×

மேட்டுப்பாளையத்திலிருந்து கோவைக்கு ரூ.30..! கட்டண உயர்வால் ரயில் பயணிகள் குறைந்தனர்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் பயணிகள் ரயில் ஓராண்டுக்குப் பிறகு எக்ஸ்பிரஸ் ரயிலாக இன்று இயக்கப்பட்டது. மேலும் 10 ரூபாயாக இருந்த கட்டணம் 30 ரூபாயாக உயர்த்தப்பட்டதால் குறைவான பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு தினசரி காலை பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா  தொற்று காரணமாக கடந்த 1 வருடமாக ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்  நோய் தொற்று குறைந்ததால் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பணிக்குச் செல்வோர் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவைக்கு செல்லும் பயணிகள் ரயிலை இயக்க கோரிக்கை விடுத்தனர்.

இதை அடுத்து இன்று முதல் மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 8.20 மணிக்கு கோவைக்கும், அதே போல் மாலை 5.55 மணிக்கு கோவையிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கும் ரயில் இயக்கப்படும் என சேலம் கோட்ட ரயில்வே அறிவித்தது. அதன்படி இன்று காலை 8.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு ரயில்சேவை துவங்கியது. மேலும் 10 ரூபாயாக இருந்த கட்டணம் 30 ரூபாயாக உயர்த்தப்பட்டது. மேலும் மேட்டுப்பாளையம் அடுத்து காரமடை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், வடகோவை, கோவை ரயில் நிலையம் என இயக்கப்பட்டு வந்த இந்த ரயில் தற்போது மேட்டுப்பாளையம், காரமடை, வடகோவை மார்க்கமாக கோவை ரயில்நிலையம் சென்றடையும் என்றும் பெரியநாயக்கன்பாளையம்,  துடியலூர் ரயில் நிலையங்களில் நிற்காது என அறிவிக்கப்பட்டது.

இந்த இரு காரணங்களால் இன்று காலை இயக்கப்பட்ட ரயிலில் குறைவான பயணிகளே பயணம் செய்தனர். இது குறித்து பயணிகள் கூறுகையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு செல்ல மெமு ரயில் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும்  பயண கட்டணம் 30 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் வருகை குறைவாக இருக்கும். மேலும் பெரியநாயக்கன்பாளையம் துடியலூர் ரயில் நிலையங்களில் ரயில் நிற்காமல் செல்வதும் பயணிகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்,  கட்டணத்தை குறைத்தும், அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில் நின்று செல்லும் வகையில் இயக்கினால் மட்டுமே பொதுமக்கள் இந்த ரயிலை பயன்படுத்துவார்கள். எனவே ரயில்வே நிர்வாகம் பயண கட்டணத்தை குறைக்க வேண்டும், அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில் நின்று செல்லும் வகையில் ரயிலை இயக்க வேண்டும் என்றனர்.


Tags : Mettupalayam ,Coimbatore , 30 from Mettupalayam to Coimbatore ..! Rail passengers were reduced due to the increase in fares
× RELATED பறக்கும்படை சோதனையில் ரூ.1.17 லட்சம் சிக்கியது