×

செல்லுலாய்ட் பெண்கள்

நன்றி குங்குமம் தோழி

அம்மா வேடத்துக்கென்றே பிறந்த எஸ்.என்.லட்சுமி

திரை உலகம் என்பது பல்வேறுவிதமான எதிர்பாராத வினோதங்களை உள்ளடக்கிய துறை. சிலர் முதல் படம் முதல் இறுதி வரை கதாநாயகியாகவே நடித்து தங்கள் சாதனையைக் கொண்டாடுவார்கள். அல்லது ஆரம்ப காலத்தில் கதாநாயகி, சில ஆண்டுகள் இடைவெளியில் அண்ணி, அம்மா என தடம் மாறுவார்கள். வேறு சிலரோ அக்கா, தங்கை வேடம் மட்டுமே ஏற்றுக் கொண்டிருப்பார்கள். சிலரோ வில்லிகள். அதேபோல் அம்மாவாக மட்டுமே நடிப்பதற்கென்றும் சிலர் வந்தார்கள். அவர்களில் அம்மாவாக நடிப்பதற்கென்றே அவதாரம் எடுத்ததைப் போல் தன் இளம் வயது முதலே கதாநாயகர்களின் அம்மாவாக நடித்தவர்களும் பலர் உண்டு.

அவர்களில் முதன்மை இடத்தையே இவருக்கு அளிக்கலாம். அந்த அளவுக்குப் பொறுமை, சாந்தம், ரௌத்ரம், வீராவேசம், நகைச்சுவை, வில்லத்தனம் என்று உணர்வுகளின் கலவையாக வேடங்களில் தன்னைக் கரைத்துக்கொண்ட அம்மாவாக எஸ்.என்.லட்சுமியைச் சொல்லலாம். அம்மா வேடம் மட்டுமல்லாமல் இளம் வயதிலேயே பாட்டி வேடங்களையும் ஏற்கத் தயங்காதவர் அவர். ஒரு நடிகரோ, நடிகையோ எந்த வேடம் ஏற்றாலும் தயங்காமல் அதனோடு ஒன்றி விட வேண்டும். அப்படியானவர்தான் லட்சுமி. அப்போதைய முதன்மைக் கதாநாயகர் களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன்,

ஜெமினி தொடங்கி இப்போதைய இளம் நாயகர்கள் வரை அனைவருக்கும் அம்மாவாக, பாட்டியாக நடித்தவர். கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்று பிடிவாதம் பிடித்தால் காணாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள துறை இது. வாழ்க்கைச் சூழ்நிலைதான் அனைத்தையும் தீர்மானிக்கிறது. அத்துடன் அபாரமான நடிப்பாற்றல் இருந்தாலொழிய இவ்வளவு நீண்ட காலம் இத்துறையில் நீடித்திருக்க இயலாது. அதற்கேற்ப தனக்கான எதிர்காலத்தை அவரே தேர்ந்து கொண்டார். கறாரான நடிப்புப் பேர்வழி. நம் சம காலத்தில் நடித்துக் கொண்டிருந்தவர். நீண்ட கால நாடக அனுபவமே அவருக்கு நீண்ட கால திரையுலக வாழ்க்கைக்கும் கைகொடுத்தது.

கரிசல் பூமி பெற்றெடுத்த பிறவி நடிகை

அப்போதைய ஒன்றுபட்ட இராமநாதபுரம் மாவட்டத்தில் அருப்புக்கோட்டையை அடுத்துள்ள சென்னல்குடி கிராமத்தை அடுத்துள்ள பொட்டல்பட்டி என்ற சிற்றூரில் பிறந்தவர். இப்போது அது விருதுநகர் மாவட்டமாக மாறியிருப்பது வளர்ச்சியின் அறிகுறி என்று கொள்ளலாம். வறுமையைத் தவிர வேறு எதையும் காணாத இளம் பருவம். தந்தையார் நாராயணத் தேவர், – தாயார் பழனியம்மாள்.

பதின்மூன்று குழந்தைகளைக் கொண்ட பெரிய குடும்பம் வறுமையில் இல்லாமல் வளமுடன் எப்படி இருக்கும்? பதின்மூன்றாவதாகப் பிறந்தவர் கடைக்குட்டி லட்சுமி. தனக்கு முன்னதாகப் பிறந்தவர்களால் புறக்கணிப்புக்கு ஆளானவரும் கூட. நண்டும் சிண்டுமாகக் குழந்தைகள் வீடெங்கும் இறைந்து கிடந்த வேளையில், தந்தையாரும் காலமானார் என்றால் அந்தக் குடும்பத்தின் நிலை என்னவாகும்?

அதோகதியாகும். குழந்தைகளை வைத்துக் கொண்டு வாழ வழியின்றித் தவித்த தாயார் பழனியம்மாள்  பொட்டல்பட்டியில் பிழைக்க வழியில்லாமல், குழந்தைகளை அழைத்துக்கொண்டு அருகி லுள்ள வியாபார நகரமான விருதுப்பட்டியில் குடியேறுகிறார். பிழைப்புக்காக ஒரு சிறு ஹோட்ட லிலும் கோயிலிலும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம். ஆண் குழந்தைகள் கல் உடைக்கும் வேலைக்குப் போக, பெண் குழந்தைகளோ வீடுகளிலும் ஹோட்டலிலும் மாவரைத்துக் கொடுக்கும் வேலையைச் செய்தார்கள்.

ஊர் ஊராகப் பயணித்து நாடகம்

போடும் குழுக்கள் மீது அப்போதைய குழந்தைகள் பெரும் காதலே கொண்டிருந் தார்கள். பக்கத்து வீட்டில் குடியிருந்த நடனப் பெண் ஒருவரின் உதவியுடன் லட்சுமியும் அப்படித்தான் சிறு வயதில் பார்த்த நாடகங்கள் மற்றும் நடிப்பின் மீதான கிறக்கத்தில் அத்துறைக்குள் 6 வயதில் நுழைந்தார். பாய்ஸ் கம்பெனி நாடகங்களில் நல்ல நடிப்புப் பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். அந்த ஊரை விட்டு நாடகக்குழு கிளம்பும்போது குழந்தைகளும் வீட்டுக்குத் தெரியாமல் கம்பி நீட்டி விடுவார்கள்.

லட்சுமியும் வீட்டைத் துறந்து நாடகத்தைத் தன் வாழ்க்கை என தேர்ந்து கொண்டார். துறுதுறுப்பான சிறு பெண்ணான அவர் மிகுந்த ஈடுபாட்டுடன் நடனம் ஆடக் கற்றுக் கொண்டார். பல நாடகங்களில் சிறு சிறு வேடங்கள், பெரும்பாலும் சாகசக் காட்சிகளில் நடிப்பது என்று ஊர் விட்டு ஊர் பயணிக்கும் நாடகக்குழுவுடன் பயணித்தார், ஐந்தாண்டுகளுக்குப் பின் ஒருவழியாக சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

ஜெமினி ஸ்டுடியோ அளித்த வாய்ப்பு

அப்போது அவருக்கு பெரு வெளிச்சமாகக் கண்களில் தென்பட்டது மவுண்ட் ரோட்டில் இருந்த ஜெமினி ஸ்டுடியோ. பல பேர் அவ்வாறு வாய்ப்புத் தேடி ஸ்டுடியோ வாசலில் வந்து குவிந்து கொண்டிருந்த காலம் அது. அப்போது ‘சந்திரலேகா’ படத்தின் முரசு நடனத்துக்கான ஒத்திகை நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம். நடனக் கலைஞர்களான நடராஜ், சகுந்தலா இருவரும் மும்முரமாக அனைவரையும் ஆட்டுவித்துக் கொண்டிருந்தார்கள். ஜெமினி ஸ்டுடியோவின் மானேஜராக இருந்தவர் வெங்கட்ராம அய்யர்.

(ஒளிப்பதிவாளர் பாபுவின் தந்தை இவர்) அவரது உதவி மற்றும் சிபாரிசால் முரசு நடனம் ஆடும் வாய்ப்பு கிடைத்ததாக லட்சுமி பதிவு செய்திருக்கிறார். அந்த வாய்ப்பை அளித்த வெங்கட்ராம அய்யரை நன்றி மறவாமல் நினைவுகூர்ந்திருக்கிறார். பிரமாண்டப் படங்களின் கர்த்தா வான ஜெமினி எஸ்.எஸ்.வாசன் 1948ல் தயாரித்தளித்த ‘சந்திரலேகா’ திரைப் படத்தின் மூலம் பெரிய அளவில் இல்லா விடினும், குழு நடனப் பெண்ணாக லட்சுமி யின் திரையுலகப் பிரவேசம் நிகழ்ந்தது. ‘சந்திரலேகா’ படம் என்றதும் இன்றளவும் வியந்து பேசப்படுவது அதன் உச்சக்கட்ட காட்சியில் இடம் பெற்ற மகா பிரம்மாண்ட முரசு நடனம்.

நகைச்சுவை நடிகை டி.பி.முத்துலட்சுமியும் கூட அந்த நடனத்தில் பங்கேற்றவர், எஸ்.என். லட்சுமியும் அதே முரசு நடனத்தின் மூலம் திரைத்துறையில் நுழைந்தவர். இருவருமே கலையின் மீது கொண்ட ஆர்வத்தால் வீட்டைத் துறந்து வெளியேறியவர்கள். ஆனால், படத்தின் டைட்டிலில் முக்கியமான நடிக, நடிகையர் தவிர மற்றவர்களின் பெயர்கள் ’ஜெமினி பாய்ஸ் & ஜெமினி கேர்ள்ஸ்’ என்ற வகைமைக்குள் அடக்கப்பட்டு விட்டது. பின்னாளில் அவர்களே ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என்று கௌரவமாகவேனும் அழைக்கப்பட்டார்கள். அந்தப் படத்துக்குப் பின் 150 ரூபாய் மாதச் சம்பளத்தில் ஜெமினி ஸ்டுடியோவின் கம்பெனி ஆர்ட்டிஸ்டாக பல படங்களில் தலைகாட்டியிருக்கிறார்.

தன் வயதையொத்த நான்கு பெண்களுடன் இணைந்து வீடு வாடகைக்குப் பிடித்து வாழ்க்கையை நடத்தியிருக்கிறார். சிறு பெண்ணாக வீட்டை விட்டு வந்து நாடகக் குழுக்கள், ஸ்டுடியோ வாழ்க்கை என்று அக்காலகட்டத்தில் தனித்து வாழ்ந்த இளம் நடிகையரின் வாழ்க்கை, எத்தனை துயரங்களை அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்திருக்கும் என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வந்தார்கள், நடித்தார்கள், ஜெயித்தார்கள் என்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் பாடு எத்தகையது என்பது பற்றியும் இங்கு யோசிக்க வேண்டியிருக்கிறது.

நாடகப் பயிற்சி அளித்த திரை வாழ்வு

ஆரம்ப காலத்தில் ஞான தேசிகர் என்பவரது குழுவிலும் அடுத்ததாக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் குழுவிலும் இணைந்து பெற்ற பயிற்சியும் அதன் பிறகான தொடர்ச்சியான நடிப்பும் அவருக்குக் கை கொடுத்தன. என்.எஸ்.கிருஷ்ணன் மிகுந்த உதவிகரமாக இருந்துள்ளார். தங்கள் நாடகக்குழு பயணித்த பல ஊர்களுக்கும் லட்சுமியையும் அழைத்துச் சென்றுள்ளார். அத்துடன் டி.ஏ.மதுரத்தின் உதவியாளராகவும் இருந்ததன் மூலம் இருவரின் அன்பையும் முழுமையாகப் பெற்றார் லட்சுமி.

முழுவதும் பெண்களால் நடத்தப்பட்ட நாடகக் குழுக்களில் ஆண் வேடமேற்று நடித்ததுடன் சண்டைக் காட்சிகள், சாகசங்கள் நிகழ்த்துவது என்று கன ஜோராகத் தன் நாடகப் பயணத்தை சிறப்பாகச் செய்துள்ளார் லட்சுமி. முறையாகச் சண்டைப்பயிற்சிகள் பெற்றதனால் அவரால் சாகசக் காட்சிகளில் அநாயாசமாக ஈடுபட முடிந்தது. கலைவாணரின் மறைவுக்குப் பின் எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் அறிவுரையின் பேரில், அவரது சேவா ஸ்டேஜ் நாடகக் குழுவில் இணைந்ததன் மூலம் மேலும் பட்டை தீட்டப்பட்டார்.

கம்பர் ஜெயராமன், முத்துராமன், தேவிகா இன்னும் பல கலைஞர்களைத் திரைத்துறைக்கு அளித்திருக்கிறது சேவா ஸ்டேஜ். ஆரம்ப காலத் திரைப்படங்களில் நடித்தவர்கள் பெரும்பாலும் நாடகத் துறையிலிருந்து வந்தவர்களே. லட்சுமியும் அவர்களில் ஒருவர். சேவா ஸ்டேஜ் நாடகக் குழுவுடன் மட்டும் நின்றுவிடாமல், கே.பாலச்சந்தரின் ‘ராகினி ரிக்ரியேஷன்ஸ்’ குழுவிலும் இணைந்து நடித்தார். அதன் நீட்சியாக பாலச்சந்தர் படங்களிலும் தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

புலியுடன் சண்டையிட்ட வீர தீரப் பெண்ணாக…

‘சந்திரலேகா’ படத்துக்குப் பின் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதற்கு அவர் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. அதன் பிறகும் நாடகங்களே அவருக்குக் கை கொடுத்தன. 2000க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்ததன் மூலம் நடிப்பு, ஆடல், பாடல், சண்டைப் பயிற்சி என மேலும் மெருகேற்றப்பட்டார். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின் ‘நல்ல தங்கை’ படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புள்ள ஒரு பாத்திரத்தை என்.எஸ்.கிருஷ்ணன் பெற்றுத் தந்தார்.

1959ல் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளியான ‘தாமரைக்குளம்’ படத்தில் மறுபிரவேசம். 1960ல் எம்.ஜி.ஆர், –வைஜெயந்திமாலா நடிப்பில் வெளியான ‘பாக்தாத் திருடன்’ படத்தில் சிறுத்தையுடன் சண்டையிடும் காட்சியில் நடித்ததன் மூலம் வீரம் மிக்க பெண்மணி என்று பலராலும் பாராட்டப்பட்டார். அதன் பின் அவருக்குச் சிறு வேடங்கள் என்றாலும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைத்தன. எம்.ஜி.ஆரின் பல படங்களில் அவருக்கு அம்மாவாக நடித்தார்.

எஸ்.என். லட்சுமியின் பாத்திரப் படைப்புகள்

லட்சுமி நடித்த படங்களில் நினைவில் நிற்கும் நடிப்பைப் பல படங்களில் வழங்கியிருக்கிறார். ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் நாகேஷின் அம்மாவாக அவரது நடிப்பு நினைவில் நிற்கக்கூடியது. அம்மா என்றால் கண்ணாம்பா போல கண்களை உருட்டி மிரட்டும் ரகமான அம்மாவோ, அதிர்ந்து கூடப் பேசாமல் ஒரேயடியாகக் கனிவையும் அன்பையும் மென்மையையும் பல படங்களில் கொட்டிய பண்டரிபாய் போலவோ அல்லாமல், கண்டிப்பும் கறாருமாக, அன்பை வெளிக்காட்டாமல் பொத்தி வைக்கும் அம்மாவாக அவரது நடிப்பு மிகச் சிறப்பான ஒன்று.

அம்மாவுக்கும் மகனுக்குமான இயல்பான உரையாடல்களும், அழகின் மீது கொண்ட காதலால் பவுடரும், ஸ்னோவும் திருட்டுத்தனமாக மகன் வாங்கி வர, அதைப் பிடுங்கிக்கொண்டு வந்து அம்மாவுக்கு முன்னால் போடும் அத்தை மகனிடம், ‘அவன் சம்பாத்தியத்தில் அவன் வாங்கிட்டு வந்திருக்கான்’ என்று மகனை விட்டுக் கொடுக்காமல் பேசுவதும், மகன் சர்வராக வேலை செய்தாலும், அவனே ஒரு நடிகனாகி உச்சாணிக் கொம்பில் இருப்பவனாக இருந்தாலும், இரண்டு நிலைமையிலும் மகனை ஒரே மாதிரியாக நினைப்பதும் நடத்துவதும் என இயல்பான ஒரு தாயைக் கண் முன் கொண்டுவந்து நிறுத்தியிருப்பார்.

மகனிடமிருந்து கிடைத்த ஆட்டோ கிராஃப் காகிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு, ‘என்னடா இது கையெழுத்து... கோழிக் கிறுக்கல் மாதிரி...?’ என்று அப்போதும் மகனைக் கரிசனத்துடன் கடிந்து கொள்வதாகட்டும், ‘ஏன்டா, டேய் ... எப்படா கலியாணம் பண்ணிக்கப் போறே?’ என்று கலாய்ப்பதாகட்டும் அனைத்துமே சிறப்பு தான். அதே அம்மாதான், மகனின் புகைப்படம் கீழே விழுந்ததும் பதறுவதும் என நடிப்பின் முழுமையான பரிணாமத்தை எட்டியிருப்பார். நாடகத்திலும் அதே வேடத்தை ஏற்றவர் அவர். அது திரைப் படமாகத் தயாரிக்கப்பட்டபோது, தயாரிப் பாளர் ஏ.வி.மெய்யப்பச் செட்டியார், படத்திலும் லட்சுமியே தாய் பாத்திரத்தை ஏற்க வேண்டுமென்று விரும்பிக் கேட்டுக் கொண்டுள்ளார்.

‘எதிர்நீச்சல்’ படத்தில் மாடிப்படி மாதுவிடம் (நாகேஷ்) ஓயாமல் வேலைகளை வாங்கிக் கொள்வதுடன் அவனுக்குச் சோறு போடும்போதெல்லாம் அதை சொல்லிக் காட்டிக்கொண்டே இருப்பதும், மனப்பிறழ்வுக்கு ஆளாகித் தெளிந்த மகள் பாருவை (ஜெயந்தி) ‘இந்த அனாதைப்பயல் தலையில் கட்ட வேண்டியதுதான்’ என நினைத்துச் செயல்படுவதுமாக அசல் நடுத்தரக் குடும்பத்துப் பெண்ணைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விடுவார். ‘ராமன் எத்தனை ராமனடி’ படத்தில் சிவாஜிக்குப் பாட்டியாக, பேரனை விட்டுக் கொடுக்காமல் பேசினாலும், சாப்பாட்டு ராமனாக அலையும் அவனை அடித்து விளாசுவதிலும் குறையறச் செய்திருப்பார். இளம் வயதிலேயே காது வளர்த்து பாம்படம் அணிந்த தெக்கத்தி சீமைக் கிழவியாக ‘பட்டிக்காடா பட்டணமா’, படத்தில் சிறு வேடமென்றாலும் ஜமாய்த்திருப்பார்.

திருட்டுப் பாட்டியாக நகைச்சுவையிலும் ஜொலித்தவர்

‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தின் மடிசார் கட்டிய பாட்டி சின்னச் சின்னப் பொருட்களைத் திருடி மூட்டை கட்டிக்கொள்வதும் பேத்தி (ஊர்வசி) திரிபுர சுந்தரிக்குத் திருமணம் செய்து வைப்பதில் ஆரம்பித்து, மாப்பிள்ளை காமேஸ்வரனை (கமல்) ஆள் மாறாட்டத்துக்குப்  பயன்படுத்தி அவனை வைத்துப் பணம் சம்பாதிப்பது வரை என நகைச்சுவையிலும் சோபித்தவர். மிக நீண்ட காலத்துக்குப் பின், தான் ஒரு ஸ்டண்ட் நடிகையும் கூட என்பதை உச்சக்கட்ட சண்டைக் காட்சியில் நிரூபித்திருப்பார்.

‘மகாநதி’ படத்தில் துயரம் தோய்ந்த முகத்துடன் தோன்றிய அவரைப் பார்க்கும்போது நம்மையும் அது சட்டெனப் பற்றிக் கொண்டதும் உண்மை. அந்த அளவு பாத்திரத்துடன் ஒன்றிப் போனவர். மகளைப் பறி கொடுத்த பின்னும் மருமகன், பேரக் குழந்தைகளுடன் பொறுப்பான பெண்மணியாக, மாப்பிள்ளையே ஆனாலும் கண்டிக்கத் தவறாதவராக, மருமகன் என்று நினைக்காமல் மகனென்று நினைத்து மீண்டும் அவரது திருமணம் பற்றி யோசிக்காமல் விட்டதும் தன் தவறுதான் என்று மாப்பிள்ளைக்குப் பெண் பார்ப்பது வரை தன் அற்புதமான நடிப்பால் அசத்தியிருப்பார்.

பேரக் குழந்தைகளைக் கண்டிக்கும்போதும், அவர்களுக்குச் சமமாக ‘ஏய்ச்சுப்புட்டாளே பாட்டி ஏய்ச்சுப்புட்டாளே’ என ஆடிப் பாடி, அவர்களுக்கு விளையாட்டுக் காண்பிக்கும்போதும் நம்மை அசர வைத்து விடுவார். இந்தப் படத்துக்காக அவருக்குக் கிடைக்க வேண்டிய தேசிய விருது ஒரு வாக்கு வித்தியாசத்தில் தட்டிப் போனது என்பதும் வேதனையே. இவ்வளவு நீண்ட காலத் திரை வாழ்வில் விருதுகள் என்று எதனையும் பெறாவிட்டாலும் ரசிக மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.

தனிப்பட்ட வாழ்க்கையிலும் தன்னம்பிக்கை மிக்கவராக....

மிகப் பெரிய குடும்பத்தில் பிறந்து, வறுமையிலும் கலை மீது கொண்ட ஈடுபாட்டால் சிறு வயதில் குடும்பத்தைப் பிரிந்து திரைப்படம், நாடகம் என தீவிரமாக இயங்கியவர் தன் குடும்பத்தாருடன் மீண்டும் இணைவதற்கு எட்டு ஆண்டுகள் ஆகியிருக்கிறது. ஆனாலும் தாமரை இலை தண்ணீர் போல ஒட்டியும் ஒட்டாமல் கலையே தன் வாழ்வு என முடிவெடுத்து மிகத் தொலைவில் வசித்தவர். திருமண பந்தத்தில் ஈடுபடாமல் அதைத் தவிர்த்து தனித்தே வாழ்ந்தாலும் உடன் பிறந்த சகோதரர்களின் மகன்கள், பேரக் குழந்தைகளுக்கு உதவிகரமாக இருந்தவர்.

தன் இறுதிக் காலத்தை அவர்களுடன் வாழ்ந்தவர். கார் ஓட்டுவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். நெடுந்தொலைவு பயணம் என்றாலும் சளைக்காமல் தானே தனியாகக் காரோட்டிக் கொண்டு செல்லக்கூடியவர் என்ற பெயரைப் பெற்றவர். புட்டபர்த்தி சாய்பாபாவின் தீவிர பக்தை. நாடகம், திரைப்படங்களை அடுத்து தொலைக்காட்சித் தொடர்களிலும் தன் பங்களிப்பைச் செலுத்தியவர். ஓய்வின்றி இயங்கியவர். 85 ஆம் வயதில் மாரடைப்பு காரணமாக 2012, பிப்ரவரி 20 அன்று காலமானார்.

(ரசிப்போம்!)

எஸ்.என்.லட்சுமி நடித்த திரைப்படங்கள்

சந்திரலேகா, நல்ல தங்கை, தாமரைக்குளம், எங்கள் குலதேவி, நாலு வேலி நிலம், பாக்தாத் திருடன், பணம் பந்தியிலே, அவனா இவன்? துளசி மாடம், சர்வர் சுந்தரம், தெய்வத்தாய், நாணல், கருப்புப் பணம், வாழ்க்கைப் படகு, காக்கும் கரங்கள், மறக்க முடியுமா?, கொடிமலர், சந்திரோதயம், ராமு, அனுபவி ராஜா அனுபவி, தாய்க்குத் தலைமகன், விவசாயி, திருமால் பெருமை, தேர்த்திருவிழா, எதிர் நீச்சல், துலாபாரம், தாமரை நெஞ்சம், ரகசிய போலீஸ் 115, இரு கோடுகள்,

ராமன் எத்தனை ராமனடி, மாட்டுக்கார வேலன், என் அண்ணன், காவியத்தலைவி, நடு இரவில், தேன் கிண்ணம், தெய்வம், தேனும் பாலும், பட்டிக்காடா பட்டணமா?, பாபு, அன்னமிட்ட கை, நான் ஏன் பிறந்தேன்?, வந்தாளே மகராசி, பட்டிக்காட்டுப் பொன்னையா, இதய வீணை, கோமாதா என் குலமாதா, நினைத்ததை முடிப்பவன், சங்கே முழங்கு, பட்டிக்காட்டு ராஜா, இன்று போல் என்றும் வாழ்க, நவரத்தினம், சிட்டுக்குருவி, சிறை, கன்னி ராசி, உதய கீதம், என்னை விட்டுப் போகாதே, அக்னி நட்சத்திரம், மைக்கேல் மதன காமராஜன், சேலம் விஷ்ணு, தேவர் மகன்,

சின்னவர், தங்க மனசுக்காரன், வில்லுப் பாட்டுக்காரன், அம்மா பொண்ணு, எஜமான், மகாநதி, சின்ன வாத்தியார், அருவா வேலு, மைனர் மாப்பிள்ளை, இருவர், நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, ஜீன்ஸ், சங்கமம், சூரியப் பார்வை, பொன்விழா, கள்ளழகர், படையப்பா, வானத்தைப் போல, சிநேகிதியே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், என்னவளே, ஃபிரண்ட்ஸ், நினைக்காத நாளில்லை, குட்டி, ரிதம், பூவெல்லாம் உன் வாசம், விருமாண்டி, வாத்தியார், கள்வனின் காதலி, பிரிவோம் சந்திப்போம், குருவி, சிலம்பாட்டம், துரோகி, மகான் கணக்கு.

- ஸ்டில்ஸ் ஞானம்

Tags : girls ,
× RELATED பாபநாசம் வட்டாரத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி முகாம்