×

குமரியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா முககவசம் அணியாமல் மக்கள் அலட்சியம்: சமூக இடைவெளி மறந்து போச்சு அரசு, தனியார் பஸ்களில் சோதனை

நாகர்கோவில்: குமரியில் மீண்டும் கொரோனா அதிகரிக்கும் நிலையில் அரசு பஸ்கள், தனியார் பஸ்களில் நடந்த சோதனையில், முக கவசம் இல்லாமல் அலட்சியத்துடன் பயணிகள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்திலும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளன. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மீண்டும் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயமாக்கப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்து 221 ஆக உள்ளது. 16,876 பேர் குணம் அடைந்துள்ளனர். 261 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை இரட்ைட இலக்கை எட்டி உள்ளது.

தற்போது 84 பேர் சிகிச்சையில் உள்ளனர். பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மீண்டும் முக கவசம் மற்றும் சமூக இடைவெளி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவில் மாநகரில் ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில், மாநகர நகர் நல அலுவலர் டாக்டர் கிங்சால் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் மீண்டும்  முக கவசம் சோதனையில் இறங்கி உள்ளனர். நாள்தோறும்  சோதனை நடத்தி, முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

தனியார் நிறுவனங்கள், ஓட்டல்கள், நகை கடைகள், ஜவுளிக்கடைகள், வர்த்தக நிறுவனங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள நகை கடைகளில் சுகாதார ஆய்வாளர்கள் பகவதி பெருமாள், மாதவன் பிள்ளை மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் நேற்று மாலை சோதனை மேற்கொண்டனர். இதில் முக கவசம் மற்றும் சமூக இடைவெளி உள்பட கொரோனா விதிமுறை பின்பற்றாத 2 நகை கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சில நகை கடைகளில் முக கவசம் இல்லாமல் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை நாகர்கோவில் செட்டிக்குளம் பகுதியில் சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் தலைமையில் அரசு பஸ்கள், தனியார் மினி பஸ்களில் சோதனை நடைபெற்றது. இதில் அரசு பஸ்களில் வந்த பயணிகளில் பெரும்பாலானவர்கள் முக கவசம் அணிய வில்லை. டிரைவர்கள், கண்டக்டர்களும் முக கவசம் அணியாமல் இருந்தனர். அவர்களை எச்சரித்து, இலவசமாக முக கவசம் வழங்கினர். இதே போல் மினி பஸ்களில் முககவசம் அணியாமல் இருந்தவர்களையும் எச்சரித்தனர். ஒரு சிலருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இதற்கிடையே மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாகி உள்ளது.

குறிப்பாக தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இது தவிர 60 வயதுக்கு  மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் தடுப்பூசி  போட்டு வருகிறார்கள். மாவட்டத்தில் கடந்த 13ம்தேதி நிலவரப்படி, மொத்தம்  26,602 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இவர்களில் மொத்தம் 23,543 பேர்  முதற்கட்ட தடுப்பூசியையும், 3,059 பேர் 2ம் கட்ட தடுப்பூசியையும்  போட்டுள்ளனர். நேற்று காவல்துறை உள்பட தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ஆயுதப்படை மைதானம், கலெக்டர் அலுவலகம் மற்றும் ஒன்றிய அலுவலகங்களில் தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் ஏராளமானவர்கள் தடுப்பூசி போட்டனர். தற்போது தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை கடந்துள்ளது.

Tags : Indifference of people not wearing the corona mask on the rise again in Kumari: Forgetting the social gap, the government checks on private buses
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...