கோபி தொகுதியில் போட்டி அமைச்சர் செங்கோட்டையனுக்கு ரூ.5.50 கோடி சொத்து அதிகரிப்பு

கோபி : தமிழக  பள்ளி கல்வித்துறை அமைச்சராகவும், அதிமுகவில் மூத்த அமைச்சராகவும் உள்ள  கோபியை சேர்ந்த கே.ஏ.செங்கோட்டையன் தற்போது 10வது முறையாக கோபி  தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை கோபி தேர்தல் நடத்தும் அலுவலர்  பழனிதேவியிடம் நேற்று வழங்கினார். அப்போது அவரது சார்பில் 4 வேட்புமனுக்கள்  அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வேட்பாளர் செங்கோட்டையன் கூறும்போது, தமிழகத்தில் 234  தொகுதியிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற உயிரை கொடுத்து உழைக்க தயாராக  உள்ளதாக கூறினர். அதிமுகவில் கே.ஏ.செங்கோட்டையனுக்கு மாற்றாக  குள்ளம்பாளையத்தை சேர்ந்த அவரது உறவினர் செல்வராஜ் வேட்புமனு தாக்கல்  செய்துள்ளார்.

ரூ.5.50 கோடி சொத்து அதிகரிப்பு: கடந்த தேர்தலின்போது,   கே.ஏ. செங்கோட்டையன் பெயரில் ரூ.3 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பு சொத்தும், அவரது மனைவி பெயரில் ரூ.82 லட்சம் என மொத்தம் ரூ.4 கோடியே 36 லட்சம் மதிப்பில்  சொத்துகள் உள்ளதாக அபிடவிட்டில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று வேட்பு மனுதாக்கலின்போது, கே.ஏ.செங்கோட்டையன், அவரது மனைவி ஈஸ்வரி, மகன் இ.எஸ்.கதிர் ஆகியோர் பெயரில் அசையும் சொத்துகளாக ரூ.5 கோடியே 68 லட்சத்து 46 ஆயிரத்து 17, அசையா சொத்துகளாக ரூ.4 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் ரூ.9 கோடியே 80 லட்சத்து 96 ஆயிரத்து 17 ரூபாய் மதிப்பில் சொத்து உள்ளதாக  குறிப்பிட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5 கோடியே 50 லட்சம் மதிப்பிலான சொத்துகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து பாதிப்பு

கே.ஏ.செங்கோட்டையன் நேற்று வேட்பு மனு  தாக்கல் செய்யும் போது கோபி தொகுதிக்குட்பட்ட நம்பியூர், கரட்டுப்பாளையம்,  குருமந்தூர், மொடச்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும் சுமார் 5  ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கோபி பஸ் நிலையம் முன்பு  குவிந்தனர்.

இதனால், ஈரோடு-சத்தி சாலையில் நாய்க்கன்காட்டில் இருந்து  கள்ளிப்பட்டி பிரிவு வரை சுமார் 3 கி.மீ., தூரத்திற்கு கடுமையான வாகன  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தேர்தல் பறக்கும் படை, வீடியோ  கண்காணிப்பு நிலை குழுவினரும் கண்டு கொள்ளாத நிலையில், வாகனங்கள் தாறுமாறாக  செல்லும் நிலை ஏற்பட்டது.

அதிகளவில் கூட்டம் சேர்ந்தால் நடவடிக்கை எடுக்க  வேண்டிய தேர்தல் ஆணையமும் கண்டு கொள்ளவில்லை. கோபியில் சுமார் 4 மணி  நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும்  பெரிதும் அவதிப்பட்டனர்.

அப்போது, பஸ் நிலையம் முன்பு கூகலூரை சேர்ந்த  ஆசிரியர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி நின்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த கார் அவரது கால் மேல் ஏறியது. இதில் காயமடைந்த அவர் கோபி  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக காரின் முன்பக்க  கண்ணாடி உடைக்கப்பட்டது.

Related Stories:

>