×

ஏளனங்களை ஏணிகள் ஆக்கினார்!

நன்றி குங்குமம் தோழி

104 வயது மூதாட்டியின் தன்னம்பிக்கை பாதை

தாய் நாடு, தாய் மொழி, தாய் மண் என தாய்மையை போற்றும் நமது நாட்டில்தான் பெண்களை போகப் பொருளாகவும் பார்க்கிறார்கள். பெண்கள், ஆண்கள் தயவின்றி வாழ முடியாது என்கிற நிலை இருந்த காலத்திலும் அந்த எழுதப்படாத சட்டங்களை தூக்கி எறிந்து விட்டு, சமூகத்தில் பல விதமான போராட்டங்களை சந்தித்து வெற்றி பெற்ற பல பெண்கள் உண்டு. அந்த வகையில் தான் பிறந்த ஊர், தன்னை சுற்றியிருக்கும் சூழல்கள், சுற்றங்கள், உற்றார்,

உறவினர்கள் என பல விதமான குணம் கொண்ட நபர்களை இனம் கண்டு ஒதுக்கி, சில நேரங்களில் போராடி, தன்னையும் காத்து, தன் குடும்பத்தையும் காப்பாற்றி, சமூகத்தில் உரிய மரியாதையோடும், தன் பிள்ளைகளை ஊர் போற்ற வாழ வைத்த எத்தனையோ பெண்கள் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை அடையாளம் காட்ட வேண்டும் என்ற நோக்கிலும், அவர்களை எந்த வாய்ப்பும் இல்லையே என்ற விரக்தியில் பெண்ணாய் பிறந்ததே பெரும் பாவம் என்று கதறும், கருதும் பெண்கள் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ‘வல்லமை தாராயோ’ என்ற இந்த புதிய பகுதியை வெளியிடுகிறோம். தோழியரே இனியும் கூடாது வெட்கம்.

முறுக்கு செய்து அதை கடைகளிலும், வீடுகளிலும் விற்று தனது குடும்பத்தை காப்பாற்றி உயர்நிலைக்கு கொண்டு வந்த 104 வயதுடைய ஒரு பெண்மணி தன் வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம். அகவை 104 ஆன பின்னும் அரிவை பருவம் எட்டினாலும் எந்த சோம்பலும், தளர்ச்சியும் இல்லாமல் அடுப்பங்கரையில் சமையல் வேலை செய்வதிலும், முறுக்கு சுத்துவதில் இருந்தும் இன்னும் இவர் ஓய்வு பெறவில்லை. அவர் பெயர் தங்கம்மாள். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல் வாய்மொழி அருகேயுள்ள செண்பகராமன் புதூரில் வசிக்கிறார் தங்கம்மாள்.

இவர் இலங்கை, கொழும்பு மாவட்டத்தில் உள்ள கொச்சிக்கடை ஊரில் அந்தோணியார் கோயில் தெருவில் கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். மூத்த மகள் வனஜாவை சிற்ப வேலை பார்ப்பவருக்கு மணமுடித்து வைத்தனர் தங்கம்மாள் தம்பதியினர். மணமுடித்த மறு வருடமே மகளுக்கு மகன் பிறந்தான். கணவருக்கு விவசாய வேலை. அந்த வேலையில் வந்த வருமானத்தை கொண்டுதான் தங்கம்மாள் இலங்கையில் நிம்மதியாக குடும்பம் நடத்தி வந்தார். 1960ல் பண்டாரநாயக்கவின் மனைவியான சிறிமாவோ பண்டாரநாயக் இலங்கையில் பிரதமராகப் பதவியேற்றார்.

1962ல் பயங்கர கலவரம் ஏற்பட்டது. சிறிமாவோவின் இரண்டாம் பதவிக் காலத்தின் போது அரசு சமவுடமைப் பொருளாதாரக் கொள்கைகளைக் கடைப்பிடித்தது. சோவியத் ஒன்றியம் மற்றும் சீனாவுடன் உறவுகளைப் பலப்படுத்திய அதேவேளை அணிசேராக் கொள்கையையும் கடைப்பிடித்தது. இதனால் 1971ல், இலங்கையில் மாக்சியப் புரட்சி ஏற்பட்டது. இது கடந்த கலவரம் போல் பெரிதாகுமோ என்று அஞ்சினர் ஆறுமுகம், தங்கம்மாள் தம்பதியினர். மூத்த மகள் குடும்பத்துடன், தங்கம்மாள் தன் கணவர் மற்றும் இளைய மகளுடன் கொச்சியில் இருந்து கப்பல் மூலம் ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.

அப்போது இலங்கைக்கும், ராமேஸ்வரத்திற்கும் கப்பல் போக்குவரத்து இருந்தது. ராமேஸ்வரம் வந்தவர்கள் அங்கிருந்து ரயில் மூலம் திருநெல்வேலி வந்தடைந்தனர். தங்கம்மாள் கணவர் ஆறுமுகத்தின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தின் அருகேயுள்ள துவரங்காடு என்ற கிராமம். திருநெல்வேலியை வந்தடைந்த தங்கம்மாள் குடும்பம் அங்கிருந்து பஸ்சில் துவரங்காடு செல்வதற்கு ஆரல்வாய்மொழி என்ற கிராமத்தை வந்தடைந்தனர். அதற்கு பின் பஸ் வசதி இல்லை. துவரங்காடுக்கு நடந்துதான் செல்ல வேண்டும்.

மூட்டை முடிச்சுடன் எல்லாரும் தங்களின் சொந்த கிராமத்திற்கு நடைப்பயணம் மேற்கொண்டனர். அப்போது போகும் வழியில் மிகவும் அழகான செழிப்பான செண்பகராமன்புதூர் கிராமத்தை கடந்து தான் இவர்களின் கிராமத்திற்கு செல்ல வேண்டும். தங்கம்மாள் கணவரின் மனதில் அந்த கிராமத்தை அடைந்த போது ஒரு யோசனை தோன்றியது. சொந்த கிராமத்தில் தன் உறவினர்களிடம் போய் வாழ வழி தேடி நிற்பதை விட, அழகான, பசுமை நிறைந்த இந்த கிராமத்திலேயே தங்கி விடலாம் என்று நினைத்தார். வயல் வரப்பு செழிப்புள்ள கிராமம் என்பதால் விவசாய நிலத்தில் கூலி வேலை செய்தாவது தங்களின் வாழ்க்கையை நகர்த்திடலாம் என்று ஒரு முடிவுக்கு வந்தார்.

தன் மனதில் எழுந்த எண்ணத்தை மனைவியிடம் சொல்ல, அவரும் ஆமோதிக்க தங்கம்மாள் தன் குடும்பத்துடன் செண்பகராமன்புதூர் கிராமத்தில் செட்டிலானார். அங்கு ஒரு வாடகை வீட்டில் குடியேறியது தங்கம்மாள் குடும்பம். ஆறுமுகம் விவசாய கூலி வேலையை செய்து வந்தார். இரண்டாவது மகளையும் சிற்ப வேலை செய்து வந்த ஒருவருக்கு மணமுடித்து வைத்தனர். ஆண்டுகள் மூன்று கடந்த நிலையில் தங்கம்மாளின் கணவர் ஆறுமுகம் உடல் நிலை குன்றிய காரணத்தால் இறந்தார். அவரின் வருமானம்தான் குடும்பத்தை காத்து வந்தது.

இப்போது அவரும் இல்லை வருமானமும் இல்லை. குடும்பம் வருமானம் இன்றி தவித்தது. தங்கம்மாவிற்கு என்ன செய்வதுன்னு தெரியல. அந்த சமயத்தில் பிறரிடம் வேலை செய்து வாழ்வதை விட, சுயமாக தனக்கு தெரிந்த தொழிலை செய்ய முன் வந்தார். வீடு, சமையல் அறை தவிர வெளியே வேறு எதுவும் அவருக்கு தெரியாது. சமையல் கலையை விட வேறு எந்த கலை தெரிந்து இருக்கணும். அதுவே நமக்கு ஒரு வருமானத்தை ஈட்டித் தரும் என்று முடிவு செய்தார் தங்கம்மாள். அரிசி மாவில் முறுக்கு செய்து அதை விற்று வருமானம் பார்க்கலாம் என்று திட்டமிட்டார்.

ஆனால் அவர் நினைத்தது போல் அது சுலபமாக இல்லை. காரணம் பெண் ஒருவர் வீதியில் இறங்கி டிரம்மில் முறுக்கு விற்ற போது பல ஏளன சொற்கள் மற்றும் வார்த்தைகளால் பலர் அவரை ஏளனப்படுத்தினர். காரணம் இவர் கணவரை இழந்தவர். அமங்களமாகத்தான் பலர் கருதினர். இவர் எதிரே வருவோர் எல்லாம் இவரை கண்டு ஒதுங்க ஆரம்பித்தனர். இவரிடம் முறுக்கு வாங்க கூட சிலர் தயங்கினர். இருப்பினும் அந்த ஏளனங்களை தனது வாழ்க்கையின் படிக்கட்டுகளாக நினைத்து எதையும், எவரையும் பொருட்படுத்தாமல் ஓயாமல் உழைத்தார்.

தான் சுட்ட முறுக்குகளை பேரன்கள், பேத்திகள் மூலம் விற்று பிழைப்பு நடத்தினார். தன்னிடம் வாங்க மறுத்த வர்கள் இவரின் பேரன்களிடம் வாங்க ஆரம்பித்தனர். ஒரு முறுக்கு ஐந்து பைசா என விற்று வந்தார். அதில் வந்த வருமானத்தில் தான் இவரின் குடும்பம் நகர்ந்தது. உணவு, உடை என அத்தியாவசிய தேவைக்கு போக மீதமுள்ள வற்றை சேமித்தும் வைத்தார். அரிசி டப்பா இவரின் சேமிப்பு வங்கியாக மாறியது. தான் சேமித்து வைத்த பணத்தில் பத்தாண்டுகள் கழித்து காலி மனை ஒன்றை வாங்கினார்.

சேமித்த காசு எல்லாம் மனைக்கு செலவானதால், மறுபடியும் அரிசி டப்பா வங்கி சேமிப்பு கணக்காக மாறியது. ஐந்து வருடம் கழித்து தான் வாங்கிய இடத்தில் ஒரு சின்ன ஓலை வீட்டினை கட்டினார் தங்கம்மாள். வாழ்க்கை செல்வ செழிப்பாக இல்லாவிட்டாலும், நடுத்தர வாழ்க்கைக்கு முறுக்கு விற்ற வருமானம் அவர்களை கொண்டு வந்தது. அவரது ஓயாத உழைப்பு, உடலுக்கு பலத்தையும் கொடுத்தது. அதன் காரணமாகத்தான் 104 வயது ஆன பின்னும் ஆரோக்கியமாக வலம் வருகிறார் தங்கம்மாள்.

இந்த தள்ளாத வயதிலும், தினமும் குறைந்த பட்சம் ஐம்பது முறுக்குகள் சுட்டு தருகிறார். இவரின் பேரன்கள்தான் இன்றும் விற்பனை செய்து வருகிறார்கள். ஐந்து பைசாவிற்கு விற்று வந்தவர் இப்போது ஐந்து ரூபாய்க்கு விற்கிறார். தன் கிராமத்தில் மட்டும் இல்லாமல் அக்கம் பக்கத்து கிராமத் திலும் தங்கம்மாளின் முறுக்கு பிரபலம். இவரை கிராமத்து மக்கள் எல்லாரும் செல்லமாக கொழும்பு ஆச்சி என்று தான் அழைக்கிறார்கள்.

- சு.இளம் கலைமாறன்
படங்கள் பூதை கே.சண்முகம்பிள்ளை

Tags : Ladies ,
× RELATED நர்சரி கார்டனில் தீ விபத்து