மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகே பைக் திருடனை மடக்கி பிடித்த உரிமையாளர்

சென்னை: மயிலாப்பூரில் திருடுபோன பைக்கை அதன் உரிமையாளர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கண்டுபிடித்து, கொள்ளையனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். மயிலாப்பூர் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் அரிஹரன் (20),  தனியார் நிறுவன ஊழியர். கடந்த 13ம் தேதி இரவு வீட்டின் முன்பு தனது பைக்கை நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது பைக் மாயமாகி இருந்தது. இதுகுறித்து அரிஹரன் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார்  அளித்தார். அதேநேரம், தனது நண்பர்களுடன் சேர்ந்து தனது பைக்கை தேடி வந்தார். அப்போது, மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே 2 பேர், தனது பைக்கை தள்ளிக்கொண்டு வந்ததை பார்த்த அரிஹரன்,  நண்பர்கள் உதவியுடன் அவர்களை மடக்கினார்.

அதில் ஒருவன் தப்பி ஓடிவிட்டான். பைக்குடன் ஒருவனை மட்டும் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில், மயிலாப்பூர் லைட் ஹவுஸ் அருகே பிளாட்பாரத்தில் வசித்து வரும் ரமேஷ் பாதுசிங் (31) என  தெரியவந்தது. இவன் தனது நண்பருடன் சேர்ந்து இரவு நேரங்களில் சாலையோரம் மற்றும் வீடுகள் முன்பு நிறுத்தப்படும் பைக்குகளை தொடர்ந்து திருடி வந்தது தெரியவந்தது. அவனை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய  மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>