×

டெல்லி ஆட்சி அதிகாரத்தில் ஆளுநருக்கு முழு அதிகாரமளிக்கும் மசோதா மக்களவையில் தாக்கல்

புதுடெல்லி: ஆட்சி அதிகாரத்தில்  டெல்லி துணைநிலை ஆளுநரின் பங்கு மற்றும் அதிகாரத்தை வரையறுக்கும் திருத்த மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.  மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி, டெல்லி  தேசிய தலைநகர பிராந்திய திருத்த மசோதா (என்சிடிடி) 2021ஐ மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
அதன்படி, முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தில்,
* சட்டத்தின் 21வது பிரிவில், கூறப்பட்டுள்ள அரசு’ என்ற வார்த்தை துணைநிலை ஆளுநரை’ குறிப்பதாக மாற்றப்பட வேண்டும். இதற்காக பிரிவு 21ல் புதிதாக துணைப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். ஏனெனில், உச்ச நீதிமன்றம் அரசு  என்று குறிப்பிட்டது துணைநிலை ஆளுநரையே சேரும்.
* சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட எந்தவொரு மசோதாவையும் ஏற்று கொள்ளவோ, நிறுத்தி வைக்கவோ அல்லது ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கவோ துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று கூறப்பட்டுள்ள  24வது பிரிவுடன்,  சட்டப்பேரவை அதிகார எல்லைக்கு அப்பாற்பட்ட எந்தவொரு விஷயத்தையும் வெளியே சொல்லக் கூடாது என்ற புதிய உட்பிரிவு கூடுதலாக சேர்க்கப்பட வேண்டும்.
* 33வது துணைப்பிரிவு (1)ல் அதன் அலுவல் நடத்தை தொடர்பான’ என்ற வார்த்தைகளுக்கு பிறகு, `மக்கள் சபையின் அலுவல் நடத்தை நடைமுறை மற்றும் விதிகளை பாதிப்பதாக இருக்காது,’ என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட வேண்டும்.
* திருத்த மசோதா அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, தலைநகரின் அன்றாட நிர்வாகம் அல்லது நிர்வாக முடிவு தொடர்பாக விசாரணை நடத்த சட்டப்பேரவைக்கோ அல்லது அதன் குழுவுக்கோ அதிகாரம் உண்டு என்று உருவாக்கப்பட்ட விதிகள்  ரத்து செய்யப்பட வேண்டும்.
* துணைநிலை ஆளுநர் அல்லது அவரது அதிகாரிகளால் எடுக்கப்படும் அனைத்து நிர்வாக நடவடிக்கை முடிவுகளையும் துணைநிலை ஆளுநர் கூறியதாக எடுத்து கொள்ள வேண்டும்.
* அரசியலமைப்பு சட்டம் 239ஏஏ.ன் கீழ் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, பேரவை செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்ட சில விஷயங்களில் துணைநிலை ஆளுநர் விதிகளை உருவாக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இந்த மசோதா தவிர, சிறார் சீர்திருத்த மசோதாவை அமைச்சர் ஸ்மிருதி இரானி தாக்கல் செய்தார். அதன்படி, சிறார் சீர்திருத்த பள்ளிகளை கண்காணிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்கள், கூடுதல் மாவட்ட ஆட்சியர்களுக்கு  வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சுரங்கங்கள் மற்றும் தாதுவளங்கள் மேம்பாடு மற்றும் முறைப்படுத்துதல் திருத்த மசோதாவை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மக்களவையில் தாக்கல் செய்தார். கலங்கரை விளக்கம் கப்பல்களுக்கு வழிகாட்டியாக இருப்பதால், அதன்  பெயரை கடல் வழிகாட்டுதல்’ என்று மாற்றி கடல் வழிகாட்டுதல் உதவி மசோதாவை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தாக்கல் செய்தார். அகமதாபாத், கவுகாத்தி, ஹாஜிபூர், ஐதாராபாத், கொல்கத்தா, ரேபரேலி உள்ளிட்ட 6 மருந்தக  நிறுவனங்களுக்கு தேசிய அங்கீகாரம் அளிக்கும் தேசிய மருந்தக கல்வி மற்றும் ஆராய்ச்சி மசோதாவை அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்தார். 74 சதவீத வெளிநாட்டு நேரடி முதலீடுகளை விற்க வகை செய்யும் வகையில் காப்பீடு  சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரும் மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.

தமிழக  நிறுவனத்துக்கு தேசிய அங்கீகாரம் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாடு உணவு தொழில்நுட்ப நிறுவனம், அரியானாவில் குண்ட்லியில் உள்ள உணவு தொழில்நுட்ப நிறுவனங்களை தேசிய நிறுவனங்களாக அறிவித்து  மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

Tags : Bill ,the ,Governor ,Delhi ,Lok Sabha , Bill to give full powers to the Governor in the Delhi ruling power tabled in the Lok Sabha
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு