×

234 தொகுதிகளிலும் வெற்றி உறுதி திமுக தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்து வெளியிட்ட எடப்பாடி: திருவாரூரில் மு.க.ஸ்டாலின் கடும்தாக்கு

திருவாரூர்: திமுக தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்து முதல்வர் வெளியிட்டுள்ளார் என திருவாரூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 16வது சட்டமன்றத்திற்கான தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிரசாரத்தை கலைஞர் பிறந்து வளர்ந்த மண்ணான திருவாரூரில் நேற்று இரவு துவங்கினார். திருவாரூர் தெற்கு வீதியில் நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக வேட்பாளர்களான திருவாரூர் பூண்டிகலைவாணன், மன்னார்குடி டிஆர்பி ராஜா, நன்னிலம் ஜோதிராமன், வேதாரண்யம் வேதரத்தினம் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருத்துறைப்பூண்டி வேட்பாளர் மாரிமுத்து ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார்.

தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் மிகப்பெரிய வெற்றி பெற செய்து எப்படி ஒரு மாபெரும் வெற்றியை நீங்கள் தேடி தந்ததன் வாயிலாக இந்திய வரலாற்றில் 3வது இடத்தில் நாடாளுமன்றத்தில் திமுக இன்று கம்பீரமாக இருந்து வருகிறது. அதை போலவே தமிழகத்திலும் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என ஏற்கனவே தெரிவித்திருந்தேன். அது ஒரு மாதத்திற்கு முன்பு கூறப்பட்ட நிலையில் தற்போது நான் மேற்கொண்டு வரும் பயணம் காரணமாக 234 தொகுதிகளிலும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றிபெறும் நிலை இருந்து வருகிறது. இதனை தனியார் பத்திரிகை நிறுவனத்தின் ஆசிரியர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிமுக வாஷ்அவுட் எனவும் தெரிவித்துள்ளார். அப்படி ஒரு வெற்றியை தேடி, நாடி நான் இங்கே திருவாரூருக்கு வந்துள்ளேன்.

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் நாடு குட்டிச்சுவராகிவிட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கடைநிலையில் உள்ள அமைச்சர்கள் வரையில் அனைத்து துறைகளிலும் ஊழல், கமிஷன் என்ற ஆட்சி நடைபெற்று வந்தது. இது குறித்து உரிய ஆதாரங்களுடன் கவர்னரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் முதல்வர் பதவி வகிக்கும் பழனிசாமியிடம் உள்ள நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் மட்டும் ரூ.3 ஆயிரம் கோடிக்கு ஊழல் செய்யப்பட்டு சம்மந்திக்கு சம்மந்தி டெண்டர் விடப்பட்டது. இந்த முறைகேடு ஊழல் குறித்து உரிய ஆதாரத்துடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த புகாருக்கு உரிய முகாந்திரம் இருப்பதால் சிபிஐ விசாரணை நடத்திட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பழனிசாமி தடை பெற்றுள்ளார். உண்மையில் இந்த வழக்கினை சந்திக்காமல் தடை பெற்றதன் காரணமாக தற்போது வரையில் அவர் முதலமைச்சராக இருந்து வருகிறார். இல்லையெனில் சிறைக்கு சென்று இருப்பார். சிஎம் பதவியும் காலியாகி இருக்கும். எனவே இந்த ஸ்டாலின் முதல்வராவது உறுதி. அதன் பின்னர் இந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும். அப்போது பழனிசாமி உட்பட யாரும் தப்பிக்க முடியாது.

திமுகவின் தேர்தல் அறிக்கையினை ஜெராக்ஸ் எடுத்து தனது தேர்தல் அறிக்கையாக பழனிசாமி வெளியிட்டுள்ளார். திமுகவின் தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை ரூ.1000 என்றால் ரூ.1,500 என்கிறார். முதியோர் ஓய்வூதியம் ரூ.1,500 என்றால் ரூ.2,000 என்கிறார், கல்விக் கடன் தள்ளுபடி என்றால் தானும் தள்ளுபடி செய்வேன் என்கிறார். கூட்டுறவு கடன் தள்ளுபடி என்றால் தானும் தள்ளுபடி என்கிறார். நாங்கள் செய்யப்போவதை தான் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளோம். புதிதாக அறிவிக்கவில்லை. ஏனென்றால் ஏற்கனவே கடந்த தேர்தலின்போது கலைஞர் தெரிவித்தவாறு ரூ.7 ஆயிரம் கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்தார்.

அவரது வழியில் வந்த ஸ்டாலின் நிச்சயம் செய்வேன். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் பலமுறை தெரிவித்தபோதும் நிதி இல்லை என பழனிசாமி தெரிவித்தார். அதன் பின்னர் விவசாயிகள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு கடன் தொகையை தள்ளுபடி செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் கடனை தள்ளுபடி செய்யாமல் உச்சநீதிமன்றத்திற்கு சென்று தடை பெற்றார். ஆனால், இப்போது தள்ளுபடி என்று கூறுகிறார். சாகும் நேரத்தில் சங்கரா சங்கரா என்று தெரிவிப்பார்கள். அதுபோல தான் உள்ளது. விளக்கு அணையும் நேரத்தில் பிரகாசமாக எரியும். அதுபோன்றுதான் பழனிசாமியின் நிலையும்.

எப்படியும் வர மாட்டோம் என்ற எண்ணத்தில் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார். ஆனால், கலைஞர் வழியில் செயல்பட்டு வரும் திமுகவோ சொல்வதை மட்டும் தான் செய்யும். செய்வதை மட்டும் தான் சொல்லும். திமுகதான் ஆளுங்கட்சியாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா காலத்தில் திமுகவின் தொண்டர்கள் அனைவரும் உயிரை பணையமாக வைத்து மக்கள் பணியாற்றியதை மறக்க முடியாது. ஆனால் ஆளும் அதிமுக அரசோ கொரோனாவில் கூட கொள்ளையடித்தது. பிளீச்சிங் பவுடர் போடுவது முதல் துடைப்பம், மாஸ்க் வரையில் அனைத்திலும் ஊழல். திமுக 5 முறை ஆட்சியில் இருந்தபோது மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தற்போது நடைபெற உள்ள தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியை தேடி தரப் போகிறீர்கள். எனது முதல் நன்றி அறிவிப்பு கூட்டமானது திருவாரூரில் நடைபெறும். விடியலை நோக்கி பயணம், கிராமசபா கூட்டம், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்று பல்வேறு வகைகளில் மாநிலம் முழுவதும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வகையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தின் நோக்கமே ஆட்சி பொறுப்பேற்ற 100 நாளில் மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதற்கு இந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு சென்றபோது மக்கள் பெருந்திரளாக திரண்டனர். ஆனால் ஒவ்வொருவரிடமும் பெயர், ஊர் அவர்களுக்கு என்ன குறைபாடு சாலையா, மருத்துவமா என்று கேட்டு அதனை பதிவு செய்து அவர்களுக்காக நம்பர் கொண்ட அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் பிரச்னைகளை அறிந்து செயல்படும் கட்சி திமுக என்பதால் தேர்தல் அறிக்கையில் 505 உறுதிமொழிகள் சொல்லப்பட்டுள்ளன. அனைத்தையும் சொல்வதற்கு இங்கே நேரம் இல்லாததால் குறிப்பிட்ட ஒரு சிலவற்றை மட்டும் சொல்கிறேன். குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை, பெட்ரோல் விலை ரூ.5ம், டீசல் விலை ரூ.4ம் குறைக்கப்படும். சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும். பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும், மகளிருக்கு டவுன் பஸ்களில் இலவச பயணம் அளிக்கப்படும். கொரோனா பாதிப்பின்போது ஏற்கனவே ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டுமென திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டபோது நிதி இல்லை என்று அதிமுக ஆட்சியில் ஆயிரம் மட்டும் வழங்கப்பட்ட நிலையில் மீதமுள்ள ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்கப்படும்.

கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் போடப்படும். 100 நாட்கள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரையில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். மகளிர் சுய உதவி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிக்கைகள் எல்லாம் உறுதியாக நிறைவேற்றப்படும் என்பதை தெரிவித்துகொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். பின்னர் காட்டூரில் கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு தஞ்சைக்கு புறப்பட்டு சென்றார். மக்கள் பிரச்னைகளை அறிந்து செயல்படும் கட்சி திமுக என்பதால் தேர்தல் அறிக்கையில் 505 உறுதி மொழிகள்
சொல்லப்பட்டுள்ளன.

* முதல்வர் அறைக்கே பொது மக்கள் வரலாம்
மு.க.ஸ்டாலின் பேசுகையில், மே 2ம் தேதி தேர்தல் முடிவுக்கு பின்னர் 234 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைவது உறுதி. அதன் பின்னர் 100 நாளில் இந்த பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படும். அவ்வாறு தீர்க்கப்படவில்லை எனில் கொடுக்கப்பட்டுள்ள அட்டை மூலம் யார் வேண்டுமானாலும் கோட்டைக்குள் வரலாம். ஏன் முதல்வர் அறைக்கு கூட வருவதற்கு அவர்களுக்கு தகுதி உண்டு என்றார்.

Tags : Xerox ,DMK ,Edappadi ,MK ,Stalin ,Thiruvarur , Xerox takes DMK election manifesto to victory in 234 constituencies Edappadi: MK Stalin's heavy attack on Thiruvarur
× RELATED தமிழ்நாட்டை இருளில் மூழ்கடித்த...