×

சுற்றுலா பயணிகளை கவரும் ஹெப்பாள் ஏரி: பராமரிப்பு இல்லாமல் பொலிவிழந்த அவலம்: பெங்களூரு நகர்வலம்

பெங்களூரு சர்வதேச விமான நிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஹெப்பாள் ஏரி, முறையான பராமரிப்பு இல்லாமல் தனது பொழிவை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகாய தாமரை மற்றும் குப்பைகள் ஆக்கிரமிப்பதால் ஏரியை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளை முகம் சுழிக்க வைப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பெங்களூருவில் மக்களை அதிகளவு கவர்ந்த இடங்களில் ஏரிகளும் ஒன்று. வனத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை, மாநகராட்சி இணைந்து இந்த ஏரிகளை புனரமைத்து, நடை பயிற்சி செய்வதற்கான பாதைகள் அமைப்பது, காலை, மாலைகளில் ஏரிக்கரைகளுக்கு வருபவர்கள் அமர்ந்து ஓய்வு எடுக்க இருக்கைகள் அமைப்பது என்று பல்வேறு வசதிகள் செய்து கொடுத்து வருகிறது. ஆனால் இந்த வசதிகள் ஒரு சில ஏரிகளில் மட்டுமே இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் மக்கள் பயன்பாட்டிற்காக ஏரிகள் ஒதுக்கப்பட்டாலும், அவை முறையாக பராமரிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

தண்ணீர் அதிகமாக இருக்கும் நேரங்களில் ஏரிகளில் ஆகாயதாமரைகள் அதிகமாக வளர்வது இயல்பு. இதை முன்கூட்டியே அறிந்து அவற்றை தூர்வாறினால், ஆகாய தாமரை வளர்வதை தடுக்கலாம். இதனால் ஏரிகளில் அழகு சீர்குலைந்து, அக்கம் பக்கத்தில் இருக்கும் மக்கள் குப்பைகளை கொண்டு, குளமாக மாறிவிடுகிறது. மாநகராட்சி சார்பில் குப்பைகள் கொட்டக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்தாலும் பயனில்லை.
மேலும் குப்பைகள் கொட்டுவது தடுக்கப்பட்டாலும், மாநகராட்சி மற்றும் வனத்துறை, தோட்டக்கலைத்துறை பராமரிப்பு இல்லாமல் ஏராளமான ஏரிகளில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு செய்து, சுற்றுலா பயணிகளை முகம் சுழிக்க வைத்துவிடுகிறது. அவற்றில் ஒன்று ஹெப்பாள் ஏரி. பெங்களூரு நகரப்பகுதியில் இருந்து பல்லாரி மற்றும் சர்வதேச விமான நிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது இந்த ஹெப்பாள் ஏரி.
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் சாலையில் இருந்து இந்த ஏரியை பார்த்தால் கடல்போன்று காட்சியளிக்கும். அதே நேரம் காலையில் சூரியன் உதிப்பது மற்றும் மாலையில் சூரியன் மறையும் போது இந்த ஏரியை காண கண்கோடி வேண்டும். அந்த அளவிற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது.

மாநில வனத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் தத்தெடுத்து இந்த ஏரியை பராமரித்து வருகிறது. அதாவது பெங்களூரு சுற்றுலா பயணிகளை கவருவதற்காக நடைபயிற்சி பாதைகள், மக்கள் அமர்ந்து ஓய்வு எடுப்பதற்கான இருக்கைகள். சுற்றுலா பயணிகள் ஏரியின் மையப்பகுதிக்கு சென்று பார்வையிட படகு சவாரி என்று பல்வேறு வசதிகள், வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்திருந்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அதன் பொலிவு இழந்து வருகிறது. கடல்போன்று காட்சியளிக்கும் ஏரிக்கரைகளில் இருக்கும் ஆகாய தாமரைகள், முழுவதும் ஏரியை ஆக்கிரமித்து பெருகி வருகிறது. இதனால் படகுகள் சென்றால் சிக்கி கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இதற்கு பயந்து பெரும்பாலனவர்கள் மையப்பகுதி வரை சென்றுவிட்டு திரும்பி வருகின்றனர். மேலும் ஏரியை சுற்றியிருக்கும் பொதுமக்கள் சார்பில், கரையோரங்களில் குப்பைகளை கொட்டுவதால் இந்த, குப்பை தொட்டியாக காட்சியளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் நடைபயிற்சியாளர்கள், உடற்பயிற்சி செய்பவர்களை கவரும் வகையில், இதுவரை எந்தவிதமான பொழுதுபோக்கு அம்சங்கும் இங்கு அமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தவிர ஹிமாலையா மற்றும் மத்திய ஆசிரியாவில் இருந்து 40 முதல் 70 வகையிலான பறவைகள் இந்த ஏரிக்கு வந்து செல்கிறது. அவற்றை வைத்து ஒரு மினி பறவைகள் சரணாலயமாக மாற்றி கொள்ளலாம். ஆனால் அதற்கு வனத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம், குத்தகை எடுத்த தனியார் நிறுவனங்கள் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரியில் கொள்ளவு தற்போது படிப்படியாக குறைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு ஆகாயதாமரைத்தான் காரணம்.மேலும் ஏரிகளை தூர்வாராமல் ஏரிகள் புனரமைப்பிற்கு அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்படும் நிதிகளை முறையாக பயன்படுத்தி இந்த ஏரியை தூர்வாரினால், காலப்போக்கில் பெங்களூருவில் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும். அதே நேரம் வெளிநாட்டு பயணிகளை கவரும் நோக்கில் இந்த ஏரியை மாற்றினால், மெட்ரோ நகரங்கள் மட்டுமில்லை. வெளி நாடுகளில் ஹெப்பாள் ஏரியில் பெயர் கொடிகட்டி பறக்க வாய்ப்புள்ளது. அந்த அளவிற்கு ஹெப்பாள் ஏரியில் சுற்றியிருக்கும் இடங்கள் காட்சியளிக்கிறது. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததால் தற்போது சொற்ப அளவே மக்கள் வந்து செல்வதாக கூறப்படுகிறது.  

தனியார், அரசு கூட்டாக இந்த ஏரியை பராமரிப்பதால் பார்வையாளர்கள் வந்து செல்வதற்கு நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை 9.45க்கு திறக்கப்படும் இந்த ஏரி, மாலை 6 மணிக்கு மூடப்படும். அதற்குள் பார்வையாளர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்லலாம். இதற்காக வயது வாரியாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் போட்டோ கேமரா, வீடியோ கேமரா எடுத்து செல்வதற்கும் தனி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தரப்பில் கூறும்போது;  முறையான பராமரிப்பு மற்றும் வசதி வாய்ப்புகள் இல்லாததால், சுற்றுலா பயணிகள் மற்றும் மக்கள் வரத்து குறைந்து காணப்படுகிறது.

குறிப்பாக ஏரிகளை முறையாக தூர்வாரி, படகு சவாரியை ஊக்குவிக்கவேண்டும். மேலும் ஆகாய தாமரையை அகற்றி, நடைபயிற்சி, உடற்பயிற்சி மையங்கள், மற்றும் பொழுது போக்கு அம்சக்களுக்கான பல்வேறு உபகரணங்கள் அமைத்து கொடுக்கவேண்டும்.  ஏரியை சுற்றி சி.சி.டி.வி கேமராக்கள் அமைந்தால், சுற்றுலா பயணிகள் பயமின்றி, சர்வசாதாரணமாக, வந்து செல்ல முடியும். இவ்வாறு அனைத்து வசதிகளை செய்து கொடுக்கும் போது இந்தியாவிலேயே தலை சிறந்த ஏரியாக இந்த ஹெப்பாள் ஏரி மாற வாய்ப்புள்ளது என்று பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Hebbal Lake ,Bangalore , Tourist, Hebbal Lake, shame
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...