கூட்டணி தொடர்பாக கட்சிகளிடம் பேசுவதில் ஜெயலலிதா அளவுக்கு எடப்பாடியிடம் பக்குவம் இல்லை: பிரேமலதா விஜயகாந்த் ‘பொளீர்’ பேட்டி

சென்னை: ஜெயலலிதா அளவுக்கு எடப்பாடி பழனிசாமியிடம் பக்குவம் கிடையாது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 2011ல் ஜெயலலிதா பிரச்சார பயணத்தை ரத்து செய்து தேமுதிகவுடன் கூட்டணி வைத்தார். நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் விருப்பப்படாத தொகுதிகளை தான் அதிமுக வழங்கியது. கடைசி நிமிடம் வரையில் தொகுதிகளின் எண்ணிக்கையும் உறுதியாகவில்லை. தொகுதிகளும் உறுதியாகவில்லை. இம்முறை அதிமுக தான் எங்களிடம் வந்தார்கள். நாங்கள் செல்லவில்லை. பிரச்சாரத்தை ரத்து செய்து கூட்டணியை உறுதிசெய்த ஜெயலலிதாவின் பக்குவம் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை.

ஆனால் நாங்கள் இந்த கூட்டணி தொடரவேண்டும் என மிகவும் பொறுமையாக இருந்தோம். கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை முதலில் அழைத்துவிட்டு எங்களை இறுதியாக அழைத்தார்கள். இறுதியாக 18 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா கேட்டோம். ஆனால் அவர்கள் 13 தொகுதிகளில் மட்டுமே உறுதியாக இருந்தார்கள். 13க்கும் மேல் தர முடியாது. நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள்ளுங்கள் என சுதிஷிடம் முதலமைச்சர் தெரிவித்துவிட்டார். நாங்கள் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த கடைசி நிமிடம் வரை எடப்பாடியிடம் மன்றாடினோம்  ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. எடப்பாடி பழனிசாமி எப்படி முதலமைச்சர் ஆனார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் நடந்து கொண்டதுபோன்ற அந்த அளவுக்கு பக்குவம் எங்கள் யாருக்கும் கிடையாது.

கடைசி வரை 13  தொகுதிகள் மட்டுமே என்று இருந்ததால் கனத்த இதயத்துடன் கூட்டணியை விட்டு வெளியேறினோம். வருகின்ற வெள்ளிக்கிழமை நான் விருத்தாசலத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறேன். விஜயகாந்த்தின் உடல்நிலை சரியில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் மேலும் சில காலம் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளதால் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் விரைவில் பீனிக்ஸ் பறவை போல் நிச்சயம் மீண்டு வருவார். அவர் கண்டிப்பாக இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபடுவார். இவ்வாறு பிரேமலதா கூறினார். விஜயகாந்த் விரைவில் பீனிக்ஸ் பறவை போல் நிச்சயம் மீண்டு வருவார். அவர் கண்டிப்பாக இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபடுவார்.

Related Stories:

More
>