×

நாலா பக்கம்: புதுவை; கேரளா; மேற்கு வங்கம்; அசாம்

* ஜேஎன்யு மாணவியை களமிறக்கிய மார்க்சிஸ்ட்
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ்  பாஜ இடையேயான பலமான மோதலுக்கு நடுவே 26 வயதான டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவி ஆயிஷி கோஷை களமிறக்கியிருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். ஜமுரியா தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளராக ஜேஎன்யு மாணவர் சங்க தலைவர் ஆயிஷி கோஷ் போட்டியிடுகிறார். கடந்த ஆண்டு ஜேஎன்யு பல்கலை.யில் சில குண்டர்கள் புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்தினர். அப்போது தலையில் ரத்த காயத்துடன் எதிர்த்து போராடி, குண்டர்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர்தான் ஆயிஷி. மிகுந்த போராட்ட குணம் உள்ள ஆயிஷி, நிச்சயம் திரிணாமுல்-பாஜவுக்கு கடும் போட்டி தருவார் என மார்க்சிஸ்ட் நம்புகிறது. தொகுதி பிரச்னைகளை நன்கு அறிந்துள்ள ஆயிஷி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். சிபிஐ தலைவரான கண்ஹையா குமார், சம்யுக்த் விவசாய சங்கம் ஆயிஷிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆயிஷி மேற்கு வங்கத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* விமர்சிக்கப்படும் ஏஐயுடிஎப்
தொழிலதிபர் பத்ரூதின் அஜ்மலைத் தலைவராகக் கொண்டு செயல்படும் ஏஐயுடிஎப், அசாமில் 13 சதவிகித வாக்குகளை வைத்துள்ளது. கடந்த முறை பாஜவுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது. பிராந்திய கவுன்சில் தேர்தலில் ஏற்பட்ட மோதல் காரணமாக தற்போது காங்கிரஸ் மெகா கூட்டணியில் இணைந்துள்ளது.இதனால், பாஜவை மட்டுமே மதவாதக் கட்சி என்று விமர்சித்துக் கொண்டிருந்த பிராந்தியக் கட்சிகள், தற்போது காங்கிரஸையும் மதவாதக் கூட்டணி என்று பிரசாரம் செய்து வருகின்றன. போதாக்குறைக்கு சமீபத்தில் ரஜோர் தால் கட்சித்தலைவர் அகில் கோகாய் சிறையிலிருந்தே அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் ஒரு கடிதம் அனுப்பினார். அதில், ‘பாஜவைப் போலவே ஏஐயுடிஎப் இருக்கும் காங்கிரஸ் கூட்டணியையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்’ என்று தன் கடிதத்தில் கூறியிருந்தது பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. சிறுபான்மை வாக்குகளைக் குறி வைத்து, ஏஐயுடிஎப்பை கூட்டணியில் சேர்த்த காங்கிரஸ் தலைமை, தற்போது இதனால் தர்மசங்கடத்தில் தவித்து வருகிறது.

* புதுச்சேரியில் புதிய கோஷம்
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன. ஆனால் மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள மனித உரிமைகளை நிலை நாட்டும் உறுதிமொழி அளிக்க வேண்டும்.  மாநில மனித உரிமை குழுவை, மனித உரிமை ஆணையமாக மாற்றுவோம் என்ற வாக்குறுதி தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற வேண்டுமென மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் அமைப்பு புதிய கோஷத்தை முன்வைத்துள்ளது. அதுமட்டுமின்றி  அதிகாரிகளின் அலுவலக வளாகங்களில் போராட்டம் நடைபெறுவதற்காக ஒதுக்கப்படும் இடத்தை மக்கள் கருத்துரிமை மேடை என பெயரிட்டு உயிர்ப்புள்ள ஜனநாயகத்தை நிலைபெற செய்வதற்கான அறிவிப்பை இடம்பெற செய்ய வேண்டுமெனவும் தேர்தல் களத்தில் நிற்கும் அரசியல் கட்சிகளை வலியுறுத்தி உள்ளது. இருப்பினும் இந்த கோஷத்துக்கு மக்களின் ஆதரவு கிடைக்குமா? என்பது கேள்விக்குறி தான்.

* தலை தெறிக்க ஓடிய பாஜ வேட்பாளர்
கேரளாவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 115 வேட்பாளர் பட்டியலை பாஜ கடந்த ஞாயிறு வெளியிட்டது. இதில், வயநாடு மாவட்டத்தில் உள்ள மணந்தவாடி பழங்குடியினருக்கான தனித்தொகுதியாகும். இத்தொகுதி வேட்பாளராக பணிய சமூகத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற மணிக்குட்டனின் பெயர் இடம் பெற்றிருந்தது. ஆரம்பத்தில், அவரும் தன்னை போன்ற பெயர் கொண்ட யாரோ ஒருவர் என்று இருந்து விட்டாராம். பிறகு, அது அவர் தான் என்று தெரிய வந்ததும் மனிதர் ஆடி போய் விட்டார். அவர், ``நான் பாஜ. கட்சியிலேயே இல்லை. ஆனால், என் பெயரை வேட்பாளராக அறிவித்துள்ளனர். இத்தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை,’’ என்று கூறி, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு என்று ஒதுங்கி கொண்டாராம். இதனால், மணந்தவாடி, சுல்தான் பதேரி தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேடி பாஜ வலை விரித்துள்ளதாம்.

Tags : Nala ,Kerala ,West Bengal ,Assam , Nala Page: New; Kerala; West Bengal; Assam
× RELATED மேற்கு வங்கத்தில் குண்டு வெடித்து சிறுவன் உயிரிழப்பு..!!