பெங்களூரு சுதந்திர பூங்காவில் 18-ம் தேதி 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம்: போக்குவரத்து கழக மஸ்தூர் சங்க கூட்டமைப்பு தகவல்

பெங்களூரு: ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மார்ச் 18-ம் தேதி பெங்களூரு சுதந்திர பூங்காவில் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று அரசு சாலை போக்குவரத்து கழக மஸ்தூர் சங்க கூட்டமைப்பினர் தெரிவித்தனர். பெங்களூருவில் இது தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் கே. ராமகிருஷ்ணாபூம்ஜா, செயலாளர் மஞ்சுநாதபிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசு சாலை போக்குவரத்து கழகத்தின் தொழிலாளர்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் சுதந்திரா பூங்காவில் தொடர் போராட்டம் நடத்தினர். அப்போது மாநில அரசு சார்பாக கோரிக்கைகள் நிறைவேற்றி கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

அரசின் உறுதியை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் இதுவரை எந்த கோரிக்கையும் நிறைவேற்றவில்லை. அதே போல் மாநில பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கவில்லை. இதில் தொழிலாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதை கண்டித்து வரும் 18-ம் தேதி சுதந்திர பூங்காவில் தர்ணா போராட்டம் நடத்தப்படுகிறது. போராட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வார விடுமுறையில் உள்ள தொழிலாளர்கள் மட்டும் பங்கேற்கவுள்ளனர். இத்துடன் 2011-2019-20 வரை ரூ.3550 கோடியை மாநில அரசு போக்குவரத்து கழகத்துக்கு வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது. இந்த நிதியை உடனே வழங்க வேண்டும். அதே போல் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை முழுமையான வழங்க வலியுறுத்தி கடந்த டிசம்பர் 11-ம் தேதி போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது மாநில துணை முதல்வரும், போக்குவரத்து துறை அமைச்சருமான லட்சுமண்சவதி சங்க நிர்வாகிகளை விதானசவுதாவுக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் 15 நாட்களுக்குள் பணத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஆனால் இதுவரை பணம் வழங்கவில்லை. இதில் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே போல் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போக்குவரத்து துறை நிர்வாகத்தின் அலட்சியம், மாநில அரசின் செயலிழப்பு காரணமாக போக்குவரத்து துறை தொழிலாளர்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். இதனால் தங்களின் 5 அம்ச கோரிக்கையை முன்வைத்து மார்ச் 18-ம் தேதி பெங்களூரு சுதந்திர பூங்காவில் தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்கவுள்ளனர்’’ என்றனர்.

Related Stories:

>