×

ஸ்ரீகாளஹஸ்தியில் 10ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம் பக்தர்கள் வெள்ளத்தில் கைலாசகிரி மலையை வலம் வந்த சிவன்-பார்வதி

*முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு நன்றி தெரிவிப்பு

ஸ்ரீ காளஹஸ்தி : ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் 10ம் நாள் பிரமோற்சவத்தையொட்டி நேற்று இரவு சிம்ம வாகனத்தில் ஞானபிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் குதிரை வாகனத்தில் அருள்பாலித்தார்.  

ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரமோற்சவம் கடந்த 6ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, பிரமோற்சவம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி, ஞானபிரசுனாம்பிகை தாயார் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

மேலும், பிரமோற்சவத்தின் ஒவ்வொரு நாளும், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பிரமோற்சவத்தின் 9ம் நாளான நேற்று முன்தினம் சுவாமி, அம்மையார் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், சிவன்-பார்வதி ஆதி தம்பதிகளை வாழ்த்த கைலாசகிரி மலைகளில் வீற்றிருக்கும் முக்கோடி தேவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரமோற்சவத்தின் 10ம் நாளான நேற்று புதுமண தம்பதிகளான சுவாமி, அம்மையார் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட ஜனதா அம்பாரிகளில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் வில் அம்புகள் ஏந்தியும் ஞானபிரசுனாம்பிகை தாயார் புதுமணமகள் சிறப்பு அலங்காரத்தில் கைலாச கிரி மலையில் வலம் வந்தனர்.

இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கைலாசகிரி மலையை சுற்றி வலம் வந்தனர்.  முன்னதாக சிவன் கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் சுவாமி அம்மையார் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டு நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, சுவாமி, அம்மையார் ஜனதா அம்பாரிகளில் அமர்த்தி பக்தர்கள் சுமந்தபடி கைலாச கிரிவலம் சென்றனர். இதில், கோயில் நிர்வாக அதிகாரி பெத்திராஜு   மற்றும் ஸ்ரீ காளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் தம்பதியர்கள் உட்பட  ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
இந்த கிரிவலமானது ஸ்ரீ காளஹஸ்தி அடுத்துள்ள பங்காரம்மன் காலனி, ராமச்சந்திராபுரம், சிவநாதபுரம், கொத்தகண்டிகை, லட்சுமிபுரம் கிராமங்கள் வழியாகச் செல்வதோடு கிராமங்களில் உள்ள 16 மண்டபங்களில் சற்று ஓய்விற்குப் பின்னர் தொடர்ந்து கிரிவலம் நடந்தது.

பின்னர் சகஸ்ர லிங்கேஸ்வரர் கோயில் அருகே உள்ள மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுவாமி அம்மையார்களுடன் ஏராளமான பக்தர்கள் கிரிவலத்தில் கலந்து கொண்டனர். கிரி வலத்திற்கு செல்ல இயல முடியாத பக்தர்கள் எதிர்சேவை மண்டபம் அருகே சென்று புதுமண தம்பதிகளான காளஹஸ்தீஸ்வரரையும் ஞானபிரசுனாம்பிகை தாயாரையும் வரவேற்பது போல் அருகே உள்ள சொர்ணமுகி ஆற்றில் கூடி மகிழ்ந்து சுவாமி தரிசனம் செய்தனர். கிரிவலத்தை தொடர்ந்து, நேற்று இரவு குதிரை வாகனத்தில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் சிம்ம வாகனத்தில் ஞான பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


Tags : Pramorsavam ,Srikalahasti ,Shiva-Parvati ,Kailasagiri hill ,Kolagalam , Sri Kalahasti: On the occasion of the 10th day of Pramorsavam at Sri Kalahasti Shiva Temple, the mother of Gnanaprasunambika awoke last night in a lion vehicle.
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்