×

10 வருடம் ஆட்சியில் எதுவும் செய்யாத அதிமுக அரசு தேர்தல் அறிக்கையில் இது செய்வேன் அது செய்வேன் என்பது வேடிக்கை: வேட்புமனு தாக்கல் செய்த உதயநிதி ஸ்டாலின் பேட்டி

சென்னை: பத்து வருடம் ஆட்சியில் எதுவும் செய்யாத அதிமுக அரசு, தற்போது தேர்தல் அறிக்கையில் இது செய்வேன், அது செய்வேன் என்று கூறியுள்ளது வேடிக்கையாக உள்ளது என்று வேட்புமனு தாக்கல் செய்தபின் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி டி.மோகன்ராஜிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர், நிருபர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி: சட்டசபையில் இதே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவருடைய வாயாலே சிஏஏவால் எந்த பாதிப்புமில்லை, திமுக பொய் சொல்கிறார்கள் என்று கூறினார். ஆனால் அதே பழனிசாமி தான் தற்போது தேர்தல் அறிக்கையில் சிஏஏவை வாபஸ் பெறுவோம் என்று சொல்கிறார். இதில் எந்த வாய் உண்மையான வாய் என்று தெரியவில்லை. சிஏஏவுக்கு எதிராக முதலில் இருந்து திமுக எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறது, போராட்டத்தை நம் தலைவர்தான் கையில் எடுத்தார். நான்தான் முதன்முதலாக போராட்டம் நடத்தி அதன் நகலை கிழித்து கைதானேன்.

திமுகவுடைய தேர்தல் அறிக்கையில் தெளிவாக சொல்லியிருக்கிறோம். சிஏஏவை அனுமதிக்க மாட்டோம். முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அதற்கான சட்டத்தை நிறைவேற்றுவோம் என்று தலைவர் உறுதிமொழி கொடுத்துள்ளார். தமிழக மக்கள் மற்றும் சிறுபான்மையினர் மக்களுக்கு யார் பாதுகாப்பாக இருந்து பணியாற்றுவார்கள் என்று கண்டிப்பாக தெரியும். எல்லோரும் வெற்றி வாய்ப்பு இருக்கென்று நினைத்துதான் தேர்தல் களத்தில் இறங்குவார்கள். நானும் அப்படிதான் இறங்கியுள்ளேன். இரண்டு நாட்களாக பிரசாரத்தை ஆரம்பித்து செய்து வருகிறேன், எழுச்சியாக உள்ளது. மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இது ஒன்றும் நியமன பதவியில்லை. வாரிசு அரசியல் என்று சொல்வதற்கு. போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது, அப்படி வாரிசு அரசியல் என்றால் மக்கள் என்னை நிராகரித்துவிடுவார்கள்.

கலைஞர், பேராசிரியர், அண்ணன் அன்பழகன் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த தொகுதி. இது திமுக தொகுதி என்பதால் அரசு பல விஷயங்களை செய்யவில்லை. எனவே அதனை நான் சரிசெய்வேன். 10 வருடம் ஆட்சியில் இருந்து ஏதும் செய்யாத அதிமுக, தற்போது தேர்தல் அறிக்கையில் இது செய்வேன், அது செய்வேன் என்று கூறியுள்ளனர். ஆனால் ஆட்சியில் இல்லாமலே அதையெல்லாம் செய்து முடித்தது திமுக. அதனால் மக்கள் திமுகவின் தேர்தல் அறிக்கையை தான் நம்புவார்கள். தலைவர் கலைஞர் இருந்திருந்தால் நான் போட்டியிடுவதற்கு மகிழ்ச்சியடைந்து இருப்பார். வன்முறையற்ற பாதுகாப்பான ஆட்சியை திமுக மக்களுக்கு கொடுக்கும் என்று தலைவர் ஸ்டாலின் திருச்சி மாநாட்டில் கூறியுள்ளார். கண்டிப்பாக தலைவர் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவார். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Tags : RP ,Stalin , The AIADMK government, which has done nothing in 10 years of rule, will do this in its election manifesto.
× RELATED கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து