×

ஆண்டிபட்டிக்கு பதில் அல்வா கொடுத்ததால் முறுக்கிக் கொண்ட ‘முறுக்கோடை’ சமாதானப்பேச்சு நடத்திய ஓபிஎஸ்: சென்னை பயணத்தை ரத்துசெய்து விடியவிடிய சமரசம்

தேனி மாவட்ட அதிமுக துணைச்செயலாளர் முறுக்கோடை ராமர். தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய உறவினர். தேனி மாவட்ட மறவர் சமுதாயத்தின் முக்கிய பிரமுகராகவும் வலம் வருகிறார். இவருக்கு ஆண்டிபட்டி தொகுதியில் சீட் பெற்று தருவதாக ஓபிஎஸ் வாக்குறுதி அளித்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே ஆண்டிபட்டி தொகுதியில் முறுக்கோடை ராமர் முழுவீச்சில் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டார். ஆண்டிபட்டி தொகுதிக்காக பணம் கட்டி விருப்பமனு தாக்கல் செய்தார். ஆனால் ஆண்டிபட்டி தொகுதியை இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த லோகிராஜனுக்கே அதிமுக தலைமை மறுபடியும் வழங்கியது.

இதனால் அதிர்ச்சியடைந்த முறுக்கோடை ராமர் கடும் விரக்தியடைந்தார். அவரிடம் பேசிய உறவினர்கள், சமூக பிரமுகர்கள், ‘‘போடி தொகுதியில் ஓபிஎஸ்க்கு எதிராக களமிறங்குவோம்’’ என கூறியிருக்கிறார்கள். அவர்களை சமாதானப்படுத்திய  முறுக்கோடை ராமர், ‘‘அவர் செய்தது போல் நாமும் பதிலுக்கு செய்யக் கூடாது. அவரிடம் பேசி முடிவெடுப்போம்’’ என்று கூறியிருக்கிறார். இதனிடையே, நேற்று முன்தினம் ஓ.பன்னீர்செல்வம் சென்னை கிளம்பினார்.
அப்போதுதான் முறுக்கோடை ராமரின் உறவினர்கள், சமுதாய நிர்வாகிகள் எடுத்த அதிரடி முடிவு அவரது காதுக்கு எட்டியது. பதறிப்போன ஓபிஎஸ், உடனடியாக சென்னை பயணத்தை ரத்து செய்தார்.

நேற்று முன்தினம் இரவு போடியில் உள்ள ஓபிஎஸ் வீட்டில் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. ஓபிஎஸ்சும், அவரது மகன் ரவீந்திரநாத்தும் முறுக்கோடை ராமரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ‘‘ஆண்டிபட்டி தொகுதியை உங்களுக்கு பெற்றுத்தர பெரும் முயற்சி செய்தேன். ஆனால் முடியாமல் போய்விட்டது. மாவட்டச் செயலாளர் சையதுகானுக்கு கம்பம் தொகுதியில் வாய்ப்பு கொடுத்து விட்டதால் மாவட்டச் செயலாளர் பொறுப்பை உங்களுக்கு கட்டாயம் பெற்றுத் தருகிறேன்’’ என்று ஓபிஎஸ் உறுதி அளித்தாராம்.  

இதனை ஏற்காமல் முறுக்கோடை ராமரும், சமுதாய பிரமுகர்களும் முரண்டு பிடித்ததால் விடியவிடிய பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. கடைசியில் ஒருவழியாக முறுக்கோடை ராமர் தரப்பை சமாதானப்படுத்தியிருக்கிறார்கள். இதன்பிறகே ஓ.பன்னீர்செல்வம் நிம்மதி பெருமூச்சு விட்டார். எனினும் ஆண்டிபட்டி தொகுதி பறிபோன அதிருப்தியில், அங்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு எதிராக குழிபறிக்க முறுக்கோடை ராமர் தரப்பு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : OPS ,Murukkodai ,Alva ,Andipatti ,Chennai , OPS holds 'Murukkodai' peace talks after Alva's response to Andipatti: Cancel travel to Chennai
× RELATED கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மிக...