×

சென்னையில் லஞ்ச கெடுபிடியால் தொழில் முனைவோர் தூக்கிட்டு தற்கொலை!: முதல்வர், டிஜிபி-க்கு கடிதம் அனுப்பியதால் பரபரப்பு..!!

சென்னை: சென்னையில் அதிகாரிகளின் லஞ்ச கெடுபிடிகளை தாங்க முடியாமல் இளம் தொழில் முனைவோர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்யும் முன்பாக தன்னிடம் லஞ்சம் பெற்ற அதிகாரிகளின் பட்டியலை முதல்வர், டிஜிபி-க்கு அனுப்பிய அவர், லஞ்ச பணத்தை திரும்ப பெற்று தனது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும்படி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். லட்சத்தால் அதிகாரிகளை வளைத்து காரியத்தை சாதிப்போர் மத்தியில் அதிகாரிகளின் லஞ்ச கெடுபிடி தாங்க முடியாமல் தொழில் முனைவோர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சென்னை அருகே எண்ணூர் சிவகாமி நகரில் வசிக்கும் விக்ரம் என்பவரே உயிரிழந்தவர்.

இவர் அந்த பகுதியில் புதிதாக குடிநீர் சுத்திகரிக்கும் நிலையம் ஒன்றை ஆரம்பித்தார். மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வுப்பெற்ற தமது தாயாருக்கு ஓய்வுகால பலனாக கிடைத்த 22 லட்சம் ரூபாய், இந்தியன் வங்கியில் கடனாக பெற்ற 18 லட்சம், அண்ணன் மனைவியின் நகையை அடகு வைத்து திரட்டிய 8 லட்சம் மற்றும் நண்பர்கள் உதவியால் கிடைத்த பணம் என சுமார் 60 லட்சம் ரூபாயை நிறுவனத்தில் முதலீடு செய்தார். சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதற்கான உரிமம் பெற, அதிகாரிகளை அணுகியபோது பல மட்டத்திலும் லஞ்ச நெருக்கடிக்கு விக்ரம் ஆளானார். அதனால் விரக்தி அடைந்த அவர், ஊர் பொது இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் எண்ணூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விக்ரம் தற்கொலை செய்யும் முன்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக காவல்துறை தலைவர் உள்ளிட்டோருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் எந்தந்த அதிகாரிகள் எவ்வளவு லஞ்சம் பெற்றனர் என்பதை பட்டியலிட்டுள்ளார். ஊர் தலைவருக்கு 6 லட்சம், தலைவரின் தம்பி, உள்ளூர் கவுன்சிலர் மற்றும் வருவாய் ஆய்வாளருக்கு தலா 1 லட்சத்துக்கு மேல். கிராம நிர்வாக அதிகாரிக்கு 2 லட்சத்து 45 ஆயிரம். மின்வாரியத்துக்கு 1 லட்சத்து 80 ஆயிரம். சுகாதார ஆய்வாளருக்கு 15 ஆயிரம் ரூபாய் வீதம் லஞ்சம் கொடுத்ததாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

தம்மிடம் லஞ்சமாக பெற்ற பணத்தை திரும்பப்பெற்று அதனை தமது அண்ணன் விக்னேஸ்வரனிடம் ஒப்படைக்கும்படியும் விக்ரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். லஞ்சம் இல்லாம இருந்தா..இந்நேரம் நான் நல்ல இருந்திருப்பேன். இவங்கள எதாவது பண்ணுங்க சார் என்றும் விக்ரம் தமது கடிதத்தில் உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார். விக்ரம் கடிதம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுயமாக தொழில் தொடங்கிய ஓர் இளைஞரின் வாழ்க்கை அதிகாரிகளின் லஞ்ச வெறியால் அழிந்துவிட்டதாக ஊர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Tags : Chennai ,Chief Minister ,DGP , Chennai, bribery, entrepreneurship, suicide
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...