பெரணமல்லூர் அருகே ₹3.70 கோடியில் சாலை விரிவாக்க பணி

பெரணமல்லூர் : பெரணமல்லூர் அருகே ₹3 கோடியே 70 லட்சம் மதிப்பில் சாலை விரிவாக்க பணிக்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகிறது.

பெரணமல்லூர் பகுதியிலிருந்து கோழிப்புலியூர் கூட்ரோடு சாலை சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதில் பெரணமல்லூர் பகுதியிலிருந்து ரெட்டிகுப்பம் கூட்ரோடு வரை 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு இரண்டு வழி சாலையாக அமைக்கப்பட்டிருந்தது. மேலும் ரெட்டிகுப்பம் கூட்ரோடு பகுதியில் இருந்து கோழிப்புலியூர் கூட்ரோடு வரை உள்ள விடுபட்ட மூன்று கிலோமீட்டர் தொலைவு ஒரு வழி சாலையாக கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்தது.

இந்நிலையில், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹3 கோடியே 70 லட்சம் மதிப்பில் விடுபட்ட 3 கிலோமீட்டர் சாலையை இருவழி சாலையாக மாற்ற டெண்டர் விடப்பட்டது. அதற்கான ஆரம்பகட்ட பணிகள் கடந்த மாதம் தொடங்கியது. அதன் முதல் கட்டமாக அந்த சாலையில் இரு இடங்களில் தரை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் சாலையின் ஒரு பக்கம் சாலை விரிவாக்கத்திற்கான பள்ளம் தோண்டும் பணி நடந்து முடிந்துள்ளது. இதில் சாலையில் ஒரு பக்கம் பள்ளம் தோண்டி உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு இடையே பயணித்து வருகின்றனர்.இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர்  சாலை விரிவாக்க பள்ளங்களை ஜல்லி கலவை கொண்டு நிரப்பும் பணி ஓரிரு நாட்களில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், ஒரு பக்கம் பணிகள் முடிந்த பிறகு அடுத்த பக்க விரிவாக்க பணிகள் தொடங்க உள்ளதாக தெரிவித்தனர்.

Related Stories:

More