere Dindigul Srinivasan went, people were besieged
× RELATED திண்டுக்கல் கூட்டத்தில் எஸ்டிபிஐ...