×

பல்லாயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகளால் மாஜி மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ‘ஷாக்’

*குடும்பத்தினர் பெயரில் நிலக்கரி சுரங்கம் சரக்கு கப்பல்

*அதிமுக மூத்த நிர்வாகிகள் புகாரால் வெற்றி கேள்விக்குறி

சென்னை : பல்லாயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகள் தன் மீது கூறப்படுவதால் விரும்பிய தொகுதியில் சீட் கிடைத்தும் கூட, வெற்றி பெறுவது சந்தேகமே என்ற அச்சத்தில் முன்னாள் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பரிதவித்து வருகிறார்.அதிமுகவின் ஐவர் அணியில் 2016ம் ஆண்டு வரை முக்கிய தூணாக இருந்தவர் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை என 3 துறைகளில் அமைச்சராக வலம் வந்தவர். கட்சியில், துறைகளில் பல கோடி அளவுக்கு வாரி சுருட்டியதாக எழுந்த தொடர் புகார்களால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அதிரடியாக ஓரம் கட்டப்பட்டவர். அதிகபட்ச தண்டனையாக கடந்த சட்டமன்ற தேர்தலில்  வழக்கமாக நிற்கும் நத்தம் தொகுதியை விஸ்வநாதனுக்கு தராமல், ஆத்தூர் தொகுதியில் நிற்க வைத்தார் ஜெயலலிதா.

குருவுக்கு வாய்ப்பு: திமுகவுக்கு பலமான ஆத்தூர் தொகுதியில் பல கோடிகளை செலவழித்தும், நத்தம் விஸ்வநாதனால் வெற்றி பெற முடியவில்லை. இதனால் 2வது முறையாக ஆட்சியை தொடர்ந்த அதிமுக அமைச்சரவையில் நத்தம் விஸ்வநாதன் அங்கம் வகிக்க முடியவில்லை. மேலும், செக் வைக்க நினைத்த ஜெயலலிதா, ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த, ‘நத்தத்தின்’ குருவான திண்டுக்கல் சீனிவாசனை அமைச்சராக்கி முக்கியத்துவம் கொடுத்தார். இதன்பின், ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை இருந்த இடம் தெரியாமல் இருந்தார் நத்தம் விஸ்வநாதன். ஜெயலலிதா மறைவிற்கு பின், ஓபிஎஸ் அணியில் இணைந்தார். பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. எடப்பாடியுடன் நெருக்கமாகி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியை பெற்றார்.

மீண்டும் நத்தம்: தற்போது மீண்டும் நத்தம் தொகுதியை விரும்பி கேட்டு ெபற்றிருக்கிறார். ஆனால், இவர் மீதான முந்தைய ஊழல் குற்றச்சாட்டுகளை தூசு தட்டி மக்களிடம் கொண்டு செல்ல எதிர்தரப்பு திட்டமிட்டிருப்பதால் நத்தம் விஸ்வநாதனின் வெற்றி வாய்ப்பு இந்த முறையும் பறிபோகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தமுறை வெற்றி பெற்று திண்டுக்கல் மாவட்டத்தில் இழந்த செல்வாக்கை பிடிக்க கங்கணம் கட்டிக் கொண்டுள்ளார் நத்தம் விஸ்வநாதன். இதனால் கோடிகளை கொட்ட தீர்மானித்திருப்பதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நத்தத்தை சேர்ந்த அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:

நத்தம் விஸ்வநாதனின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டதில் ரூ.65 லட்சம் ரொக்கம், வெளிநாடுகளில் பல்லாயிரக்கணக்கான கோடிகள் முதலீடு செய்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. கரூர் மாவட்டம், அய்யம்பாளையம் அன்புநாதனின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ரூ.5 கோடி பணமும் நத்தத்தினுடையது என வருமான வரித்துறை சந்தேகப்பார்வை வீசியது. மேலும், இந்தோனேஷியாவில் 10க்கும் மேற்பட்ட நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயர்களில் வாங்கப்பட்டிருப்பதும் அப்போது பரவலாக பேசப்பட்டது.

குடும்பமே சிக்கியது: நத்தம் விஸ்வநாதனின் ஊழல்களை விரிவாக பட்டியலிட்டு இப்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் அப்போது விடுத்திருந்தே அறிக்கையையே பிரசார ஆயுதமாக எடுத்துச் செல்லப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அனல்மின் நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததிலும் பெரும் ஊழல் நடந்திருந்தது. ரூ.200 கோடி அளவிற்கு பேசப்பட்ட ஊழல் குற்றச்சாட்டில் நத்தம் விஸ்வநாதன் மட்டுமின்றி அவரது மகன் அமர்நாத், மைத்துனர் கண்ணன், முன்னாள் தலைமை செயலாளர் ஞானதேசிகன் உள்ளிட்டோரின் பெயரும் அடிபட்டது. இந்த விவரங்களும் தற்போது சேகரிக்கப்பட்டுள்ளன.

பல்லாயிரம் கோடி சொத்து: ₹279 கோடி வரி பாக்கி என வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ் விவகாரம் கையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வரி பாக்கியின் மூலம் நத்தம் விஸ்வநாதனின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் பல்லாயிரம் கோடி உயர்ந்திருப்பது உறுதியாகி உள்ளது.
இந்த விவகாரங்கள் மக்கள் மன்றத்தில் விளக்கிக் கூறப்படும், என அதிமுக மூத்த நிர்வாகி கூறினர்.

தொடர் ஊழல் குற்றச்சாட்டுகள் ஒரு பக்கமும், எதிர்தரப்பான திண்டுக்கல் சீனிவாசன் கோஷ்டியினர், இவரை மீண்டும் தலைதூக்க விடக்கூடாதென குழிபறிக்கும் வேலையில் ஈடுபடும் உட்கட்சி பூசல் ஒருபக்கமும் வாட்டி வதைப்பதால் நத்தம் தொகுதியில் இந்தமுறை வெற்றிக் கனியை சுவைக்க முடியுமா என்ற சந்தேகம் விஸ்வநாதன் தரப்பினருக்கு அதிகரித்து வருகிறது.

எல்இடி பல்பு மாற்றியதில் ₹3 ஆயிரம் கோடி ஊழல்

மத்திய  அரசின் ‘வெளிச்சத்திற்கான பாதை’ திட்டத்தின் கீழ் நியான் விளக்குகளுக்கு  பதிலாக எல்இடி பல்புகளை மாற்றிய திட்டத்தில்  ரூ.3 ஆயிரம் கோடி அளவிற்கு  ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. தற்போது அந்த விவரமும்  சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் நத்தம்  தொகுதி மக்களிடம் எடுத்துரைக்க எதிர்தரப்பு திட்டமிட்டுள்ளது. இதன்  முதற்கட்டமாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடந்த 5ம் தேதி நத்தம்  விஸ்வநாதன் மேல் புதிய குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பினார்.

Tags : Former Power Minister ,Natham Viswanathan , * Coal mining cargo ship in the name of the family * Success question mark over AIADMK senior executives complaint
× RELATED டிவி விளம்பரத்தில் வருவதுபோல்...