×

ரத்த கட்டு சம்பவங்களை தொடர்ந்து 9 நாடுகளில் ஆஸ்டிரா தடுப்பூசிக்கு தடை...உலக சுகாதார அமைப்பு விளக்கம்

லண்டன்: ரத்து கட்டு ஏற்படுவதாக எழுந்த புகாரையடுத்து 9 நாடுகளில் ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி விளக்கம் அளித்துள்ளார். இங்கிலாந்து மற்றும் ஸ்வீடன் நாட்டின் மிக பெரிய மருந்து விற்பனை நிறுவனங்களில் ஒன்றான ஆஸ்டிரா ஜெனிகா, கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்த தடுப்பூசியை போட்டு கொண்ட பின்னர் ஆஸ்திரியா நாட்டு  பெண் ஒருவர் உயிரிழந்ததால், அந்நாடு இந்த தடுப்பூசிக்கு தடை விதித்தது. தொடர்ந்து, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் நார்வே உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் இந்த தடுப்பூசியை தடை செய்தன.  

ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி போட்டு கொண்ட முதியவர்கள் பலருக்கு ரத்த கட்டு ஏற்பட கூடிய பல சம்பவங்கள் தெரிய வந்துள்ளன என அந்நாடுகள் கவலை தெரிவித்து உள்ளன. நார்வே அரசு கடந்த சனிக்கிழமை இந்த தடுப்பூசிக்கு தடை  விதித்தது. தொடர்ந்து அயர்லாந்து அரசும் கடந்த ஞாயிற்றுகிழமை தற்காலிக தடை விதித்தது.  இந்நிலையில், நெதர்லாந்து அரசும்  தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்தி வைத்தது.

இருந்தும், ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி உற்பத்தி நிறுவனம், சேகரித்து வைத்துள்ள பரிசோதனை தரவுகளின் அடிப்படையில், ரத்த கட்டு ஏற்படுவதற்கான ஆபத்து பற்றிய எந்த சான்றுகளும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து  உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ‘ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசியால் இன்றுவரை ரத்த கட்டு ஏற்பட்டதற்கான சான்றுகள் இல்லை.  தடுப்பூசி போடுவது தொடர வேண்டும்.  அதனாலேயே நாம் உயிர்களை காக்க முடியும்’ என்று  தெரிவித்துள்ளது.

இன்றைய நிலையில், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 9 நாடுகள் ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு தடை விதித்து உள்ளன. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், ‘மக்களிடையே பீதியை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. எல்லா நாடுகளுக்கும் ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசியைப் பரிந்துரைக்கிறோம். பல நாடுகள் ரத்த  உறைவு பற்றி புகார் கூறுகின்றன. இந்த சம்பவங்களுக்கும் தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்றார்.


Tags : Astera ,World Health Organization , Astra vaccine banned in 9 countries following blood clotting incidents ... World Health Organization Description
× RELATED உலக சுகாதார நிறுவனம் தகவல்...