×

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை சுற்றிப் பார்ப்பதற்கான கட்டணம் உயர்வு!: உள்நாட்டு சுற்றுலா பயணிகள் கவலை..!!

டெல்லி: உலக அதிசயங்களில் ஒன்றான டெல்லி அருகே உள்ள தாஜ்மஹாலை சுற்றிப் பார்ப்பதற்கான அனுமதி கட்டணத்தை உயர்த்த ஆக்ரா நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வரலாற்றுச் சின்னமான தாஜ்மஹாலில் அதிக அளவில் மக்கள் கூட்டம் கூடுவதால், நினைவுச்சின்னத்துக்கு ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாப்பதற்காக இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டதாகக் தகவல் வெளியாகியுள்ளது. தாஜ்மஹாலை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க இதுவரை உள்நாட்டினருக்கு 50 ரூபாயும் வெளிநாட்டினருக்கு 1100 ரூபாயும் அனுமதி கட்டணமாக இருந்து வந்தது.

தற்போது திருத்தி அமைக்கப்பட்ட கட்டணத்தின்படி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 30 ரூபாய் உயர்ந்து 80 ரூபாயாகவும், வெளிநாட்டினருக்கு 100 ரூபாய் அதிகரித்து 1200 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளிடம் ஏற்கனவே இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் சார்பில் 200 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பிரதான கோபுர வாசலுக்கு செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகளிடம் கூடுதலாக 200 ரூபாய் கட்டணத்தை வசூலிக்க ஆக்ரா நகர வளர்ச்சி கழகம் தீர்மானித்துள்ளது.

ஆகமொத்தம் தற்போதைய திருத்தி அமைக்கப்பட்ட கட்டணத்தின்படி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டணம் 480 ரூபாயாகவும் வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டணம் 1600 ரூபாயாகவும் உள்ளது. இந்த கட்டண உயர்வால் உள்நாட்டினருக்கு தங்களது பாரம்பரிய சின்னத்தை கண்டுகளிக்க முடியாத நிலை ஏற்படும் என சுற்றுலாப் பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Tags : Taj Mahal , Taj Mahal, Fees, Rise
× RELATED இந்தியாவிலேயே முதல்முறையாக...