அம்மாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளை தொடர்ந்து பெற்றோர்கள் 5 பேருக்கு கொரோனா: மக்கள் பீதி

தஞ்சை: அம்மாப்பேட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோரில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9 முதல் 12ம் வகுப்பு வரை 1100 மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தது. கடந்த 11ம் தேதி பிளஸ்2 படிக்கும் ஒரு மாணவிக்கு காய்ச்சல் இருந்தது. இதையடுத்து 460 மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் கடந்து 3 தினங்களுக்கு முன்னர் தெரிய வந்ததில் 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து 16 மாணவிகள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 4 மாணவிகள் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் 12ம் தேதி 9, 10 மற்றும் 11ம் வகுப்புமாணவிகள் 619 பேருக்கும், ஆசிரியைகள் 35 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவு நேற்றுமுன்தினம் காலை வந்தது. இதில் மேலும் 36 மாணவிகளுக்கும், ஒரு ஆசிரியைக்கும் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து 37 பேரும் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதுடன், ஒவ்வொரு அறையிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. பாதிக்கப்பட்ட 56 மாணவிகளும் தஞ்சையை சுற்றியுள்ள 15கிராமங்களை சேர்ந்தவர்கள் என்பதால் 24 கிராம மக்களும் அச்சமடைந்துள்ளனர். பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து சுகாதாரத்துறை மூலம் காய்ச்சல் மற்றும் விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வந்தது. மாணவிகளின் 24 கிராமங்களில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு சிறப்பு முகாம் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டது.

மாணவிகள் தொடர்பில் இருந்த உறவினர்கள், அவரது பெற்றோர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. பெற்றோர், உறவினர்கள் என 350 பேருக்கு சோதனை செய்ததில் மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>