×

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி., உள்ளிட்ட பிரிவினருக்கான பணியிடங்கள் நிரப்பப்படவில்லை!: ரமேஷ் பொக்ரியால் தகவல்

டெல்லி: மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான பெரும்பாலான பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இட ஒதுக்கீடு அடிப்படையில் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் நிரப்பப்பட்ட காலி பணியிடங்கள் குறித்த காங்கிரஸ் எம்.பி.க்களின் கேள்விக்கு மக்களவையில் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் ஓ.பி.சி. மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான பெரும்பாலான பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

42 மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்.சி., பிரிவினருக்கான 39 சதவீத பணியிடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கான 42 சதவீத பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கான 52 சதவீத பணியிடங்களும் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன. இந்திரா காந்தி பல்கலைக்கழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான 41 விழுக்காடு, பழங்குடியின பிரிவினருக்கான 49 விழுக்காடு பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. ஓ.பி.சி. பிரிவினருக்கான 67 சதவீத இடங்களும் காலியாக உள்ளன.

ஐ.ஐ.எம். என்று அழைக்கப்படும் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்படவில்லை. பழங்குடியினருக்கான சுமார் 80 சதவீத பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அதாவது எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 24 இடங்களில் வெறும் 5 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டிருப்பது கல்வி அமைச்சரின் அறிக்கை மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.


Tags : SC ,Ramesh Pokri , Federal Institute of Education, SC, ST, Workplace, Pokriyal
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து...